நன்றியில் செல்வம்

""பிறரால் நச்சப்படாதவனது செல்வம் ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது, நச்சுமரப் பழம் தமது ஆசையாலே தின்பார் உண்டாயின் அவரைக் கொல்லும் என்றது''
நன்றியில் செல்வம்

""நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று'' ( குறள்-1008)

""பிறரால் நச்சப்படாதவனது செல்வம் ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது, நச்சுமரப் பழம் தமது ஆசையாலே தின்பார் உண்டாயின் அவரைக் கொல்லும் என்றது'' - இவ்வாறு பண்டைய உரையாசிரியர்களுள் ஒருவரான மணக்குடவர் உரை எழுதியுள்ளார். 
இதை ஏற்று, பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய இருவரும் நன்றியில் செல்வத்துக்கு உவமையாக எந்தவொரு நச்சுமரத்தின் பெயரையும் கூறவில்லை. ""நடுவூரில் எட்டிமரம் பழுத்ததற்கு ஒக்கும்'' என்று பரிதியார் மரத்தின் பெயரைக் கூறியுள்ளார்.

""ஊழாயி னாரைக் களைந்திட்டு உதவாத
கீழாயி னாரைப் பெருக்குதல் யாழ்போலும்
தீஞ்சொல் மழலையாய்! தேனார் பலாக்குறைத்து
காஞ்சிரை நட்டு விடல்'' (பா.104)

எனும் கீழ்மக்கள் இயல்பு கூறும் பழமொழி நானூறு பாடலை அறிந்த காளிங்கர், ""பொதுப்பட நுகர்தற்குரிய மன்றினுள் நச்சுமரமாகிய காஞ்சிரை பெரிதும் பழுத்து நின்ற அத்தன்மைத்து'' என்று ஒரு மரத்தின் பெயரைக் கூறியுள்ளார்.
பிற்காலப் புலவர்கள் எந்தவொரு மரத்தின் பெயரையும் குறிப்பிடாமல் மணக்குடவரைப் பின்பற்றி பொதுப்படையாகவே "ஒரு நச்சு மரம்' என்றே உரை எழுதியுள்ளனர். 
"தின்றால் மரணத்தை ஏற்படுத்தும் காய், பழங்களைத் தரும் எட்டி, காஞ்சிரை மரங்கள் ஊர் நடுவே இருந்தால் மக்கள் வளர விடுவார்களா? வெட்டி அழித்துவிட மாட்டார்களா? மணக்குடவர் முதலானவர் கூறும் ""ஒரு நச்சு மரம்'' என்பதை இல்பொருள் உவமை என்று கொள்ளலாமா? திருவள்ளுவர் கூறும் நச்சு மரம்தான் எது? - இவ்வாறு ஐயங்கள் எழலாம்.
இத்தகைய ஐயங்களை நாலடியாரின் "நன்றியில் செல்வம்' எனும் 261-ஆவது பாடல் போக்குகிறது.

""அருகிலாது ஆகிப் பலபழுத்த கண்ணும்
பொரிதான் விளவினை வாவல் குறுகா
பெரிது அ ணியர் ஆயினும் பீடிலார் செல்வம்
கருதும் கடப்பட்ட தன்று''

"தூர்பருத்த விளாமரத்தில் மிகுதியாகப் பழுத்துள்ள பழங்களைக் கண்டும் தம் பசியைப் போக்கிக்கொள்ள வாவல் (வெளவால்) அதன் அருகில் செல்லாது (குறிப்பு: விளாம்பழத்தின் மணமும் சுவையும் வெளவாலுக்கு ஒவ்வாது). அதுபோலப் பெருந்தன்மை இல்லாதவரிடம் இருக்கும் செல்வமானது தம் வறுமையைப் போக்கும் கடமை உடையது அல்ல என்று எண்ணி அதனருகில் வறியவர் எவரும் செல்லார்' - இது இப்பாடலின் கருத்து. இந்தப் பாடலால் இந்த நச்சு மரம் ஊர் நடுவில் உள்ளது என அறிய முடிகிறது. ஆயினும் இதற்கு மேலும் தெளிவு தேவைப்படுகிறது.
யாப்பிலக்கணத்தில் அசையும் சீரும் காணும்போது தேமா, தேமாங்காய், தேமாங்கனி என்றும்; கூவிளம், கூவிளங்காய், கூவிளங்கனி என்றும் குறியீட்டு வாய்ப்பாடுகளைத் தந்துள்ளனர். தமிழகத்தின் விளைபொருளான மாவும், விளவும் கருத்து விளக்கத்துக்குரிய எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.
விளாம்பழத்தை யானை உண்டால் அது ஜீரணம் ஆகாமல் சாணத்தில் (லத்தி) ஓட்டுடன் கூடிய முழுப் பழமாகவே வெளியேவந்து விழுந்துவிடும். இதைக் குறிக்கும் ""யானை உண்ட விளாம்பழம் போல'' எனும் பழமொழியும் உண்டு.
செண்பகப்பூ மக்களை மயக்கும் மணமுடைய அழகிய மலர். ஆனால், இம்மலரை வண்டுகள் மொய்ப்பதில்லை. காரணம், இம்மலர் பிலிற்றும் தேன் வண்டுகளுக்கு ஆகாது. விளாம்பழம் வெளவாலுக்கும் யானைக்கும் ஒவ்வாது. ஆனால், இவை மக்களுக்கு உகந்தன. அதனால், விளாம்பழம் போன்றது நன்றியில் செல்வம் (பீடிலார் செல்வம்). 
எக்காலத்தும் எல்லா உயிரினங்களுக்கும் பயன்தரும் ஊருணி, ஏதோ ஒரு பருவ காலத்தில் மட்டும் பயன்தரும் பழமரம், நோயுற்றாருக்கு மட்டும் சிலபோழ்து பயன்தரும் மருந்து மரம் இவற்றை உவமைகளாக "ஒப்புரவு அறிதலில்' வள்ளுவர் காட்டிய சால்பும், அவற்றின் கருத்தாழமும் மிகமிக நுட்பமாக ஓர்ந்து உணர வேண்டியவை.
அதுபோலவே, "நன்றியில் செல்வ'த்துக்குக் குறியீடாக "நச்சு மரம்' ஒன்றை உவமையாக்கினார் திருவள்ளுவர். எதனையும் சுடு சொல்லால் சுட்டிக்காட்ட விரும்பாத சமணரான மணக்குடவரும் தம் உரையில் வெறுமனே "ஒரு நச்சுமரம்' என எழுதி நம்மை உய்த்துணர வைத்தார். இருப்பினும், மற்றொரு சமண முனிவர், காட்டிய நாலடி நானூறு பாடலை நாம் மறந்தவர் ஆகாமல் வெளவாலுக்கும் யானைக்கும் ஒவ்வாத விளாம்பழத்தை "நன்றியில் செல்வ'த்திற்கு எடுத்துக்காட்டாக வழங்கலாம் அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com