மறுவாசிப்பில் சங்கக் கவிதைகள்

சங்கக் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும், அக்கவிதைகள் வாசிப்பவர்களை ஏமாற்றாமல் காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.
மறுவாசிப்பில் சங்கக் கவிதைகள்

சங்கக் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும், அக்கவிதைகள் வாசிப்பவர்களை ஏமாற்றாமல் காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். 20ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற எந்தவொரு கோட்பாட்டையும் சங்கக் கவிதை கொண்டு விளக்க முடியும். இத்தன்மைகள்தாம் அக்கவிதைகளின் சிறப்பு. குறிப்பாக, சங்கப் பெண் கவிதைகள் காலந்தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்பவை. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுகிறது. அவன் மனைவி பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிகிறாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் அவள், தன் கணவன் இறந்தபிறகு 
கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே விரும்புவதாகப் பின்வரும் பாடலில் 
கூறுகிறாள்.

"பல்சான் றீரே! பல்சான் றீரே!
"செல்'கெனச் சொல்லாது, "ஒழி'கென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிதாகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓரற்றே!' 
(புறம்:246)

பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அதனுடன் வெள்ளை நிறமுள்ள எள்ளின் துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களாலான படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள் என்று இப்பாடலின் பொருள் நீள்கிறது. கணவன் மீது கொண்ட அன்பின் காரணமாகவே பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறத் துணிந்தாள் என்று அவள் செயலுக்குப் புனிதம் கற்பிக்கப்பட்டது. அப்படித்தான் இப்பாடலுக்கான பொருள் 
இன்றளவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இது 
பெண்களை அடக்கிவைக்க ஆண்கள் கடைப்பிடித்த உத்திகளுள் ஒன்று.
இப்பாடலுக்கு உரை எழுதிய அனைவரும் ஆண்களாக இருந்தது இச்செயலுக்கு வசதியாக அமைந்துவிட்டது. பெருங்கோப்பெண்டின் இப்பாடல் தரும் தொனிப்பொருள் தீவிர வாசிப்புக்குரியது. கைம்மை நோன்புடன் வாழ்வதைவிட உடன்கட்டை ஏறிவிடுவது உன்னதம் என்ற பொருளில்தான் இப்பாடலை அணுக வேண்டும். இந்த விமர்சனம்தான் பெருங்கோப்பெண்டு இச்சமூக சடங்குகள்மீது வைக்கும் விமர்சனம். 
தாயங்கண்ணியார் என்ற பெண்பாற் புலவரின் பாடலையும் (புறம்:250) பெருங்கோப்பெண்டு பாடலுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். கணவன் இறந்து விடுகிறான். அவன் மனைவியின் தலைமயிர் நீக்கப்படுகிறது; அப்பெண்ணின் கைகளை அழகுபடுத்திய வளையல் களையப்படுகிறது. எந்தச் சுவையுமற்ற அல்லி அரிசி உணவை மட்டுமே உட்கொண்டு கைம்மை நோன்பிருக்கிறாள். கணவன் இருக்கும்போது வீதி வழியே சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி, நாசியைக் கூர்மைபடுத்தச் செய்யும் சுவைமிக்க உணவு வகைகள் அந்த வீட்டில் சமைக்கப்பட்டன. இரவலர்க்கும் சேர்த்துப் பரிமாறப்பட்டன. வீட்டின் முன்னே அனைவரும் தங்கிச் செல்லும் குளிர்ச்சிமிக்க பந்தல் போடப்பட்டிருந்தது. ஆனால், இன்று அந்த வீடு வெறுமையால் சூழப்பட்டிருக்கிறது. சுடுகாடு சென்ற கணவன் எல்லாவற்றையும் உடன்கொண்டு சென்றுவிட்டான் என்று பாடுகிறாள். மாறோகத்து நப்பசலையாரும், "சிறிய வெள்ளை அல்லியின் அரிசியை உண்ணும் கைம்பெண்போல காலமெல்லாம் அத்
தலைவனை நினைந்து உயிர்வாழ்தல் கடினமானது'
(புறம்:421) என்று பாடுகிறார்.
இம்மூன்று பாடல்களும் "சடங்கு' என்ற பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை நுட்பமாக முன்வைக்கிறது. ஆனால், இக்கவிதைகளின் மீது பெண்களைப் புனிதப்படுத்தும் தட்டையான வாசிப்புதான் அதிகமாக நிகழ்த்தப்படுகிறது. குரங்குகூட கைம்மை நோன்பைக் கடைப்பிடிப்பதை வெறுத்து, மலையில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதாகக் கடுந்தோட் கரவீரனார் 
எழுதிய குறுந்தொகைப் பாடல் (குறுந்.69) 
கூறுகிறது. 
பெண்கள் மீது சடங்கு என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுள் ஒன்றுதான் கைம்மை நோன்பு. இந்நோன்பைக் கடைப்பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதைவிட, கணவனோடு ஈமத்தீயில் இறந்துவிடுவது உத்தமம் என்று பெண்கள் பலரும் கருதியிருப்பதைத்தான் சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன. இந்தக் கோணத்தில்தான் இக்கவிதைகளை வாசிக்க வேண்டும். இக்கவிதைகளும் அந்த நோக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com