இந்த வார கலாரசிகன்

திருமூலர் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை நெல்லையில் அரங்கேற்ற வேண்டும் என்பது என்னுடைய அவாவாக இருந்தது. பருவமழை தொடங்கிவிட்ட நிலையில்
இந்த வார கலாரசிகன்

திருமூலர் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை நெல்லையில் அரங்கேற்ற வேண்டும் என்பது என்னுடைய அவாவாக இருந்தது. பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், நெல்லையில் விழா நடத்தினால் இலக்கிய ஆர்வலர்களான "தினமணி' வாசகர்களும், கவிஞரின் ரசிகர்களும் பங்கு பெறுவதில் இடையூறுகள் இருக்கும் என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறோம்.
நெல்லைக்குப் பதிலாக திருமூலர் குறித்த கட்டுரை இந்த முறையும் சென்னையிலேயே அரங்கேற்றப்பட இருக்கிறது. எங்கே, எப்போது என்கிற தகவல்களை அடுத்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பங்கு பெறுவதற்குத் தயாராக இருங்கள்.

என்னை வியப்பில் ஆழ்த்தும் மனிதர்கள் யார், எவர் என்று பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயமாக இடம்பெறும் பெயர்களில் ஒன்று நடிகர் சிவகுமார். பன்முகப் பரிமாணம் கொண்ட அந்த ஆளுமையின் ஒவ்வொரு முகத்துக்கும் தனித்துவமும், தனிச்சிறப்பும் உண்டு.
கோவை மாவட்டம் காசிகவுண்டன்புதூரில் பிறந்து, ஏழு ஆண்டுகள் சென்னையில் ஓவியம் பயின்று, நாற்பது ஆண்டுகள் நாடகம், திரைப்படம், சின்னத்திரை என்று வெற்றிகரமாக வலம் வந்து, இப்போது எழுத்தாளராகவும், இலக்கிய உரையாளராகவும் தடம் பதித்திருக்கும் நடிகர் சிவகுமாருடனான எனது பரிச்சயம் ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டிருக்கிறது. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான "சஷ்டி விரதம்' படப்பிடிப்பில் முதன்முறையாக அவரை சந்தித்தபோது, என்னிடம் காட்டிய அதே நட்பையும், பாசத்தையும் சற்றும் குறையாமல் இன்றுவரை தொடரும் அவரது பண்பை நினைத்து நான் வியக்காத நாளே கிடையாது.
சிவகுமாரை ஓவியராக, நடிகராக, பேச்சாளராக, இலக்கியவாதியாக எல்லோருக்கும் தெரியும். அதற்கு மேலே ஓர் அற்புதமான மனிதராகவும் திகழும் அவரது குணாதிசயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் எழுத்தாளர் அமுதவன் வெற்றியடைந்திருக்கிறார். அவரது, "சிவகுமார் என்னும் மானுடன்' என்கிற கட்டுரைகளின் தொகுப்பை மூன்று, நான்கு முறை நான் படித்துவிட்டேன். நேற்று முன்தினம் அவரது பிறந்த தினம் என்பது நினைவுக்கு வந்ததும், அந்தப் புத்தகத்தை இன்னொரு முறை எடுத்துப் புரட்டிப் பார்த்தால் பக்கத்துக்குப் பக்கம் நான் அடிக்கோடிட்டு வைத்திருக்கும் பதிவுகள் வியப்பை ஏற்படுத்தின.
சிவகுமாருடன் நெருங்கிப் பழகிய அவருக்குத் தெரிந்த பல்வேறு ஆளுமைகள், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் அவரைப் பற்றிக் கூறியிருக்கும் பதிவுகளின் தொகுப்புதான் அமுதவனின் "சிவகுமார் எனும் மானுடன்'.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அருட்செல்வர் நா.மகாலிங்கம், இயக்குநர்கள் ஏ.சி. திருலோசந்தர், கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் என்று தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் அனைவரும் சிவகுமார் குறித்து செய்திருக்கும் பதிவுகள் அந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
ஆனாலும்தான் இந்த மனிதருக்கு என்னவொரு துணிவு, என்னவொரு நேர்மை, என்னவொரு பண்பு. என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தத் தொகுப்பின் முதல் கட்டுரை. இத்தனை பெரிய ஆளுமைகள் தன்னைக் குறித்து செய்திருக்கும் பதிவுகளைத்தானே, ஒருவர் அந்தத் தொகுப்பில் முதலில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும்? ஆனால், தனது சகோதரி சுப்புலெட்சுமி, உறவினர் குமரேசன், அக்காள் மகள் சின்னலெட்சுமி ஆகியோரின் கட்டுரைகளுடன்தான் "சிவகுமார் எனும் மானுடன்' தொகுப்பு தொடங்குகிறது.
"எனக்கு வரும் எந்தப் புகழும், பணமும் என் இயல்பை மாற்றிவிடக்கூடாது. என் நிம்மதியைக் குலைத்துவிடக் கூடாது. இதயத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அடிப்படை மனிதப் பண்புகளைத் தகர்த்துவிடக் கூடாது' என்று உளப்பூர்வமாக சிவகுமார் எனும் மானுடன் விழைகிறார் என்பதுதான் அந்த மனிதனின் வெற்றியின் ரகசியம்.
நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டிருப்பது போல, "சில பிரபலங்களைத் தூரத்திலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் ரசிக்கலாம். அருகில் நெருங்கிப் பார்க்கும்போதுதான் அவர்களின் மறுபக்கம் தெரியும். சிவகுமாரைப் பொருத்தவரை நெருங்கிப் பார்க்கும்போது இவர் மீதான மரியாதையும், மதிப்பும் முன்பைவிட பல மடங்கு அதிகரிக்கும். கூடவே இவர் மீதான ரசிப்புத்தன்மையும் அதிகமாகும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
சிவகுமார் எனும் மானுடன்' புத்தகத்தை இனியும் பலமுறை நான் படிப்பேன். அடிக்கோடிட்டு வைத்திருக்கும் பகுதிகள் எனக்கு வழிகாட்டியாக அமையும்.

சென்னை கோவிலம்பாக்கத்தை அடுத்த நன்மங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் க. மணிமேகலை, கற்பித்தல் என்பதை தமக்குக் கிடைத்த பணி வாய்ப்பாக மட்டும் கருதாமல், கல்வித்தொண்டு ஆற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி பணியாற்றுபவர் என்பது "தமிழ்க் கல்விக்கு ஊடகங்கள்' என்கிற புத்தகத்தின் அணிந்துரையில் முனைவர் முகிலை இராசபாண்டியன் செய்திருக்கும் பதிவு. விமர்சனத்திற்கு வந்திருந்த அந்தப் புத்தகத்தைப் படித்தபோது அவரது கூற்று முற்றிலும் உண்மை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
தமிழ்க்கல்வி வரலாறு, தமிழ்க்கல்வி வளர்ச்சியில் இதழ்களின் பங்கு, வானொலியின் பங்கு, தொலைக்காட்சியின் பங்கு, திரைப்படங்களின் பங்கு, கணினியின் பங்கு, இணையத்தின் பங்கு என்று தமிழ்க்கல்வி வரலாற்றை அலசி ஆராய்ந்து கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் கவிஞர் க.மணிமேகலை. இவரது கடும் உழைப்பில் திரட்டப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வருங்கால ஆய்வுகளுக்கு பயன்படும் ஆவணப் பதிவுகள். 
ஊடகங்கள் குறித்த விவரங்களுடன் நின்றுவிடாமல், இன்றைய தலைமுறை இணையதளக் கல்வி, குறும்படங்களின் பங்களிப்பு உள்பட அனைத்தையும் திரட்டித் தொகுத்திருக்கும் கவிஞர் மணிமேகலையின் முயற்சி பாராட்டுக்குரியது. 


கட்செவி அஞ்சலில் பதிவிடப்பட்டிருந்த ஹைக்கூக் கவிதை இது.

ஓவியம்
மொழியைப்
புறக்கணித்த
கவிதை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com