கடைவார் கை போல...

வெண்பா என்றால் நளவெண்பா என்று கூறும் அளவுக்கு உவமைகளும் சொற்சுவையும் நிரம்பி, படிப்போர் கருத்தைக் கவரும் அளவுக்கும் தாமதமின்றி புரியும் அளவுக்கும் வெண்பாவை எழுதியுள்ளார் புகழேந்தி.
கடைவார் கை போல...

வெண்பா என்றால் நளவெண்பா என்று கூறும் அளவுக்கு உவமைகளும் சொற்சுவையும் நிரம்பி, படிப்போர் கருத்தைக் கவரும் அளவுக்கும் தாமதமின்றி புரியும் அளவுக்கும் வெண்பாவை எழுதியுள்ளார் புகழேந்தி.
"ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்ற புத்தரின் வாக்கு மெய்ப்பிப்பதற்கிணங்க சீதை பொய் மானை விரும்பி ராவணனிடத்தில் சிறைப்பட்டாள். அன்னத்தின் மீது ஆசைப்பட்டு அல்லலுற்றாள் தமயந்தி.
தமயந்தியின் வேண்டுகோளுக்கிணங்க அன்னத்தைப் பிடிக்க நளன் தன் ஆடையை வீச, அன்னம் ஆடையுடன் பறந்தது. நளனும் தமயந்தியும் ஒரே ஆடையுடன் இருப்பதை புகழேந்தி விரசமில்லாமல் விரும்பிப் படிக்கும்படி எழுதியுள்ளார்.
இருவருக்கும் இதுவரை உயிர் ஒன்றாக இருந்தது; இப்போது உடையும் ஒன்றானது. வினையின் கொடுமையால் அவளைப் பிரிய முற்பட்டான் நளன். வாளை எடுத்து இருவரையும் பிணைத்துள்ள ஆடையைக் கிழித்தான். ஆடை மட்டும் அறுபடவில்லை; தன் உயிரையும் கிழித்து அறுத்தது போல் திகைக்கும் நளனைப் பற்றி பதைபதைக்கிறார் புலவர்.

"ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக
முற்றும் அன்மை முதலோடும் - பற்றி
அரிந்தான் அரிந்திட்டவள் நிலைமை நெஞ்சில்
தெரிந்தான் இருந்தான் திகைத்து (கலித்தொடர் 282)

பின் தமயந்தியைப் பிரிந்து செல்ல நேரிடும்போது துடிக்கிறான்; தவிக்கிறான். அவனை அவன் திடீரென்று பிரியவில்லை. போகலாம் என்று எண்ண, பின் போவதற்குத் தயங்குகின்றான். போகலாமென்றும், வேண்டாமென்றும் தவிக்கும் மனப்போராட்டத்தை சிறந்த உவமை மூலமாகக் கூறி நம் சிந்தையை மகிழ்விக்கிறார் புகழேந்தி.

ஆயர் குல ஆய்ச்சியர் தயிர் கடையும்போது அவர்களுடைய கைகள் சென்று சென்று திரும்புவது போல், நளனது மனம் தமயந்தியிடம் சென்று சென்று மீள்வதை எப்படிப் பாடியுள்ளார் பாருங்கள்."போய் ஒருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேரும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்
கடைவார் தம் கை போல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம் ( கலித்தொடர் 283)
வெண்பா பாடுவதில் புகழேந்தி வல்லவர் என்பதற்கு இதுவே சான்றாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com