தமிழில் "மீ ' உயர்வு உவமை

இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும். 

இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும். 
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)

இலக்கியங்களில் அன்ன, ஆங்க, ஆங்கு, நிகர்ப்ப முதலிய சொற்கள் உவமைப் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அன்ன, ஒப்ப, போல் நிகர்ப்ப ஆகியவை பெயரைக்கொண்டு முடியும். பால் அன்ன வெண்மை, பால்போல வெண்மை, பால் நிகர்ப்ப வெண்மை என்று சொல்லலாம். ஆனால், ஆங்கு என்பது வினைச்சொல் குறிப்பாகப் பெயரெச்சத்தை ஏற்று வினையைக்கொண்டே முடியும். சொன்னாங்கு (சொன்ன ஆங்கு) செய்தார், பேசியாங்கு பணம் கொடுத்தார் என்றுதான் வழங்கப்படும்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக இன்பம் இல்லை என்றாற்போல உயிர்களிடத்து அருள் இல்லாதவருக்கு மேல் உலக இன்பம் இல்லை என்பதில் ஆங்கு உவமைப் பொருளில் வந்துள்ளது.
இலக்கியத்தில் உறழ, நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவையும் உவம உருபாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றில் உறழ் என்பது மாறுபாடு பற்றி மட்டும் காட்டுவது. "முழவு உறழ் திணி தோள்' (முழவினைப் போன்று திண்ணிய தோள்) எனும் போது உவமையோடு ஒப்புமையை அழுத்திக் கூறுகிற நிலை அமைகிறது. 
நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவை கருத்தாடல் நோக்கில் உவமையோடு பேசுபவரின் சில உணர்வுகளைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். "நடுங்க படங்கெழு நாக நடுங்கும் அல்குல்' படம் எடுத்து ஆடும் பாம்பு ஒத்த அல்குல் என்ற உவமைப் பொருளை மட்டும் உணர்த்தாமல் அல்குலின் சிறப்பு மிகைப்படுத்தப்பட்டதன் பிரதிபலிப்பாக நடுங்கும் என்பது உவம உருபு போலக் கையாளப்பட்டதாகக் கொள்ளலாம். கடுப்ப (கடுக்கும்) "கார்மழை முழக்கு இசை கடுக்கும் முனை' (கார் மேகங்களின் இடி முழக்கம்போல ஒலிக்கும் போர் முனை (அகநா.14:20-21). 
எள்ள - எள்ளல் - இகழ்தல். "கோங்கின் அவிர்முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை' (சிறுபா.25-26) கோங்கின் முகையை இகழ்ந்து அணிகலன்களுக்கு இடையே உள்ள முலை). இங்கு இகழ்தல் பொருள் தெளிவாக உள்ளது. உவமேயத்தை நோக்க உவமை இழிந்த பொருள் என்று கருதப்படுகிறது.
வெல்ல - வெல்லுதல் - வெற்றிபெறல். "வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய்க் கூந்தல்' (ஐங்குறு. 324.45 வேங்கைப்பூவை வென்ற தேமலை உடைய தேன்சொட்டும் கூந்தல்). எனவே, உவமையை உவமானம் உயர்ந்த பொருளாகக் கருதலாம். 
இங்கும் அவற்றின் அகராதிப் பொருள், உவமேயப் பொருள் உயர்ந்தவை என்பதை உணர்த்துவதால் பொருண்மையியல் நோக்கில் ஒரு புது வகை அதாவது, மீஉயர் உவமை என்று கருதலாம். அதன் சிறப்பை அறிந்துகொள்ள ஆங்கில மொழியின் உவமை பற்றிய அறிவு பயன்படும்.
ஆங்கில மொழியில் பெயரடை (adjective) பகுதியாய் உவமை அமையும். அங்கு ஒப்பு (பாஸிட்டிவ் - comparative), உறழ்வு (கம்பேரட்டிவ் - ஸ்ரீர்ம்ல்ஹழ்ஹற்ண்ஸ்ங்) மீ உயர்வு (சூப்பர்லேட்டிவ் - superlative) என்று மூன்று நிலையில் உவமை வேறுபடுத்தப்படுகிறது. டால் (taller.... than) இர் விகுதி சேர்த்தால் டாலர்... தென் (talllest) உறழ் உவமை. டாலஸ்டு
(ற்ஹப்ப்ப்ங்ள்ற்) மீ உயர்வு உவமை ஆகும். அங்கு மீ உயர்வு என்பது உருபு மூலம் உணர்த்தப்படுகிறது. மாறாகத் தமிழில் சொல் மூலம் அந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.
தமிழில் மீ உயர்வு உவமை என்ற கருத்து வெல்ல, வியப்ப, மருள போன்றவை உவம உருபுகளாகக் கையாளும்போது வெளிப்படுவதாகக் கொள்ளலாம். அது இன்னொரு நிலையிலும் உறுதியாவது அறியத் தகுந்தது. அன்ன, ஆங்கு என்பது சங்க இலக்கியங்களில் உவமை உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது "அ' என்ற சேய்மைச் சுட்டு அடியாகப் பிறந்த சொல் ஆகும்.
தமிழில் அ, இ, உ ஆகிய மூன்று வகை சுட்டுகள் உள்ளன. அவை முறையே சேய்மை, அண்மை, மிக நெடுங்தூரம் என்ற பொருள்படும். இங்கு என்பது பேசுவோர் இடத்தில் உள்ளது என்று பொருள். அங்கு என்று சொன்னால் பேசுவோர் இடத்தைத் தாண்டிய தூரத்தில் உள்ளது என்று பொருள். உது, ஊங்கு என்று சொன்னால் வெகுதூரத்தில் இருக்கிறது என்று பொருள். உகரச் சுட்டு தற்கால வழக்கில் இல்லை. பழங்கால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி ஆங்கு என்பது சேய்மை (தூரம்) உணர்த்தும் அகரச்சுட்டு அடிப்படையாகவும், ஊங்கு வெகுதூரம் உகரச் சுட்டு அடிப்படையாகவும் உண்டான சொற்கள் ஆகும். 
திருக்குறளில் ஊங்கு என்பதும் உவமை உருபாகக் கையாளப்பட்டுள்ளது. 31, 32,122,460,644,1065 ஆகிய குறள்களில் ஊங்கு உவமையாக அமைந்துள்ளது. ஊங்கு என்பது மிக உயர்ந்த பொருளை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் உள்ளது போல் மீஉயர்வு உவமையாகக் கருதலாம். அதாவது வெல்ல, வியப்ப, ஊங்கு முதலியவை தமிழில் மீ உயர்வு உவமைச் சொற்களாகக் கருதலாம்.
பொருள் வேறுபாடு உள்ள சொற்களை உவம உருபுகளாகக் கையாளும்போது, உவமைகளுக்குள் நுண்ணிய பொருள் மாறுபாடு அமைந்திருப்பது கவனத்துக்கு உரியது. அந்த நிலையில் ஒப்பு, உறழ்வு என்று இரண்டு வகையோடு மீ உயர்வு என்ற புதிய வகையும் கொள்ள இடம்கொடுக்கிறது.
உண்மையில் மீ தாழ்வும் உண்டு. அவனைவிடக் கொடியவன் யாரும் இல்லை என்று கூறுவது எடுத்துக்காட்டாக அமையும். ஒப்பு, உறழ்வு என்பதில் உயர்வு-தாழ்வு என்ற குறிப்பு இல்லை. அதனால் மீ உயர்வு - தாழ்வு என்ற மாறுபாடு செய்ய முடிவதால் அவற்றை மீநிலை என்று பொதுவாகக் கொள்ளலாம். எனவே, தமிழில் சொல் நிலையில் உவம உருபுகள் ஒப்பு, உறழ்வு, மீ நிலை என்று வகைப்படுத்துவது நுண்ணிய நிலையில் பொருள் வேறுபாடு செய்வதாக அமையும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com