ஸ்ரீரெங்கம் ரெங்கநாயகியின் இரு நூல்கள்

திருச்சி, திருவரங்கத்தைச் சேர்ந்த ரெங்கநாயகி என்பவர் தம் பெயருடன் ஊர்ப் பெயரையும் இணைத்துக் கொண்டவர். 1908 முதல் 1937 வரையிலான காலங்களில், நூற்றெட்டுத் திருப்பதி கீர்த்தனை, துளசி மகாத்மியக் கீர்த்தனை
ஸ்ரீரெங்கம் ரெங்கநாயகியின் இரு நூல்கள்

திருச்சி, திருவரங்கத்தைச் சேர்ந்த ரெங்கநாயகி என்பவர் தம் பெயருடன் ஊர்ப் பெயரையும் இணைத்துக் கொண்டவர். 1908 முதல் 1937 வரையிலான காலங்களில், நூற்றெட்டுத் திருப்பதி கீர்த்தனை, துளசி மகாத்மியக் கீர்த்தனை, தொண்டரடிப் பொடியாழ்வார் சரித்திரக் கீர்த்தனை, ஸ்ரீரெங்கநாதன் பள்ளியறைக் கீர்த்தனை, வத்சலை கல்யாணக் கும்மி, ருக்மணி கல்யாணக்கும்மி, ஜானகி ஸ்வயம்வரக் கும்மி, கோதை பரிணயக் கும்மி, கோபிகாவஸ்திர ஆபரணக் கும்மி, எக்ஞய பத்தினிகள் சரித்திரக் கும்மி, நம்மாழ்வார் சரித்திரக் கும்மி, திருமங்கை ஆழ்வார் சரித்திரக்கும்மி, தேரெழுந்தூர் ஸ்வாமி கும்மி, ஸ்ரீரெங்கம் வழிநடைக்கும்மி, நெளகா சரித்திரக்கும்மி என்னும் காக்ஷியோடக் கும்மி, ஸத்சம்பிரதாய பஜனை பத்ததி, சம்பந்தி ஏசல் ஆகிய பதினேழு நூல்களை இப்பெண்மணி எழுதியுள்ளார். இன்று கிடைப்பவை எட்டு நூல்கள் மட்டுமே. அவற்றுள் துளசி மகாத்மியக் கீர்த்தனை, சம்பந்தி மாப்பிள்ளை ஏசல் ஆகிய இரு நூல்களைப் பற்றி அறிவோம். எதுகை, மோனை கற்றுக் கவிபாடத் தெரிந்தவர் இந்நூலாசிரியர் என்பதற்கு நூலில் வரும் விருத்தப்பாக்களே சான்றுகளாகும். 

துளசி மகாத்மியக் கீர்த்தனை:

"துளசி மகாத்மியக் கீர்த்தனை' என்ற நூல், ஸ்ரீரங்கம் ஸ்ரீ வாணி விலாஸ் அச்சகத்தில், 1908ஆம் ஆண்டு, 5 அணா விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் துளசியின் பெருமை பேசப்பெறுகிறது. பொதுவாகத் துளசி சளி, இருமல், வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல் எனப் பல நோய்களுக்கும் உகந்தது. இறைவனோடு சேர்த்துத் துளசியின் பெருமை சொல்லப் பெறும்போது, மக்களால் துளசி ஏற்றுக்கொள்ளப் பெறுகிறது. அவ்வகையில் துளசியின் சிறப்பைக் கீர்த்தனையாக இராகம், தாளம், பல்லவி, சரணம் என்று இசைமை கலந்து பாகவதக் கதையாக (கண்ணன் ருக்மிணி, சத்தியபாமை, நாரதர்) தந்திருக்கிறார் ரெங்கநாயகி. விருத்தப் பாடல்கள் 69, கீர்த்தனைகள் 69 என்று திட்டமிட்டு எழுதி வெளியிட்டுள்ளார்.

சம்பந்தி மாப்பிள்ளை ஏசல்: 

இந்நூல், 1937இல் இயற்றப் பெற்றுள்ளது. இது எட்டுப் பக்கங்களை மட்டும் கொண்ட சிறுநூல். திருமணத்தில் சம்பந்தி மாப்பிள்ளையைக் கேலி செய்து ஏசி மகிழ்ந்து பாடுவதற்காக உருவாக்கப் பெற்றுள்ளது. மெட்டுப் போட்டு இசையுடன் பாடத் தகுந்த அமைப்பைக் கொண்டது.

தமிழர், பொதுவாக நகைச்சுவை உணர்வு குறைவாக உடையோர் என்ற கருத்து ஐரோப்பியரிடையே உண்டு. அக்கருத்து எத்துணைப் பெருந்தவறு என்பதை, தமிழ் நாட்டில் மரபுவழி நிகழும் திருமண நிகழ்வுகள் உறுதி செய்யும். மண நிகழ்வை ஒட்டி எளிய சிற்றூர்ப்புற மக்களிடமும் புழங்கும் நலுங்குப் பாடல்களும், ஏசல் பாடல்களும், இன்னபிற துணை நிகழ்வுகளும் இக்கருத்தை வலியுறுத்தும். 

பெண்வீட்டார் மாப்பிள்ளையையும், அவர்தம் தோற்றத்தையும், உடை, உணவு முதலானவற்றையும் சிரிக்கச் சிரிக்கக் கேலியாகப் பாடுவதும் பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பழித்துக் கேலி செய்வதும், இப்பாடலில் இடம்பெறும். பழிப்புரைகளை வெறும் கேலியாக எடுத்துக்கொள்ளும் பெருந்தன்மை இங்கே கொள்ளப்பெறும்.

பெண்களின் பங்கு:

திருமணத்தில் நலுங்கு பாடுவது பெண்களின் வழக்கம். இன்றும் நாட்டுப்புறங்களில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் ஒருவர் பெண்ணை வசைபாடிக் கேலி செய்வதும், பெண் வீட்டிலுள்ள ஒரு பெண் மாப்பிள்ளையையும் அவர் வீட்டிலுள்ளாரையும் கேலி செய்து பாடல் பாடுவதும் வழக்கம். அவ்வாறு கேலி செய்து பாடும் பாடலே, சம்பந்தி மாப்பிள்ளை ஏசல் பாடல் ஆகும். இது நாட்டுப்புறப் பாடல் மரபைத் தழுவி எழுதப் பெற்றுள்ளது.

உருவத்தைக் கேலி செய்து பாடுவது:

அழகான தோற்றம் உடைய சம்பந்தியாயினும் அவரை அழகில்லாதவராக இட்டுக்கட்டிப் பாடுதலே நாட்டுப்புற பொது மரபு. இந்நூலில் "சம்பந்தி' என்பது "சம்மந்தி' என்றே குறிக்கப்பட்டுள்ளது.

என்னடி சம்மந்தி இத்தனை வடிவு அழகாய்
என்னமாய் உன்னை அயன் சிருஷ்டித்தானோ?
சிங்கம்போல் பல்லழகும் 
சிறுத்தைபோல் மூக்கழகும்
செங்குரங்கு போலுந்தன் முகத்தினழகும்
ஒட்டகம்போல் உந்தனுட வயிறினழகும்
காட்டு ஆனை போல் உந்தன் 
கண்ணழகும் நிறத்தழகும்
காண்டாமிருகம் போல் உன்வடிவின் அழகும்
பன்றி பெரிச்சாளி போல் உந்தன் பார்வை அழகும்
பாழுங்காட்டுநரி கழுதைபோல் குரலின் அழகும்
உடும்பு கரடி போல் உன்னுடைய உடம்பின் அழகும்
உனக்குள்ள குறைவு ஒரு வாலு தாண்டி!

கல்லாத மாப்பிள்ளையின்
மூடத்தனத்தைச் சுட்டுதல்:
கல்வியின் சிறப்பையும், கல்லாமையின் இழிவையும் விளக்குகிறது. மாப்பிள்ளை கற்கவில்லை; எந்த மொழியும் தெரியாது என்று பழிக்கிறது.

ஏட்டிலே எழுத்தாணி நாட்டத் தெரியாது
இதமான வார்த்தைகள் பேசத் தெரியாது
கச்சேரி போய்வரக் கணக்குத் தெரியாது

என்று மாப்பிள்ளையின் தெரியாமைகளை இனம் பிரித்துச் சொல்லும் அதே நேரத்தில், மாப்பிள்ளைக்குத் தெரியும் சிலவற்றையும் கூறியுள்ளார். 

எருமைக் கிடாவை மேய்க்கத் தெரியும்
பாத்திக்குத் தண்ணி இரைக்கத் தெரியும்
வேலிக்கு முள்ளு அடைக்கத் தெரியும்
வெட்டிய மரத்தை அடுக்கத் தெரியும்
பொட்டியுடன் பொடி போடத் தெரியும்
பொய்யுடன் கோள்கள் சொல்லத் தெரியும்
பெண்டுகள் நடுவினில் பேசத் தெரியும்
பொறாமை கொண்டு மிக ஏசத் தெரியும் 

பொடி போடுதல், கோள் உரைத்தல், பெண்களிடம் பேசுதல், பொறாமை கொள்ளுதல் முதலிய கீழ்க்குணங்கள் ஒருவருக்குக் கூடாதவை என்று சுட்டி, கூடும் நற்குணங்களையும் சுட்டி நல்வழிப்படுத்துகிறது. சம்பந்தியையும், மாப்பிள்ளையையும் கேலி செய்துப் பேசி, திருமணத்திற்கு வந்தவர்களை சிரிக்க வைத்தலே "சம்மந்தி மாப்பிள்ளை ஏசல்' நூலின் நோக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com