இந்த லார கலாரசிகன்

நேற்று தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் தமிழ்த் துறையும், வேதமுத்து கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.
இந்த லார கலாரசிகன்

நேற்று தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் தமிழ்த் துறையும், வேதமுத்து கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். தெலங்கானா -ஆந்திர மாநிலங்களின் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் அந்த விழாவில் பெரியவர் மாவிடுதிக்கோட்டை ச. வேதமுத்து எழுதிய புத்தகங்கள் சிலவற்றை வெளியிட்டுச் சிறப்பித்தார். 
91 வயதான பெரியவர் வேதமுத்து தனது 15 வயது முதல் தினமணியின் தொடர் வாசகர். தினமணியைத் தவிர வேறு எந்தவொரு நாளிதழையும் படிப்பதில்லை என்று பிடிவாதமாக இருப்பவர். ஆசிரியர் ஏ.என். சிவராமன் காலத்திலிருந்து இன்றுவரை ஒருநாள் விடாமல் தினமணியின் தலையங்கங்களைத் தான் படிப்பது மட்டுமல்லாமல் பிறரையும் படிக்க வைப்பதன் மூலம் சமுதாயத் தொண்டாற்றி வருவதாகக் கருதுபவர். 
பத்திரிகை படிப்பதுடன் நின்றுவிடாமல் தனக்கு எழும் சிந்தனைகளையெல்லாம் கட்டுரைகளாக எழுதி, அவற்றைத் தொகுத்துப் புத்தகங்களாக வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் பெரியவர் வேதமுத்து. மாவிடுதிக்கோட்டை ச.வேதமுத்து கல்வி அறக்கட்டளை என்கிற அமைப்பை ஏற்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டவும் விழையும் அந்தப் பெரியவரின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. 
அகவை 84இல் கடந்த 11-ஆம் தேதி அடியெடுத்து வைத்திருக்கும் தினமணியின் பலம் என்ன என்பதை பெரியவர் வேதமுத்துவை சந்தித்தபோது புரிந்துகொண்டேன். புதிது புதிதாக எத்தனையோ நாளிதழ்கள் வந்தாலும்கூட, தினமணிக்கு என்றிருக்கும் அசைக்க முடியாத வாசகர் கூட்டத்தின் சக்திதான் தினமணியைத் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஊடகச் சக்தியாக நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட வைக்கிறது. 

பரலி சு. நெல்லையப்பர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது நான் சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை பேராசிரியர் ய. மணிகண்டனை சந்தித்தேன். அவர் தான் எழுதிய "பாரதியின் இறுதிக்காலம்' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். 
பிரெஞ்சு இந்தியாவாக விளங்கிய புதுவையை விட்டுப் புறப்பட்டு, பிரிட்டீஷ் இந்தியாவிலுள்ள கடலூரில் நுழைந்த பாரதியார் அங்கே கைது செய்யப்படுகிறார். அவர் கடலூரில் கைதாகி, சென்னை திருவல்லிக்கேணியில் செப்டம்பர் 11, 1921-ஆம் நாள் நள்ளிரவுக்குப் பின், அதாவது செப்டம்பர் 12-ஆம் தேதி அதிகாலையில் மறைந்த நாள் வரையிலான காலத்தை அவரது இறுதிக் காலம் என்று கொள்ளலாம். 
பாரதியை நேரில் பார்த்துப் பழகிய சுதேசமித்திரன் ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், தமிழ்க் கடல் ராய. சொக்கலிங்கம், செல்லம்மாள் பாரதி, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி, வ.ரா., பாரதியாரின் தம்பி சி. விசுவநாதன், பாரதி அன்பர் ரா. கனகலிங்கம் ஆகியோரின் பதிவுகளையெல்லாம் ஆய்வு செய்து முனைவர் ய. மணிகண்டன் "பாரதியின் இறுதிக் காலம்' என்கிற பெயரில் புத்தகமொன்றைத் தொகுத்திருக்கிறார்.
÷சென்னை திருவல்லிக்கேணி கோவில் யானையால் பாரதியார் தாக்கப்பட்டது அவரது இறுதிக்கால வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவம். அந்தச் சம்பவத்தின் தாக்கத்தில் பாரதியார் "கோவில் யானை' எனும் நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
யானை தாக்கிய சம்பவத்துக்கும் பாரதியின் இறப்புக்கும் இடையில் கால இடைவெளி இருந்திருப்பதால், அவரது மரணத்துக்கும் யானை தாக்கியதற்கும் நேரிடையான தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் இடைப்பட்ட காலத்தில் பாரதியார் பல வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்; எழுதிக் குவித்திருக்கிறார். யானையால் தாக்கப்பட்டது அவரது உடல்நலத்தை பலவீனப்படுத்தி இருக்குமே தவிர, அவரது மரணத்துக்கு நேரிடையான காரணமாக இருந்திருக்காது. 
1921-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் நாளிதழின் அநுபந்தத்தில் பாரதியாரின் "கோவில் யானை' என்னும் நாடகம் வெளிவந்திருக்கிறது. அந்த நாடகம் சரியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு கலைமகள் இதழில், இதுவரை நூல் வடிவம் பெறாத பாரதியாருடைய படைப்பு என்னும் குறிப்புடன் வெளியிடப்பட்டது. 
பாரதியார் எழுதிய கட்டுரைகளிலும், கதைகளிலும் இன்னும் தொகுதிகளில் சேராத பல படைப்புகள் பழைய பத்திரிகைகளில் புதைந்திருக்கின்றன என்பதை வெளிச்சம் போடுகிறது இந்த நாடகம். பாரதியார் எழுத்துகள் அடங்கிய தொகுதிகளில் இடம்பெறாத கோவில் யானை என்கிற இந்த நாடகம் "பாரதியின் இறுதிக் காலம்' என்கிற புத்தகத்தில் முனைவர் ய. மணிகண்டனால் "கோவில் யானை சொல்லும் கதை' என்று இணைக்கப்பட்டிருக்கிறது. 
"பாரதி நூல் எதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது' என்று ஆ.இரா. வேங்கடாசலபதி கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. 

திருவல்லிக்கேணித் தெருக்களில் காலாற நடந்து போவது ஒரு சுகம். அதிலும் குறிப்பாக, தெருவோரப் பழைய புத்தகக் கடை நூல்களை எக்ஸ்ரே கண்களால் நோட்டமிடுவது அதைவிட சுகம். அதற்குள் புதைந்துகிடக்கும் பொக்கிஷங்களாகப் பழைய பல நூல்கள் அகப்படும். 
சமீபத்தில் ஒரு நாள் பைகிராப்ட்ஸ் ரோடு என்று முன்பு அறியப்பட்ட இன்றைய பாரதி சாலையில் பழைய புத்தகம் தேடி நடைப்பயணம் மேற்கொண்டபோது, கண்ணில் பட்டது 1976 ஜூலை மாத கணையாழி மாத இதழ். அதில் வெளிவந்திருக்கும் "மாய மான்' என்கிற கவிதையை எழுதியவர் ஜெயசிவம். கவிதை இதுதான்:

ஷெல்லி மில்டன்
பிதாகரஸ் டிரிக்னாமட்ரி
நளவெண்பா புறநானூறு
வணிகவியல் லாஜிக்
நெப்போலியன் போனபார்ட்
இத்யாதி இத்யாதி
கண்ணையும் மனதையும்
கரடியாய்க் கத்தும்
மனிதன் முன் -- ஊன்றி
மூளைப் பையன்
கேட்டதைச் சிதறடிக்க
பட்டாம்பூச்சி விழிகள்
நைலான் ரிப்பன்
ரொம்பப் போதும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com