எடப்பாடியா, இடைப்பாடியா?

இன்று தமிழ்நாடு முழுவதும் அறியக்கூடிய ஊராக "எடப்பாடி' மாறியுள்ளது. இவ்வூரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவருக்கு, "இவ்வூரின் பெயர் எடப்பாடியா, இடைப்பாடியா?' என்னும் குழப்பம் ஏற்படும்

இன்று தமிழ்நாடு முழுவதும் அறியக்கூடிய ஊராக "எடப்பாடி' மாறியுள்ளது. இவ்வூரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவருக்கு, "இவ்வூரின் பெயர் எடப்பாடியா, இடைப்பாடியா?' என்னும் குழப்பம் ஏற்படும். 
எடுத்துக்காட்டு: "இடைப்பாடி' நகராட்சி அலுவலகமும் "எடப்பாடி' காவல் நிலையமும் எதிரெதிரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள். இப்படி அரசு அலுவலகங்களிலேயே எதிரும் புதிருமாக ஊர் பெயர்கள் மாற்றி அச்சிடப்பட்டிருந்தால் யாருக்குத்தான் குழப்பம் ஏற்படாது?
இடைப்பாடியின் தெற்குப் பகுதியின் எதிரெதிரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், சந்தைப்பேட்டையும் உள்ளன. அங்கிருந்து ஏரிக்குப் பாதை செல்கிறது. அங்கிருந்து ஏரி வரை உள்ள இரண்டு கி.மீ. தூரம் வரை உள்ள பகுதி "பழைய இடைப்பாடி'. அதுதான் 300 ஆண்டுகளுக்கு முந்தைய இடைப்பாடி என்ற ஊராகும். 
அக்காலத்தில் "பெரியேரி' எனப்படும் ஏரி தோன்றவில்லை எனத் தெரிகிறது. ஆனால், சரபங்கா நதி அவ்வழியே செல்லும். அப்போது அங்கு வாழ்ந்த மக்களில் பெருவாரியானவர்கள் இடையர்கள். இன்றும் இடைப்பாடியைச் சுற்றிலும், அருகருகே இடையர்களின் ஊர்கள் உள்ளன. கிழக்கில் குறும்பப்பட்டி, தெற்கில் கிடையூர், மேற்கில் கொல்லப்பட்டி (கொல்லவாரு/தெலுங்கு), வடக்கில் ஆவணியூர் (ஆ+அணியூர்) ஆகியவை.
அன்றைய இடைப்பாடியை அடுத்துள்ள இடம் சூரியமலை வனப் பகுதியாகும். சுமார் மூன்று கி.மீ. வரை பரந்த பகுதி. அதற்கு அடுத்து உள்ளது சூரியன் மலை. பழைய இடைப்பாடியும், வனப் பகுதியும் முல்லை நிலமாகும். அதாவது மலையை ஒட்டிய பகுதிகள். "பாடி' என முடியும் ஊர்கள் பெரும்பாலும் முல்லை நிலத்தைச் சார்ந்தவை. "புறவம் புறம்பணை புறவணி முல்லை, அந்நிலத்தூர்ப் பெயர் பாடியென்ப' என்கிறது பிங்கல நிகண்டு. ஆயர்கள் வாழ்ந்த ஊர்களில் ஆரவாரம் மிக்க பெரிய ஊர் "பாடி' எனப் பெயர் பெற்றது. பாடி எனும் சொல்லுக்கு ஆரவாரமுடையது எனச் சூடாமணி நிகண்டும், நகரம் எனத் தமிழ்ப் பேரகராதியும் பொருள் உரைக்கின்றன.
ஆகவே, இந்த ஊரின் பெயர் இடையர்+பாடி என்ற பொருளில் இடைப்பாடி என்பதே சரியானது. இதை சி.டி. மாக்ளீனும்
(இ.ஈ.ஙஹஸ்ரீப்ங்ஹய்) குறிப்பிட்டுள்ளார் (கி.பி. 1885). "எடப்பாடி' என்பதற்குச் சரியான பொருள் விளக்கம் தருவது எளிதல்ல. அப்படியான இடைப்பாடியைச் சடுதியில் கூப்பிடுவதற்காக "எடப்பாடி' என்ற வழக்கம் வந்தது. திண்டுக்கல் மாவட்டம் "இடையக் கோட்டை' என்கிற ஊரை "எடையக்கோட்டை' என்று சொல்வதும் இதுமாதிரிதான். இடையக்கோட்டையில் அக்காலத்தில் "கொல்லவாரு' (தெலுங்கு) எனும் மக்கள் அதிகம் வாழ்ந்தனர் போலும்.
எப்படி இருந்தாலும், இங்குள்ள நகராட்சி அலுவலகமும் காவல் நிலையமும் குழப்புகின்றனவே! 1792இல் திப்பு சுல்தான் - ஆங்கிலேயர் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அன்றைய சேலம் மாவட்டம் ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. அவர்கள் இடைப்பாடியை ஒரு தாலுகாவாக மாற்றினர். பத்து ஆண்டுகளுக்கு மேல் இடைப்பாடி தாலுகா நீடித்தது. இந்தத் தாலுகாவின் மேலதிகாரியாக சர் தாமஸ் மன்றோ, உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் பலமுறை இடைப்பாடிக்கு வந்து சென்றிருக்கிறார். இவர்தான் இடைப்பாடியை முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிய ஆங்கிலேயராக இருந்திருப்பார் (அப்போதைய தாசில்தார் கன்னடக்காரர்). முதலில் யெர்ரப்பாடி (yerrapaudi) என்றும், பின்னர் யெடப்பாடி (Edappaudi) என்றும், அதன்பிறகு எடப்பாடி (yedapaudi) என்றும் மன்றோ எழுதினார். ஆங்கிலேயருக்கு இடைப்பாடி என்று எழுத, புரியவில்லை அல்லது கடினமாக இருந்திருக்கும் எனக் கருதலாம். இந்த ஆங்கில எழுத்துகள் அடுத்த முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
1881ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் 227 நகரங்கள் இருந்தன. அவற்றில் 207ஆவது பெரிய நகரமாக இடைப்பாடி இருந்தது. அப்போது முதல் அரசு ஆவணங்களில் இவ்வூரை எடப்பாடி என்றே குறிப்பிட்டார்கள். அதுதான் இன்றும் காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் போன்றவற்றில் எடப்பாடி என்பது நடைமுறையாக உள்ளது.
1936இல் சேலம் ஜில்லா போர்டின் தலைவராக பத்து ஆண்டுகள் வரை இருந்தவர் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த நாச்சியப்ப கவுண்டர். அவர் இருபது ஆண்டுகள் (1930-1951) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். உள்ளாட்சி அமைப்புகள் ஜில்லா போர்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தன. அவர் இடைப்பாடி தொகுதியைச் சேர்ந்தவர். அவரது காலத்தில் "இடைப்பாடி' என்கிற முழுப் பெயர் பஞ்சாயத்து போர்டு, உயர்நிலைப் பள்ளி, மருத்துவமனை முதலியவற்றில் பயன்படுத்தப்பட்டன. 1965இல் இவ்வூர் நகராட்சியானபோது, இடைப்பாடி (idappadi) என்றே அரசு ஆவணத்தில் (கெசட்) குறிப்பிடப்பட்டது. யெடப்பாடி என்று முத்திரை குத்திக் கொண்டிருந்த அஞ்சல் அலுவலகமும் 1935க்குப் பிறகு இடைப்பாடி என்றே குறிப்பிடுகிறது.
இடைப்பாடிக்கு "கோபாலபுரம்' என்ற சமஸ்கிருதப் பெயரும் உண்டு (சி.டி. மாக்ளீன், புத்தகம் 3, பக்.925). மைசூர் மன்னர்கள் இப்பகுதியை ஆண்டபோது (17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குப் பின்) இப்பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். கோபாலன் என்பது இடையரைக் குறிக்கும் சொல். ஆனால், நாகரிகப் பெயரான கோபாலபுரம் மறைந்து மீண்டும் இடைப்பாடி என்று மாறி எடப்பாடி என்று மருவி சாமானியர்கள் கூப்பிடும் ஊராக இவ்வூர் உள்ளது. ஆனால் "இடைப்பாடி' என்பதே பொருள் பொதிந்தது; பழைய பெயர். ஆகவே, இவ்வூர் "இடைப்பாடி' என்று அரசு ஆவணங்களில் இடம்பெற வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com