இந்த வார கலாரசிகன்

திருவள்ளுவர் சிலை வாங்குவதற்காக திருச்சி பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.

திருவள்ளுவர் சிலை வாங்குவதற்காக திருச்சி பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையத்திற்குச் சென்றிருந்தேன். விற்பனைக்கு வந்திருந்த சிலைகள் அனைத்துமே விற்பனையாகிவிட்டதாகத் தெரிவித்தார் அதன் மேலாளர். பூம்புகாரின் "இல்லந்தோறும் வள்ளுவர் திட்டம்' மக்களைச் சென்று அடைந்திருப்பது மகிழ்ச்சி அளித்தது. உடனடியாக, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிர்வாக செயல் அலுவலர் சுகி. இராசேந்திரனை தொடர்பு கொண்டு பாராட்டியபோது, அவர் இந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து பெருமிதத்துடன் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த வாரம் பகுதியில் பூம்புகாரின் "இல்லந்தோறும் வள்ளுவர் திட்டம்' குறித்து கடந்த ஜூன் மாதம் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து வள்ளுவப் பேராசன் மீது பற்று கொண்ட பலரும், தங்களது வீட்டில் வைப்பதற்கு வள்ளுவர் சிலைகளை வாங்கிச் செல்வதாகவும், பல கல்வி நிலையங்களும் இந்தத் திட்டத்திற்குப் பேராதரவு தருவதாகவும் தெரிவித்தார். தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் சுமார் 4,500 மாணவர்கள் பயிலும் எஸ்.யு.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பூம்புகார் தொழில் வளர்ச்சிக் கழகம் உருவாகிய, திருவள்ளுவரின் முதலாவது இரண்டடி உயர சிலை நிறுவப்பட இருப்பதாகத் தெரிவித்தார். அந்தப் பள்ளியின் தாளாளர் வி.எஸ். பிரபாகரன் 21.5 அடி உயர சிலையையும் வாங்கியிருக்கிறார் என்றும் தெரிவித்தார். இதுபோல பல பள்ளிகளிலிருந்தும் வள்ளுவர் சிலை நிறுவுவது குறித்துக் கடிதங்கள் வந்த வண்ணம் இருப்பதாகத் தெரிவித்தார் சுகி. இராசேந்திரன்.
சிலை கிடைக்கவில்லை என்கின்ற ஏமாற்றத்தை விட, தமிழகம் முழுவதிலிருந்தும் பூம்புகாரின் "இல்லந்தோறும் வள்ளுவர் திட்டம்' மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கிறது என்கிற மகிழ்ச்சி மேலோங்க அந்த விற்பனை நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன் (திருவள்ளுவர் ஐம்பொன் சிலை தொடர்புக்கு- 9659799909 / 9788099909).


திருச்சியிலிருந்து தஞ்சைக்குப் பயணிக்கும்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லாமலும் அதன் துணைவேந்தர் முனைவர் பாஸ்கரனை சந்திக்காமலும் வர எப்படி மனம் ஒக்கும்? துணைவேந்தர் தெரிவித்த தகவல்கள் என்னை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் 
மாஃபா பாண்டியராஜன் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தமிழின் வளர்ச்சிக்கு வழிகோலுகிறார் என்பதைத் துணைவேந்தரின் கூற்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
தினமணி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 21, 22இல் நடத்திய தமிழ் இலக்கியத் திருவிழாவின்போது இந்தியைப் பரப்புவதற்கு, ஹிந்தி பிரசார சபா இருப்பதுபோலத் தமிழுக்கும் ஓர் அமைப்பு வேண்டுமென்றும், தமிழகத்திற்கு வெளியேயும் தமிழகத்திலும் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழிலும் தேர்ச்சி பெற அதன் மூலம் வழிகோல வேண்டுமென்றும் எனது உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை நனவாக்குவதுபோல அமைச்சர் பாண்டியராஜன் ஒரு திட்டத்தை செயல்படுத்த முற்பட்டிருக்கிறார் எனும்போது நான் மகிழ்ச்சியடைவதில் வியப்பென்ன இருக்கிறது?
"தமிழ் வளர் மையம்' என்கிற பெயரை அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான முயற்சியில் அமைச்சரின் தலைமையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழறிஞர்களும் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறார்கள் என்கிற தகவலை உங்களுடன் அல்லாமல் வேறு யாருடன் நான் பகிர்ந்து கொள்வது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்கிற பாரதியாரின் கூற்றை சிரமேற்கொண்டு செயல்படுத்த முற்பட்டிருக்கும் அமைச்சர் பாண்டியராஜனை, மகாகவி பாரதி இருந்திருந்தால் "பலே பாண்டியா' என்று பாராட்டியிருப்பார்!


திருச்சியில், மலைக்கோட்டை தெப்பக்குளத்திற்கு அருகிலுள்ள சாலை வழியாகப் புத்தகங்கள் தேடி நடைப்பயணம் மேற்கொண்டபோது, நடைபாதை புத்தகக் கடையொன்றில் "மலேசிய தமிழ் எழுத்தாளர்கள்' என்கிற புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. உலகத் தமிழ் மக்களுக்கு மலேசிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் அரிய முயற்சி அது. "தமிழோடு வாழ்வோம்!' என்று தமிழ் தாகத்துடன் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் கையொப்பம் இட்டு யாருக்கோ அன்பளிப்பாகத் தந்திருக்கும் அந்தப் புத்தகம் எனக்காக நடைபாதைக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வாங்கிவிட்டேன். 
பேரறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் "எந்தச் சிலம்பு' என்கிற புத்தகம் அங்கிருக்கும் புத்தகக் கடையொன்றில் என்னை ஈர்த்தது. வ.சுப. மாணிக்கனாரின் 12 கட்டுரைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரைதான் தலைப்பாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரைத் தொகுதியில் ஒன்பது கட்டுரைகள் பல்வேறு மலர்களில் வெளியானவை. மூன்று கட்டுரைகள் வ.சுப. வானொலியில் நிகழ்த்திய உரைகள். திருக்குறள், சிலம்பு, தனிப்பாடல்கள் குறித்த கட்டுரைகள் ஆய்வு மாணவர்களும், தமிழ் அன்பர்களும் கட்டாயம் படிக்க வேண்டியவை. அந்தத் தொகுப்பில் நான் மிகவும் ரசித்துப் படித்தக் கட்டுரை "நான்மாடக் கூடல்'.
பாண்டியன் தலைநகருக்கு மதுரைதான் பெயரா அல்லது "நான்மாடக் கூடல்' என்பதுதான் பெயரா என்று பள்ளிப் பருவத்திலிருந்து எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்விக்கு அந்தக் கட்டுரை பதிலாக அமைந்தது. மதுரை காண்டம் என்று இளங்கோவடிகள் பெயரிட்டுள்ளார். மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் கண்ணத்தனார் எனப் புலவர் பெயர்கள் மதுரையின் பெயர் கொண்டனவாக இருந்தாலும், சங்கப் பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் கூடல் என்னும் பெயரே மிகுந்து வருகின்றது. ஆனாலும்கூட மதுரை என்கின்ற பெயர்தான் இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்பதை "நான்மாடக் கூடல்' என்கின்ற கட்டுரை இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்திருக்கும் விதம் வ.சுப. மாணிக்கனாரின் தனித்துவம்.


அமரர் தி.க.சி.யின் குருகுல வட்டத்தைச் சேர்ந்த கோதை ஜோதிலட்சுமி என்கிற கவிஞர் கோதையின் முதல் கவிதைத் தொகுப்பு "ஓங்கில் மீன்கள்'. சிவகாசியைச் சேர்ந்த கவிஞர் கோதை, தொலைக்காட்சி ஊடகங்களில் பகுதிநேர செய்தி வாசிப்பாளரும்கூட. அதிலிருந்து ஒரு கவிதை -

வெளிச்சப் பொட்டுகளை
மண்ணில் சிந்தி
விளையாடுகின்றன
வெயிலும் மரமும்
தானியமென
கொத்திப் பார்க்கிறது
குருவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com