சிவப்பிரகாசரின் யாப்பியல் புலமை!

கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்பெறும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு நூல்களை அருளியவர்.
சிவப்பிரகாசரின் யாப்பியல் புலமை!

கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்பெறும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு நூல்களை அருளியவர். இவர் செய்த இலக்கியங்களுள் மிகச்சிறந்த பல்துறை இலக்கியமாகக் கருதப்பெறுவது பிரபுலிங்கலீலை.
பிரபுலீங்கலீலை இருபத்தைந்து "கதி'யையும், ஆயிரத்து நூற்று ஐம்பத்து எட்டுப் பாடல்களையும் (1158) கொண்டது. ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு. அத் தத்துவத்தைக் கடந்து இருபத்தைந்தாவதாக நிற்பது முத்தி தத்துவமாகும். சிவப்பிரகாசர் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கைக் கடந்து, இருபத்து ஐந்தாவது தத்துவமாக முத்தியை அடைய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே பிரபுலிங்கலீலையை இருபத்தைந்து கதியாக அமைத்துள்ளார். 
பதின்மூன்றாவதாக அமைந்திருப்பது சித்தராமையர் கதி. இக் கதியில்தான் சிவப்பிரகாசரின் யாப்பியல் புலமையை நுட்பமாக உணரவியலும். இக்கதியில் யாப்பிலக்கணம் கூறும் ஐவகை அடியும் முறையாக வந்துள்ளது.
அவற்றின் விளக்கம் வருமாறு: 1. குறளடி - இரண்டு சீரால் வரும்; 2. சிந்தடி - மூன்று சீரால் வரும்; 3. அளவடி - நான்கு சீரால் வரும்; 4. நெடிலடி - ஐந்து சீரால் வரும்; 5. கழிநெடிலடி - ஐந்து சீர்களுக்கு மேலாய் வரும்.
சிவப்பிரகாசர் சித்தராமையர் கதியிலுள்ள எழுபத்தாறு பாடல்களையும் இரண்டு சீராகிய குறளடியில் தொடங்கி முறையே சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்று ஐவகை அடியாக அப்பாடல்களை இயற்றியுள்ளார். இவ்வாறு ஐவகை அடியின் முறை மாறாமல் பாடல் இயற்றுவதற்குப் பெரும்புலமை வேண்டும். மேற்கூறிய ஐவகை அடிகளில் நான்கு அடிகளுக்கான சான்றுப் பாடல்களை ஈண்டு அறிவோம்.
இருசீரால் இயற்றப்பெறுவது குறளடி. சித்தராமையர் கதியின் முதல் எட்டுப் பாடல்கள் குறளடியில் வந்துள்ளதாகும். சான்றிற்கு,

""காமரு சித்த
ராமனி டத்தில்
போமணல் சொற்ற
சீர்மையு ரைப்பாம்''

என்ற பாடலைக் கொள்ளலாம். மூன்று சீரால் இயற்றப் பெறுவது சிந்தடி. ஒன்பதாவது பாடல் முதல் பதின்மூன்று பாடல் வரையிலுள்ள ஐந்து பாடல்களும் சிந்தடிப் பாடல்களாகும். இதற்குரிய சான்றுப் பாடலாக,

""சாந்தன் ஓதிய தாழ்மொழி
காய்ந்த வேலிரு காதினும்
போந்த போன்று புகுந்தன
மாந்தர் ஆகுலம் மன்னினார்'' (11)

என்ற பாடலைக் கொள்ளலாம். நான்கு சீரால் இயற்றப் பெறுவது அளவடி. பதினான்காம் பாடல் முதல் முப்பத்தைந்தாம் பாடல் வரையிலுள்ள இருபத்திரண்டு பாடல்களும் அளவடிப் பாடல்களாகும். இதற்குரிய சான்று:

""இறுக்கினர் அழுக்குடை எயிறு மென்றனர்
உறுக்கினர் அதிர்த்தனர் உயிர்த்து மீசையை
முறுக்கினர் நகைத்தனர் முருட்டுக் கையால்
பொறுக்கினர் சிலைகளைப் பெருஞ் சினத்தராய்''
(12) 

ஐந்து சீரால் இயற்றப்பெறுவது நெடிலடி. சித்தராமையர் கதியுள் முப்பத்தாறாவது பாடல் முதல் ஐம்பத்து நான்கு வரையிலுள்ள பத்தொன்பது பாடல்களும் நெடிலடிப் பாடல்களாகும். இதற்குரிய சான்று:

""எந்தை அல்லமன் அருளினால் 
நுதல்விழி எரியால்
வெந்த அந்நகர் பண்டையின் 
மும்மடி விளக்கம்
வந்த பல்வள மொடுசிறந் 
தனுநரர் மகிழ
உந்து எவ்வழ லிடைவெந்த
ஆடகம் ஒத்து'' (52)

ஓர் அடியில் ஐந்து சீர்களுக்கு மேல் வருவனவெல்லாம் கழிநெடிலடியாகும். சித்தராமையர் கதியுள் ஐம்பத்தைந்தாம் பாடல் முதல் எழுபத்தாறாம் பாடல் வரையிலுள்ள இருபத்திரண்டு பாடல்களும் கழிநெடிலடிப் பாடல்களாகும். 
சிவப்பிரகாசர் தொல்காப்பிய நெறியில்தான் நூல்களை இயற்றினார் என்பதற்குச் சான்றுண்டு. அவர் இயற்றிய பழமலை அந்தாதியின் காப்புப் பாடலில், வந்துள்ள "சீரதங் கோட்டு முனி கேட்ட நூல்படி' என்ற தொடர் சான்றாகும். மேலும், சிவப்பிரகாசர், திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வாழ்ந்துவந்த வெள்ளி அம்பலத் தம்பிரானிடம் தொல்காப்பியப் பாடங் கேட்டார் என்ற சான்றையும் குறிப்பிடலாம். இத்தகைய தொல்காப்பியப் புலமையால்தான் சிவப்பிரகாசர் யாப்பியல் புலமையில் வல்லவராகக் கருதப்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com