புலியின் கைகள்

உருவத்தில் மிகவும் பெரியது யானை. அந்த யானையை வெல்லும் ஆற்றல் பெற்றது புலி.
புலியின் கைகள்

உருவத்தில் மிகவும் பெரியது யானை. அந்த யானையை வெல்லும் ஆற்றல் பெற்றது புலி. சங்க இலக்கியத்தில் புலி பற்றிய செய்திகள் பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புலியின் முன்னங்கால்கள் இரண்டையும் "கைகள்' என்று சில பாடல்கள் தெரிவிக்கின்றன.
விலங்குகள் நான்கு கால்களைக் கொண்டவை என்றுதான் விலங்கியல் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால், தமிழ் இலக்கியம், புலியின் முன்னங்கால்கள் இரண்டையும் "கைகள்' என்று அறிவிக்கிறது. அவ்வாறு இலக்கியம் காட்டும் இந்த முன்னங்கைகள் இரண்டும் பின்னங்கால்களைவிடவும் குறுகியவை என்றும் அறியமுடிகிறது.
நற்றிணையில், மலைநாட்டுத் தலைவன் ஒருவனை அறிமுகம் செய்ய விரும்பிய சீத்தலைச் சாத்தனார் அந்த மலைக்காட்சியை முதலில் காட்சிப்படுத்துகிறார்.
பெண் யானை ஒன்றும் ஆண் யானை ஒன்றும் மலையில் நிற்கின்றன. அங்கே வந்த புலி, அந்தப் பெண் யானையின் கண் முன்னாலேயே ஆண் யானையைத் தாக்குகிறது. மதநீர் வழிகின்ற வலிமை வாய்ந்த அந்த ஆண் யானையின் மத்தகத்தைப் புலி கையால் ஓங்கித் தாக்குகிறது. அந்தத் தாக்குதலைத் தாங்க முடியாத ஆண் யானை இறக்கிறது.
ஆண் யானை தாக்கப்படுவதைப் பார்த்த அழகிய மத்தகத்தில் புள்ளிகளைக் கொண்ட பெண் யானை அச்சத்தாலும் கவலையாலும் பிளிறுகிறது. பெண் யானையும் புலியைத் தாக்கும் வல்லமை கொண்டதுதான். இங்கே சீத்தலைச் சாத்தனார், தான் சொல்ல விரும்பும் கருத்துக்கு ஏற்றாற்போல், பெண் யானையானது வருந்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைவியைப் பார்ப்பதற்காக, தலைவன் இரவில் மலைக்காட்டு வழியே வரும்போது, ஆண் யானைக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போல் ஏதாவது துன்பம் தலைவனுக்கு ஏற்பட்டால், பெண் யானையானது வருந்திக் கதறியதைப் போல் தலைவியும் வருந்துவாள் என்பதை உணர்த்துவதற்காக இப்படி ஒரு காட்சியை அமைத்துள்ளார்.

"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்
கல்லக வெற்பன்' (36)

என்பது அந்த நற்றிணைப் பாடல். புலியின் முன்னங்கால்களைக் கைகள் என ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றும் தெரிவிக்கிறது. மலை சார்ந்த காடு ஒன்றில் அடர்ந்த புதர் காணப்படுகிறது. அந்தப் புதரின் நடுவில் ,
பெண் யானை ஒன்று தனது குட்டியை ஈன்றுள்ளது. அந்தக் குட்டி நடக்க முடியாமல் நடுங்கிய கால்களுடன் எழுந்து நிற்கிறது. அதற்குக் காவலாக தாய் யானை அங்கேயே நிற்கிறது. "தாய் யானை அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டால் எளிதாக அந்தக் குட்டியைக் கைப்பற்றிவிடலாம்' என்னும் எண்ணத்துடன் புலி ஒன்று மறைந்து காத்திருக்கிறது. அவ்வாறு மறைந்து காத்திருக்கும் அந்தப் புலியின் முன்னங்கால்களையும் கைகள் என்றே கபிலர் குறிப்பிட்டு, அதன் கைகளும் குறுகியனவாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய' (216)

எனவே, புலியின் முன்னங்கால்கள் இரண்டும் கைகள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், அந்தக் கைகள் பின்னங்கால்களைவிடவும் உயரம் குறைவானவையாக இருந்திருக்கின்றன என்பதையும் மேற்குறிப்பிட்ட சங்கப் பாடல்கள் இரண்டும் நமக்கு உணர்த்துகின்றன. 
விலங்கியல் ஆய்வாளர்கள் புலியின் முன்னங்கால்களை ஆய்வு செய்து, அவை கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும், அந்தக் கைகளின் உயரம் குறைவாக உள்ளனவா என்பதையும் புலப்படுத்தினால், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் அறிவியல் உண்மைகள் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com