கவி பாடலாம் வாங்க - 20: பஃறொடை வெண்பாவும் கலி வெண்பாவும்

குறள் வெண்பா இரண்டு அடிகளாலும், சிந்தியல் வெண்பா மூன்று அடிகளாலும், நேரிசை இன்னிசை வெண்பாக்கள் நான்கு அடிகளாலும் வரும் என்று அறிந்தோம்.
கவி பாடலாம் வாங்க - 20: பஃறொடை வெண்பாவும் கலி வெண்பாவும்

குறள் வெண்பா இரண்டு அடிகளாலும், சிந்தியல் வெண்பா மூன்று அடிகளாலும், நேரிசை இன்னிசை வெண்பாக்கள் நான்கு அடிகளாலும் வரும் என்று அறிந்தோம். நாலடிக்கு மேற்பட்டு வரும் வெண்பாக்களைப் பற்றி இனிப் பார்ப்போம்.

நான்கு அடிக்கு மேல் பன்னிரண்டு அடி வரைக்கும் வரும் வெண்பா பஃறொடை வெண்பாவாகும். இரண்டு அடிக்கு ஒரு தனிச்சொல் பெற்று வந்தாலும், அடிதோறும் தனிச்சொல் பெற்று வந்தாலும், தனிச்சொல்லே இன்றி வந்தாலும் வெண்டளை பிறழாமல் ஈற்றடி முச்சீராய், இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் நான்கு வாய்பாடுகளில் ஒன்றுடையதாய் அமைய வேண்டும்.


"வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
செய்யகமே நாற்றிசையில் தேசங்கள் செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு வான் கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம் கட்டியுட்
டானேற்ற மாய சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சியகம்'


இது ஏழடியினால் வந்த பஃறொடை வெண்பா. பன்னிரண்டு அடிக்கு மேல் வருவன கலிவெண்பா. முன்பெல்லாம் கலிப்பாவின் வகையான வெண் கலிப்பாவையே கலிவெண்பா என்று சொல்லி வந்தார்கள். வெண்டளையே வந்தாலும், அதோடு கலித்தளை விரவி வந்தாலும் வெண்கலிப்பா என்னும் பெயரால் வழங்கியது. பிற்காலத்தில் பல அடிகளால் வெண்டளை பிறழாது அமைந்த பாட்டையே கலிவெண்பா என்று சொல்லலானார்கள். கந்தர் கலிவெண்பா, திருவிளையாடற் போற்றிக் கலிவண்பா என்ற பிரபந்தங்கள் கலிவெண்பாவினால் அமைந்தவை. தூது, உலா, மடல் என்பவையும் கலி வெண்பாக்களால் அமைந்தவையே. பலபல உலாக்களும் தூதுகளும் தமிழில் உள்ளன.

கலிவெண்பாவில் இரண்டடிகளை ஒரு கண்ணி என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ""மூதுலாக் கண்ணி தொறும்'' என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்க. கண்ணிகளைக் கொண்டு கணக்கிடும் வழக்கமும் உண்டாயிற்று. ஏழு கண்ணி முதல் எத்தனை கண்ணிகளாலும் கலிவெண்பா வரும். கண்ணி என்ற கணக்கு வந்துவிட்டபடியால் கலிவெண்பாவின் அடிகள் இரட்டைப் படையாகவே இருக்க வேண்டிய அவசியம் உண்டாயிற்று.


சங்க காலத்து நூலாகிய கலித்தொகையில் பல கலி வெண்பாக்கள் உள்ளன. அவற்றில் ஒற்றைப் படையான அடிகளை உடைய பாடல்களும் உண்டு. திருவாசகத்தில் முதலில் உள்ள சிவபுராணம் கலிவெண்பாவால் அமைந்தது. சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய ஆதி உலா என்பதுதான் இப்போது தெரியும் உலாக்களில் பழையது. அது கண்ணிகளாகப் பிரித்துக் கணக்கிடும் வகையில் அமைந்திருக்கிறது.

வெண்பாவின் பொதுவிலக்கணம் யாவும் அமைந்து அடி மிகுதி ஒன்றே தனக்குரிய வேறுபாடாகக் கொண்டதனால் வெண்பாவைக் கலிப்பா வகையில் சேர்ப்பதை விட வெண்பா வகையில் சேர்ப்பதே பொருத்தமானது; கலித்தளை விரவிவரும் வெண்கலிப்பாவைக் கலிப்பா வகையில் சேர்க்கலாம்.

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com