சேம அச்சு

சேம அச்சு' என்னும் சொல்லை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் ஆங்கிலத்தில் "ஸ்டெப்னி' என்னும் சொல்லுக்கு இணையான சொல்.
சேம அச்சு

சேம அச்சு' என்னும் சொல்லை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் ஆங்கிலத்தில் "ஸ்டெப்னி' என்னும் சொல்லுக்கு இணையான சொல். மோட்டார் வாகனங்களில் உள்ள சக்கரம் பழுதாகிவிட்டால் அதனை உடனே மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது ஸ்டெப்னி வீல் (Stepney Wheel). இதனைத் தமிழில் மாற்றுச் சக்கரம் என்று குறிப்பிடுகிறோம்.
1904-இல் ஸ்டெப்னி ஐயர்ன் மாங்கர்ஸ் (நற்ங்ல்ய்ங்ஹ் ஐழ்ர்ய் ஙர்ய்ஞ்ங்ழ்ள்) என்னும் நிறுவனம் முதன்முதலில் இந்த மாற்றுச் சக்கரத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியது. 
இந்நிறுவனத்தின் பெயரில் முதலில் இடம்பெற்றுள்ள ஸ்டெப்னி என்னும் சொல்லே இந்த மாற்றுச் சக்கரத்தின் பெயராக வழங்கி வருகிறது. ஸ்டெப்னி என்னும் சொல் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளில்தான் பேச்சு வழக்கில் உள்ளது. பிற நாடுகளில் இதனை ஸ்பேர் டயர் (Spare Tyre) என்றுதான் குறிப்பிடுகிறார்கள். 
பேருந்து, சுமையுந்து (லாரி) முதலான பெரிய வாகனங்களின் அடிப்பாகத்தில் பொருத்தி வைத்திருப்பார்கள். எப்படி இருந்தாலும் இந்த மாற்றுச் சக்கரம் என்னும் ஸ்டெப்னி வீல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உலகத்திற்கு அறிமுகமாகி உள்ளது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "சேம அச்சு' என்னும் சொல் தமிழ் நாட்டில் பழக்கத்தில் இருந்திருக்கிறது. அந்தச் சொல்லை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார்.

"எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும் 
அவண் அது அறியுநர் யார் என உமணர்
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே!' 
(புறநா-102)
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டு எழினியின் வள்ளல் தன்மையைப் பாடும்பொழுது, ஒளவையார் இந்தச் "சேம அச்சு' பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 
தமிழ் நாட்டில் பழைமையான வணிகத்தில் ஒன்றாக உப்பு வணிகம் நடந்துள்ளது. உப்பினைத் தலையில் சுமந்தும் வண்டிகளில் ஏற்றியும் பல இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர். 
உப்பு எடை மிகுந்தது. அதனை வண்டியில் ஏற்றிச் சென்றால் பாரம் முழுவதும் வண்டியின் அச்சில் இறங்கும். போகும் தூரமோ தொலைவானது. வண்டியில் பாரம் மிகுதியாக ஏற்றப்பட்டுள்ளது. வண்டியை இழுத்துச் செல்லும் காளையோ மிகவும் இளமையானது. அது நுகத்தில் மாட்டப்பட்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வேகமாக இழுத்துச் செல்லும் வேகம் கொண்டது. 
பயணம் செல்லும் சாலைகளோ மேடு-பள்ளம் நிறைந்தவை. அதில் போகும்போது வண்டியின் அச்சு ஒடிந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்ட உப்பு வணிகர்கள், வண்டியின் அடிமரத்தின் அருகில் இன்னொரு மாற்று அச்சினைப் பொருத்தி வைத்துள்ளார்கள். 
"வண்டியின் அச்சு ஒடிந்துவிட்டால் இந்தச் சேம அச்சு எவ்வாறு பயன்படுகிறதோ அதைப்போல, பொகுட்டு எழினி, பொருள் கேட்டு வருகிற இரவலர்கள் முதலில் பெற்றுச் சென்ற பொருள் தீர்ந்து போய்விட்டால் மீண்டும் மீண்டும் வந்து கேட்டு நின்றாலும் தனது கவிழ்ந்த கையை எடுக்காமல் வழங்கிக்கொண்டே இருக்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவன்' என்று ஒளவையார் புகழ்ந்துள்ளார். 
சேம அச்சு என்பது உவமையில் வரும் அளவிற்கு அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பாட்டில் இருந்துள்ள தன்மையையும், உப்பு வணிகம் சிறந்திருந்த தன்மையையும், போக்குவரத்து வசதி சிறப்பாக இருந்த தன்மையையும் இப்பாடல் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com