கலித்துறை வகை-1 

இதுவரையில் ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, வெண்பா ஆகியவற்றைப் பற்றிய இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம்
கலித்துறை வகை-1 

கவி பாடலாம் வாங்க - 21
இதுவரையில் ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, வெண்பா ஆகியவற்றைப் பற்றிய இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். வெண்பா, ஆசிரியப்பா என்ற இரண்டு பாக்களே இலக்கியங்களில் பெரும்பாலும் வழங்குகின்றன. கலிப்பா வகையில் தரவு கொச்சகக் கலிப்பா என்பதும், அதன் இனத்தில் கலித்துறை, கலிவிருத்தம் என்பனவும் இன்றும் புலவர்களால் பாடப் பெறுகின்றன. விருத்தங்களாலான காப்பியங்களில் ஆசிரிய விருத்தங்களோடு மேலே சொன்ன மூவகைப் பாடல்களையும் காணலாம். கம்பனுடைய இராமாயணம் முழுவதும் விருத்தங்களாலானது என்று பொதுவாகச் சொல்வார்கள். 
"கம்பன் விருத்தக் கவித்திறமும்'', ""விருத்தமென்னும் ஒண்பாவுக் குயர் கண்பன்'' என்று விருத்தத் திறத்தைப் பாராட்டிப் பழம் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அதில் தரவு கொச்சகக் கலிப்பாவும் கலித்துறையும் இருக்கின்றன.
பாக்கள் நான்கு: பாவினங்கள் மூன்று. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை நான்கு பாக்கள். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மும்மூன்று இனங்கள் உண்டு. ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்றாகிய ஆசிரிய விருத்தத்தின் இலக்கணத்தை விரிவாகப் பார்த்தோம். வெண்பாவின் இனமான விருத்தத்துக்கு வெளிவிருத்தம் என்று பெயர். கலியினங்களில் ஒன்று கலிவிருத்தம். அப்படியே வஞ்சியினங்களில் ஒன்று வஞ்சி விருத்தம். இந்த விருத்தங்கள் யாவுமே அளவொத்த நான்கு அடிகளை உடையன. கலித்துறையென்பது அடிக்கு ஐந்து சீர்களாய் நான்கு அடியும் அடிவொத்து வருவது.

"வேதம் யாவையும் அறிந்துயர் வித்தகன் விமல
போதம் மேவிய புங்கவன் எங்கணும் புகழ்கொள்
நாதன் நான்முக னும்பொரு வில்லனாம் நம்பன்
கோத மில்லவன் திருவடி பணிந்துகை குவிப்பாம்'

இது கலித்துறை. இதைக் கலிநிலைத்துறை என்றும் சொல்வதுண்டு. இந்தச் செய்யுளில் ஓரடிக்கு ஐந்து சீர்கள் வந்துள்ளன. முதற் சீரும் ஐந்தாம் சீரும் மாச்சீராகவும் மற்ற மூன்று சீர்களும் விளச்சீர்களாகவும் வந்திருக்கின்றன.

வேதம்- யாவையும் - அறிந்துயர் - வித்தகன் - விமல
தேமா - கூவிளம்- கருவிளம் - கூவிளம் - புளிமா

முதற்சீரும் ஐந்தாம் சீரும் புளிமாவாகவும் வரலாம். தேமாவாகவும் வரலாம். முதற்சீர் ஓரடியில் தேமாவாக வந்தால் நான்கடிகளிலும் தேமாவாகவே வர வேண்டும். ஐந்தாம் சீரில் இந்த நியதி இல்லை. இந்தப் பாட்டிலே விமல (புளிமா), புகழ்கொள் (புளிமா), நம்பன் (தேமா), குவிப்பாம் (புளிமா) என்று இரு வகை மாச்சீர்களும் ஐந்தாம் சீராக வந்திருப்பதைக் காண்க.
ஐந்து சீர்களையுடைய அடி நெடிலடி என்று பெயர் பெறுமென்று முன்பே தெரிந்து கொண்டிருக்கிறோம். "கலித்துறையே நெடிலடி நான்கா நிகழ்வது'' என்று யாப்பருங்கலக்காரிகை கூறும். விருத்தக் கலித்துறை என்பது ஒரு வகை.

"வென்றான் வினையின் தொகையாயவி ரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழும் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்'

இதில் அடிதோறும் ஐந்து சீர்கள் உள்ளன. முன் மூன்று சீர்களிடையே வெண்டளை வந்தது. மூன்றாவது சீர் கனிச்சீராகவும் நான்காவது ஐந்தாவது சீர்கள் மாச்சீராகவும் உள்ளன. 
குண்டலகேசி, சீவக சிந்தாமணி முதலியவற்றில் இத்தகைய கலித்துறைகள் வந்துள்ளன. காப்பியங்களில் வந்தமையால் இவற்றைக் காப்பியக் கலித்துறையென்றும் சொல்வார்கள்.

"செம்பொன் வரைமேற் பசும்பொன்னெழுத் திட்ட தேபோல்
அம்பொன் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோர் 
அம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம்'

இந்த சீவக சிந்தாமணிப் பாட்டிலும் மேலே சொன்ன வகையில் சீர்கள் அமைந்திருக்கின்றன. பிற்கால நூல்களில் இந்த விருத்தக் கலித்துறையை புலவர்கள் மிகுதியாக எடுத்தாளவில்லை.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com