சங்க இலக்கியத்தில் பயனுற வாழ்தல்! 

சங்க இலக்கியத்தில் பயனுற வாழ்தல்! 

இலக்கியத்தின் குறிக்கோளே "பயனுற வாழ்தல்' என்பதே! மனிதனைப் பற்றிய வரலாறு, பிறந்தான், உண்டான், உறங்கினான், இறந்தான் எனத் தொடங்கி முடிவதன்று. "வாழ்க்கை என்பது

இலக்கியத்தின் குறிக்கோளே "பயனுற வாழ்தல்' என்பதே! மனிதனைப் பற்றிய வரலாறு, பிறந்தான், உண்டான், உறங்கினான், இறந்தான் எனத் தொடங்கி முடிவதன்று. "வாழ்க்கை என்பது, வாழ்பவனுக்கு மட்டுமன்றி அவனைச் சார்ந்த பிறர்க்கும் பயனுள்ளதாக இருப்பதையே' சங்க இலக்கியம் அறிவுறுத்துகின்றது.
 அரசர்களுக்கு அறிவுரை கூறும் புலவர்கள் எல்லாம் "மேகம் போலப் பயனுள்ளவனாக இரு', "நிலவைப் போலப் பேதமின்றி எல்லார்க்கும் ஒளி கொடு', "சூரியனைப் போல் உணவும் துய்க்கும் பிறவும் உதவு' என்றே கூறினர்.
 சங்க காலத்தில் ஒவ்வொரு மனிதனும், தன்னை நாடி வந்தவர்க்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்தான். வீட்டில் தலைவி அறம் வளர்க்கும் பண்புடையவளாகவே இருந்தாள். தலைவன் பொருள் நிறைய ஈட்ட வேண்டும் என்பதே இல்லாதவர்க்குக் கொடுத்து உதவும் செயலுக்காகவே எனக் கருதினர்.
 நம்பி நெடுஞ்செழியன் என்று ஓர் அரசன் இறந்து கிடக்கும்போது அவனது உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அங்குவந்த பேரெயின் முறுவலார் என்ற புலவர், அங்கிருந்தோரைப் பார்த்துக் கீழ்வருமாறு கூறுகின்றார்:
 "அன்பு கொண்டோரே! நம்பி நெடுஞ்செழியன், மகளிர் தோளோடு தோளுற்றுத் தழுவினான்; சோலைகளின் பூக்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசி மகிழ்ந்தான்; பகைவரைப் போரிட்டு அழித்தான்; நண்பர்களை வாழ்த்தினான்; யாரையும் வலியர் என அவன் வழிபட்டுப் போற்றவில்லை; யாரையும் இவர் மெலியர் என இகழவுமில்லை; யாரிடத்தும் இரந்து நின்று கேட்டதில்லை; இரந்து வந்தவர்க்கு அவன் மறுத்து மொழிந்ததில்லை; வேந்தர்கள் வீற்றிருக்கும் அவைகளில் அவன் புகழோடு தலைமை வகித்தான்; போர்க்களத்தில் தனக்கு எதிராக வந்த படையைத் தடுத்து நிறுத்தினான்; தோற்று ஓடியவரைத் துரத்தாமல் நின்றான்; விரைந்து செல்லும் குதிரையைத் தன் மனத்தைவிட விரைந்து செல்லச் செலுத்தினான்; பெரிய தெருக்களில் தன் தேரைச் செலுத்தினான்; உயர்ந்த யானையின் மீது உலா வந்தான்; இனிய கள்ளை எல்லார்க்கும் பகிர்ந்து வழங்கினான்; பாணர்களின் பசி நீங்க விருந்து செய்தான்; நடுவுநிலை பிறழாது தெளிவு தோன்ற தீர்ப்பு வழங்கினான்; இவ்வாறாக செய்யத்தக்கன எல்லாம் பயனுறச் செய்தான்; புகழை ஈட்டிய அவனது தலையை வெட்டிப்போடுங்கள் அல்லது நெருப்பிட்டுச் சுடுக. அவனுடைய புகழ் இறவாது'' என்றார்.
 வாழ்க்கையின் எல்லாச் செயல்களையும் பயனுள்ளதாக வாழ்ந்தவரை எரித்தால் என்ன? புதைத்தால் என்ன? இதனாலெல்லாம் அவரது பெருமை குன்றாது எனக் கூறக் காண்கிறோம்.
 நெல் அதனுள் பால் முற்றிய அரிசியைப் பெற்றிருந்தால்தான் அதனைப் பயனுடையது என்போம்; இல்லாவிடின் அதனைப் "பதர்' என்போம். திருவள்ளுவர் இவ்வாறு பயனற்று வாழ்பவரை "மக்களுள் பதடி' என்கிறார். உண்டு உறங்கிக் கிடப்பவர் வாழ்நாளை வீணே கழிப்பர். அப்படிக் கழியும் நாளைப் "பதடிவைகல்' என்று குறிக்கிறது அகநானூறு.
 
 சங்க இலக்கியத்தில் முயற்சியும் ஊக்கமும் கொண்டு வாழ்வின் வெறுமையை அகற்றிப் பயனுற வாழ்ந்த ஒரு தலைவி இடம்பெறுகிறாள். இத்தலைவியின் கணவன் பொறுப்பற்றவன். தன்வீட்டை மறந்து அவ்வப்போது வெளியே சென்று பிறரோடு கூடித்திரிபவன். ஒருநாள் அவன் மலர் மாலைகளைச் சூடியவனாக, மணம் கமழ வருகிறான். அவனைப் பார்த்துத் தலைவியின் தோழி சொல்கிறாள்.
 "என் தலைவி சிறிய வயதினள்; அழகு நலம் கனிந்தவள். அவள் உன்னை மணம் செய்து கொண்டு இந்த வீட்டில் நுழைந்தபோது, இந்த வீடு எப்படி இருந்தது? ஒரே ஒரு மாடு மட்டும் இங்கு இருந்தது. வீட்டில் பொருள் இல்லை; பொலிவும் இல்லை. அவள் உனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த பிறகு இந்த வீட்டின் நிலையையே மாற்றிவிட்டாள். ஊரார் எல்லாம் இந்த வீட்டில் எவ்வளவு வசதி பெருகிவிட்டது என வியக்கின்றனர். அவள் உழைப்பு அவ்வாறு அமைந்தது. நீயோ வெளியே சென்று இன்பமாகப் பொழுதுபோக்கி வருகிறாய்'' என்று தூங்கலோரியார் என்ற புலவர் குறுந்தொகையில் தோழி கூறுவதை எடுத்துரைக்கின்றார். இந்தப் பாட்டின் கருத்தே "ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்ற பழமொழியாகி உள்ளது.
 
 உலகம் முழுவதும் உழுதொழிலால் வாழ்கிறது. அதனைச் செய்யும் வேளாண்மைத் தொழிலாளிகள் வாழ்ந்த வாழ்க்கை பேரரசர்களின் ஆட்சி தழைக்க அடித்தளம் சமைத்தது. உழத்தல் என்றால் வருந்துதல் என்பது பொருள். "உழந்தும் உழவே தலை' என்பார் திருவள்ளுவர். உடல் வருந்தச் செய்வதே உழவு. பிறதொழில்களில் உள்ள ஆக்கம், செல்வம் பெறும் வாய்ப்பு உழவுத் தொழிலில் இல்லை. பிறகு ஏன் இதைத் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டும்? இது தொழில் இல்லை; தொண்டு. சமுதாயத்தைக் காக்கும் தொண்டு. இதனைச் செய்வோர் தவம் செய்பவரை விட மேலானவர். அரசர் குடியினரைவிடவும் உயர்ந்தவர். இவர்களே பயனுற வாழும் வாழ்க்கையைப் பேணுபவர். உழவர்களை மிகுதியான வரியால் வருத்துதல் ஆகாது என்று வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கு அறம் கூறுகின்றார்.
 "அரசே நீ போரில் பெறும் வெற்றி உன் வலிமையால் விளைந்ததன்று. உன் நாட்டு உழவர்கள் வாழும் பயன்மிகுந்த வாழ்வின் உழைப்பால் விளைந்தது. அதனால் அத்தகு உழைப்பை மேற்கொள்ளும் வாழ்வினரின் சுமையை நீ தாங்க வேண்டும்'' என்று அரசனை வேண்டிக் கொள்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று உழவர்களின் பழைய வரித்தொகையை அறவே நீக்குகின்றான் அரசன்.
 உழவன் நீரிறைக்கும் கருவிக்குப் பெயர் "சால்' என்பதாகும். சால் என்பதிலிருந்தே சால்பு, சான்றாண்மை என்னும் சொற்கள் தோன்றின. எனவே, உழவர் சான்றோராவர்; பயனுற வாழ்ந்த - வாழும் பெருமக்களாவர்.
 
 - முனைவர் அரங்க. பாரி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com