உள்ளத்துக்கு இனிதே...

தலைமகனின் பிரிவைத் தாங்காத தலைவி, தன் தோழியிடம் தனது நெஞ்சத்துயரைக் கூறிப் புலம்புவதை, புலவர் பரணர் பாடியுள்ளார். 
உள்ளத்துக்கு இனிதே...

தலைமகனின் பிரிவைத் தாங்காத தலைவி, தன் தோழியிடம் தனது நெஞ்சத்துயரைக் கூறிப் புலம்புவதை, புலவர் பரணர் பாடியுள்ளார். 
தலைவியோ, "தலைவன் தனக்கு நல்லது செய்யாவிட்டாலும், தன்னை விரும்பாமல் ஒதுக்கினாலும், அவரை என் கண்ணாரக் கண்டாலே போதும்; உள்ளத்திற்கு அமைதி உண்டாகிவிடும். உடலால் ஒன்றாகாவிட்டாலும், உள்ளத்திற்கு இனிமை நல்கும்' என்பதை, 
""தோழி! கூதளங் கொடி காற்றில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு தோன்றும் உயரமான மலை உச்சியிலே கட்டியிருக்கும் பெரிய தேன் கூட்டைக் கண்ட, குட்டையான கால்களோடு நிற்க முடியாத நிலையுடைய ஒரு முடவன் இருந்த இடத்திலிருந்தே, தனது உள்ளங் கையைக் குடைபோல் குழிவாக வைத்துக்கொண்டு அத் தேன்கூட்டைப் பார்த்துப் பார்த்துச் சுட்டிக்காட்டி தன் கையை நக்குவதுபோல, நம் காதல் தலைவர் நமக்கு அருளார் ஆயினும், நம்மை விரும்பார் ஆயினும், அவரைப் பலமுறை பார்ப்பதற்கு மாத்திரம் வாய்ப்பதாயினும், அதுதான் என் உள்ளத்துக்கும் இனிமையாகும்'' என்கிறாள்.
"குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உண்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக் கினிதே' 
எனக் குறுந்தொகை பாடல் (பா.60) உணர்த்தும். திருவள்ளுவரும் இப்
பொருளில்,
"பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்' (1283) 
என்பார். அதாவது, "நம்மை தலைவரோ அவமதித்து, தான் வேண்டியனவே செய்வாராயினும், அவரை என் கண்கள் காணாது அமைய மாட்டா' என்பது தலைவி கூற்றாகும். அதாவது, தலைவனைப் பார்க்காமல் தலைவி இருக்க மாட்டாள் என்பதாம்.
"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு' (1281)
அல்லவா? இக்குறள் கருத்துப்படி பார்த்தாலே போதுமே - உள்ளங் களிக்குமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com