கவி பாடலாம் வாங்க - 37: 6-பிற தொடைகளும் வகையும் (2)

அளபெடைத் தொடை: உயிரளபெடையோ ஒற்றள பெடையோ தொடர்ந்து வருவது அளபெடைத் தொடை. இதிலும் அடியளபெடையும், இணையளபெடை முதல் முற்றளபெடை வரையிலும் உள்ள ஏழும் உண்டு.
கவி பாடலாம் வாங்க - 37: 6-பிற தொடைகளும் வகையும் (2)

அளபெடைத் தொடை: உயிரளபெடையோ ஒற்றள பெடையோ தொடர்ந்து வருவது அளபெடைத் தொடை. இதிலும் அடியளபெடையும், இணையளபெடை முதல் முற்றளபெடை வரையிலும் உள்ள ஏழும் உண்டு.
"ஆஅ! அளிய அலவன்றன் பார்ப்பினோ
டீஇ ரிரையும்கொண் டீரளைப் பள்ளியுள்
தூஉம் திரையலைப்பத் துஞ்சா திறைவன்தோள்
மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்
ஓஒ உழக்கும் துயர்'
இதில் அடிதோறும் முதற்சீரில் அளபெடை வந்தமையால் இது அடியளபெடைத் தொடை.
"தாஅன் தாஅ மரைமலர் உழக்கிப்
பூஉக் குவளைப் போஒ தருந்திக் 
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்
மாஅத் தாஅள் மோஓட் டெருமை 
தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல்
மீஇன் ஆஅர்ந் துகளும் சீஇர்
ஏஎர் ஆஅர் நீஇள் நீஇர்
ஊரன் செய்த கேண்மை
ஆய்வளைத் தோளிக் கலரா னாதே'
இந்தச் செய்யுளில் முதல் ஏழு அடிகளில் முறையே இணையளபெடை, பொழிப்பளபெடை, ஒரூஉ அளபெடை, கூழையளபெடை, மேற்கதுவாயளபெடை, கீழ்க்கதுவாயளபெடை, முற்றளபெடை என்ற ஏழும் வந்தன.
மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்ற ஐந்தும் அடி முதல் முற்றுவரையில் உள்ள எட்டு வகைகளாக அமையும்.
இப்படி அமையாத தொடைகள் மூன்று உண்டு. அவை அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை என்பன.

அந்தாதித் தொடை: அடிதோறும், ஓரடியின் இறுதியிலுள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த அடியின் முதலில் தொடர்ந்து வரும்படி தொடுப்பது அந்தாதித் தொடை.

"உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனவ் 
வாசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப 
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே'

இந்த அகவலின் புரிந்து-துன்னிய, தென்ப-பன்னரும் என்பவற்றில் எழுத்துக்கள் அந்தாதித்து வந்தன. அவிர்மதி - மதிநலன், அறிவனை-அறிவுசேர், உலகே-உலகுடன் என்பவற்றில் அசைகள் அந்தாதியாயின. முக்குடை, ஆசனம் என்னும் சீர்கள் அந்தாதித்து மீட்டும் வந்தன. 4, 5 ஆம் அடிகளே அந்தாதித்து வந்தன. 
இறுதி அடியின் இறுதிச் சீரும், முதல் அடியின் முதற் சீரும் அந்தாதியாக அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

இரட்டைத் தொடை: ஓரடி முழுவதும் வந்த சொல்லே திரும்பத் திரும்ப வரும்படி தொடுப்பது இரட்டைத் தொடை. இது நாற்சீரடிகளில் வருவது.
"ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினுட் சீறெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்'
இதில் முதலடியில் இரட்டைத் தொடை வந்தது.

செந்தொடை: எந்தத் தொடையும் இல்லாமல் வருவது செந்தொடை.
"பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலின மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே'
இந்தப் பாட்டு மோனை, எதுகை முதலிய தொடைகளில் ஏதும் வாராமல் தொடுத்தமையால் இது செந்தொடை.

பிற வகைகள்: மேலே சொன்ன அடிமுதல் முற்று வரையில் உள்ள தொடை வகைகள் நாற்சீரடிகளிலே அமைவன. இந்த வகைகளையன்றி வேறு சில வகைகளும் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்னும் தொடைகளுக்குக் கூறுவதுண்டு. அவை சிறப்புடையன அல்ல. 
கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என ஐந்து வகைப்படுவன அவை. 

(1) இறுதிச் சீர்களெல்லாம் ஒன்ற அமைப்பது கடை.

"கயன்மலைப் பன்ன கண்ணிணை கரிதே
தடநகில் திவளும் தனிவடம் வெளிதே
நூலினும் துண்ணிடை சிறிதே 
ஆடமைத் தோளிக் கழகோ பெரிதே'
இதில் கடைமுரண் வந்தது.

(2) கடை இரு சீரும் ஒன்றிவரத் தொடுப்பது கடையிணை.

"வேதம் உணர்ந்து விதித்த மதித்தறிந்தே' - இதில் கடையிணை எதுகை வந்தது.

(3) இறுதிச் சீரும் இரண்டாஞ் சீரும் ஒன்றி வரத் தொடுப்பது பின்.
"ஏதுமின்றி யாவுமறிந் தின்புற்றங் காவலொடும்' 
இதில் பின் எதுகை வந்தது. 

(4) முதற் சீரையன்றி மற்ற மூன்றிலும் ஒன்றிவரத் தொடுப்பது கடைக்கூழை.
"ஈசன் திருவடியைத் தேர்ந்து தெளிவார்க்கு'
இதில் கடைக்கூழை மோனை வந்தது. 

(5) இடையில் உள்ள இரண்டாவது மூன்றாவது சீர்கள் ஒன்றிவரத் தொடுப்பது இடைப்புணர் தொடை.
"பாசவினைத் தொல்லையெலாம் 

-ஒல்லையினிற் பாறுமே'

இதில் இடைப்புணர் எதுகை வந்தது. இதுவரைக்கும் சொன்ன தொடைகளின் வகைகளைத் தொகுத்து நினைவு கொள்வது நலம். 

1) அடிதோறும் முதலில் ஒன்றி வருவது அடிமோனை முதலியனவாகத் தொடைக்கு ஏற்பப் பெயர் பெறும். 

(2) அடிதோறும் இறுதிச் சீர் ஒன்றி வருவது கடைமோனை முதலியனவாகப் பெயர் பெறும்.

குறிப்பு: இயைபுத் தொடைக்கு மாத்திரம் தலை கீழாகப் பார்த்துப் பெயர் சொல்ல வேண்டும்.
மற்ற வகைகள் பின்வருமாறு அமையும்: (மோனைத் தொடையைச் சார்த்தி உதாரணம் சொல்லப் பெற்றாலும் மற்றத் தொடைகளுக்கும் பொருத்திக் கொள்ள வேண்டும்).


சீர் -எண்    பெயர்
1-2     இணை மோனை
1-3     பொழிப்பு மோனை 
1-4    ஒரூஉ மோனை
1-2-3     கூழை மோனை
1-3-4    மேற்கதுவாய் மோனை 
1-2-4    கீழ்க்கதுவாய் மோனை
1-2-3-4    முற்று மோனை
3-4     கடையிணை மோனை
2-4    பின் மோனை
2-3-4    கடைக்கூழை மோனை


(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com