இந்த வாரம் கலாரசிகன்

இந்த வாரம் கலாரசிகன்


ஒவ்வொரு முறை நான் திருவரங்கம் போகும்போதும் சமய, இலக்கிய ஆய்வாளர் பிரேமா நந்தகுமாரை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டும் கூட, சந்திக்க இயலவில்லை. கடந்த பெளர்ணமி அன்று அரங்கனின் தரிசனம் முடிந்த கையோடு பிரேமா நந்தகுமாரின் இல்லம் சென்று சந்தித்தேன். 
அடேயப்பா... வீடு முழுவதும் புத்தகங்கள். நான்கு தலைமுறையாக சேகரிக்கப்பட்டிருக்கும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் அவை. பிரேமா நந்தகுமாரின் இல்லத்தை வீடு என்று கூறுவதைவிட, கலைவாணி குடியிருக்கும் நூலகம் என்றுதான் குறிப்பிட வேண்டும். மேலைநாடுகளில் எல்லாம் இதுபோன்ற பாரம்பரிய கட்டடங்களில்தான் நூலகங்கள் அமைந்திருக்கும். அதை நினைவுபடுத்தியது பிரேமா நந்தகுமாரின் இல்லம். 
பிரேமா நந்தகுமார் தனது 79-ஆவது வயதில்கூட முனைப்புடன் சமய, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பது பெரிய விஷயமல்ல. அவருடைய கணவர் நந்தகுமார், தன் மனைவியை விட சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் இருப்பது அரங்கன் இந்தத் தம்பதியருக்கு வழங்கியிருக்கும் பேரருள் என்றுதான் கூற வேண்டும். புத்தகங்களைப் பார்க்க வேண்டும் என்று நான் விழைந்தவுடன், பெரியவர் நந்தகுமார் என்னை ஒவ்வோர் அறைக்கும், முதல் மாடிக்கும் அழைத்துச் சென்று வரிசை வரியாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைக் காட்டியதுடன் நிற்கவில்லை. எந்தப் புத்தகம் யாரால் சேமிக்கப்பட்டது, அந்தப் புத்தகத்தின் சிறப்பென்ன முதலிய விவரங்களையும் விளக்கினார்.


தனது 22 -ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றவர் பிரேமா நந்தகுமார். தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு அரவிந்தரின் சாவித்திரி'. இவரின் தந்தை கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், மகாகவி பாரதியில் ஆழங்காற்பட்ட புலமை உள்ளவர். இன்றுவரை அவரது பாரதியார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இணையான மொழிபெயர்ப்பு இல்லை என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 
பிரேமா நந்தகுமாரை சமய, இலக்கிய ஆய்வுகளில் இன்றைய தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர் என்றுதான் குறிப்பிட வேண்டும். வைணவத்திலும் குறிப்பாக, விசிஷ்டாத்வைதத்தையும், பிரபந்தங்களையும் கற்றுத் தோய்ந்த புலமைமிக்க பிரேமா நந்தகுமார், ஆதிசங்கரர் குறித்தும், அத்வைதம் குறித்தும் அதற்கு இணையான புரிதல் உள்ளவர்.
டான்டேயின் ஸ்ரீஅரவிந்தர்', அரவிந்த ஆசிரமத்தின் அன்னை', சுவாமி விவேகானந்தர்', சாவித்திரியில் ஒரு பயணம்', பாரதியார்', 'டாக்டர் இராதாகிருஷ்ணன்' ஆகிய புத்தகங்கள் காலத்தைக் கடந்து நிற்கும் ஆதாரபூர்வமான பதிவுகள். 
பிரேமா நந்தகுமாரின் தந்தையார் மிகப்பெரிய சிந்தனையாளரும், ஆய்வாளருமாக இருந்தார் என்றால், புகுந்த வீட்டிலும் இவரது இலக்கிய ஆர்வத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவித்தனர் என்பதுதான் சிறப்பு. பிரேமா நந்தகுமாரின் மாமியார் குமுதினி பிரபல நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். அதனால்தான் பிரேமா நந்தகுமாரில் இருந்த எழுத்தாற்றல் எனும் ஜோதி அணையாமல் காப்பாற்றப்பட்டது. அதனால், தமிழும் தமிழகமும் பேறு பெற்றது. 
பிரேமா நந்தகுமாரின் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே எனக்கோர் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. நமது தினமணி வாசகர்களால் ஜட்ஜம்மா' என்று பரவலாக அறியப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பிரேமா நந்தகுமாரை சந்திக்க வந்திருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் அளவளாவல்களிலும் நேரம் போனதே தெரியவில்லை. 
இனிமேல் திருவரங்கம் சென்றால், பிரேமா நந்தகுமாரின் இல்லத்துக்குக் கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

இதற்கு முன்பே பலமுறை எனக்கும் கவிஞர் இளைய பாரதிக்கும் இடையேயான தொடர்பு குறித்து பதிவு செய்திருக்கிறேன். கடந்த வாரம் தி.மு.க. தலைவர் மறைந்த அன்று இரவு நாங்கள் பேசிப் பேசி பொழுது புலர்ந்துவிட்டது. இப்படி தெருவில் நின்றபடி நண்பர்களுடன் அளவளாவி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 


கவிஞர் இளைய பாரதியிடம், கவிஞர் கருணாநந்தம் எழுதிய அண்ணா சில நினைவுகள்' புத்தகம் கேட்டிருந்தேன். அந்தப் புத்தகத்துடன் அவர் சமீபத்தில் வெளியிட்ட கல்யாண்ஜி கவிதைகள்' தொகுப்பையும் எனக்குத் தந்தார். இதற்கு முன்பு கல்யாண்ஜி என்கிற வண்ணதாசனின் கவிதைகள் பல புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தையும் ஒரே தொகுப்பாக இப்போது இளைய பாரதி வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
காலத்திற்கு வணக்கம் கூறி தனது முன்னுரையை எழுதத் தொடங்கிய வண்ணதாசனின் பரிமாணங்கள் பல. அதை அவர் மிக அழகாகப் பதிவு செய்கிறார். 
ஒரு பக்கம் வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த நானே, கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்க, என் கதைகள் சில இடங்களில் கவிதை போலவும், கவிதை பல இடங்களில் கதை போலவும் இருந்தன, இருக்கின்றன. சொல்லப்போனால், இந்த வாழ்வு எப்படி இருக்கிறது? சில சமயங்களில் கதையைப் போல ஒளிந்து கொண்டும், பிறிது சில கணங்களில் கவிதையைப் போல ஒளிந்து கொண்டும்தான் இருக்கிறது'' என்கிற அவரது கூற்றை இங்கே நான் பதிவு செய்வதன் காரணம் என்ன தெரியுமா? கல்யாண்ஜி கவிதைகள்' குறித்த அவரது சுய மதிப்பீடாகத்தான் நான் அந்த வரிகளைப் பார்க்கிறேன். 
இளைய பாரதியின் வ.உ.சி. நூலகம் தனது 15-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் செய்திருக்கும் பொறுப்புள்ள ஒரு தமிழ்ப்பணி கல்யாண்ஜியின் கவிதைகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாக வெளிக்கொண்டு வந்திருப்பது. அன்று மகாகவி பாரதிக்கு இது வாய்க்கவில்லை. சமகால கவிஞர்களின் கவிதைகளும் வருங்காலத்தில் தேடலுக்கு ஆளாகாமல் முறையாகத் தொகுக்கப்
படுதல் மிகவும் அவசியம்.

கல்யாண்ஜி கவிதைகள்' தொகுப்பிலுள்ள அவரது அந்நியமற்ற நதி'யில் இருந்து ஒரு கவிதை:

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத்
திறந்து பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்.
எந்தப் பறவை
எழுதி இருக்கும்
இந்தக் கடிதத்தை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com