கவி பாடலாம் வாங்க - 38

பாக்கள் நான்கு வகை என்பதை முன்பு பார்த்தோம். ஒவ்வொரு வகைப் பாவுக்கும் ஒவ்வோர் ஓசை உண்டு.
கவி பாடலாம் வாங்க - 38


வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன்
7. ஓசைகளின் வகை (1)

பாக்கள் நான்கு வகை என்பதை முன்பு பார்த்தோம். ஒவ்வொரு வகைப் பாவுக்கும் ஒவ்வோர் ஓசை உண்டு. இந்த ஓசையைத் தளையைக் கொண்டு தெரிந்து கொள்ளும் முறையை யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் சொல்கின்றன. தொல்காப்பியம் தளையை வரையறுக்கவில்லை. பாக்களுக்குத் தனித்தனியே உள்ள ஓசையின் இயல்பை, கேட்ட பழக்கத்தைக் கொண்டு அறிய வேண்டும் என்று தொல்காப்பிய உரையில் பேராசிரியர் சொல்கிறார். அந்த ஓசையைத் தெரிந்துகொள்ளக் கூர்மையான செவி வேண்டுமாம். அத்தகைய செவியை எஃகுச் செவி என்று கூறுவர். 
இசையில் ஓர் இராகத்தைப் பாடும்போது இன்ன இராகம் என்று கேட்டவுடனே பழக்கம் உள்ளவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். ஆரோகண அவரோகண சுவரங்களை வைத்துக் கணக்குப் பார்த்த பிறகு தெரிந்து கொள்வதில்லை. காதினால் கேட்டு இன்ன இராகம் என்று தெரிந்த பிறகு அதற்குரிய இலக்கணத்தை ஒட்டிப் பார்த்தால் அது சரியாக அமைந்திருப்பதை உணரலாம். 
இராகத்தைச் சுவரத்தால் வரையறை செய்து தெரிந்து கொள்வது போன்றது, தளையைப் பார்த்து இன்ன ஓசை என்று தெரிந்து கொள்ளும் முறை. வெண்பாவுக்கு உரியது செப்பல் ஓசை. செப்பல் என்பதற்கு விடை கூறுதல் என்று ஒரு பொருள் உண்டு. கேள்வியை வினாவென்றும், விடையைச் செப்பு என்றும் இலக்கண நூல்கள் சொல்லும். முன் இரண்டடி ஒரு கேள்வியைச் சொல்லப் பின் இரண்டடி அதற்குரிய விடையைச் சொல்ல, நடுவில் தனிச்சீரில் ஒரு நிறுத்தத்தைப் பெறும் வகையில் வெண்பா அமைந்திருக்கிறது. அதனால் செப்பலோசை என வந்ததென்று தோன்றுகிறது.
அப்பிலே தோய்த்திட் டடித்தடித்து நாமதனைத்
தப்பினால் அஃதுநமைத் தப்பாதோ-செப்பக்கேள்
இக்கலிங்கம் போனால்பின் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்க முண்டே துணை '
என்பதில் இப்படி அமைந்திருப்பதைக் காணலாம். வெண்பாவின் ஓசையை வெள்ளோசை என்றும் சொல்வதுண்டு.
ஆசிரியப்பாவின் ஓசை அகவலோசை. ஆசிரியப்பாவுக்கே அகவற்பா என்று ஒரு பெயர் உண்டல்லவா? அது அந்த ஓசையினால் வந்ததுதான். அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது. ஒவ்வோரடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருக்கிறதுதான் காரணம் போலும்.
கலிப்பாவின் ஓசை துள்ளலோசை என்று பெயர் பெறும். அலைகள் துள்ளுவது போல இருப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். வஞ்சிப்பாவுக்கு உரியது தூங்கலோசை. தூங்கல்-தொங்குதல். கனத்தால் தொங்குவது போல நெடுஞ் சீர்களால் அமைந்திருப்பதனால் இந்தப் பெயர் வந்திருக்குமோ என்று தோன்றுகிறது. 
இந்த நான்கு வகை. ஓசைகளில் ஒவ்வொன்றும் மூன்று மூன்றாகப் பிரிந்து பெயர் பெறும். செப்பலோசையானது ஏந்திசைச் செப்பலோசை, தூங்கிசைச் செப்பலோசை, ஒழுகிசைச் செப்பலோசை என்று மூன்றாகும். 
(1) வெண்சீர் வெண்டளை மட்டும் வரும் வெண்பாவில் அமையும் ஓசை ஏந்திசைப் செப்பல் எனப்படும்.
வெண்சீர் வெண்டளை யால்வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்'
என்பது பழைய இலக்கணச் சூத்திரம்.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
இந்தப் பாட்டில் வெண்சீர் வெண்டளையே வந்தவாறு காண்க. இதற்கு வாய்பாடு அமைத்தால்,
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு
என்று அமையும். ஈற்றுச் சீர் அல்லாதன யாவும் காய்ச்சீர்களாக அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
(2) இயற்சீர் வெண்டளை மட்டும் அமைந்து வரும் வெண்பாக்களில் அமைவது தூங்கிசைச் செப்பலோசை,
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்'
இதில் ஈற்றுச் சீரைத் தவிர மற்ற எல்லாம் இயற்சீராகிய ஆசிரிய உரிச்சீர்களாகவே வந்தன. ஆதலின், இயற்சீர் வெண்டளையே அமைந்தது.
கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்
என்று வாய்பாடு அமைத்துப் பார்த்தால் மாவும் விளமுமே வந்தது புலனாகும். 
(3) இருவகை வெண்டளையும் கலந்து வருவது ஒழுகிசைச் செப்பலோசை.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இந்தப் பாட்டில் அகர-முதல, முதல-எழுத் தெல்லாம், ஆதி-பகவன், பகவன் - முதற்றே, முதற்றே-உலகு என்பவற்றில் மாமுன் நிரை வந்தது. இது இயற்சீர் வெண்டளை. எழுத்தெல்லாம்-ஆதி என்பதில் காய்முன் நேர் வந்து வெண்சீர் வெண்டளை ஆயிற்று. இப்படி இருவகை வெண்டளையும் விரவி வந்ததனால் இது ஒழுகிசைச் செப்பலோசை ஆயிற்று. 
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com