காலத்தை வென்ற கவிஞானி நிஜாமி! 

நிஜாமியின் படைப்புகளில் உலகப் புகழ்பெற்ற படைப்பாக லைலா மஜ்னூன் திகழ்ந்தாலும் கூட, அவரது குஸ்ரூ வ ஷிரின்' என்ற காப்பியம் லைலா மஜ்னூனை விட பலமடங்கு விஞ்சியது என்று சொல்லலாம்
காலத்தை வென்ற கவிஞானி நிஜாமி! 

சென்றவாரத் தொடர்ச்சி...
நிஜாமியின் படைப்புகளில் உலகப் புகழ்பெற்ற படைப்பாக லைலா மஜ்னூன் திகழ்ந்தாலும் கூட, அவரது குஸ்ரூ வ ஷிரின்' என்ற காப்பியம் லைலா மஜ்னூனை விட பலமடங்கு விஞ்சியது என்று சொல்லலாம். ஏழாயிரம் பாடல்களைக் கொண்ட காப்பியமான குஸ்ரூ வ ஷிரினி'ன் கதை சுருக்கம் வருமாறு:
சாசானிய மன்னன் குஸ்ரூ பர்வேஸின் ஆசை நாயகியாய் பணிக்கப்பட்டிருந்தவள் பேரழகி ஷிரின். அவள் மீது சிற்பக்கலை மேதையான பர்ஹத்துக்கு காதல் மலர்கிறது. ஷிரினின் மனமும் பர்ஹத்தைச் சுற்றியே சிறகடிக்கிறது. குஸ்ரூவுக்கோ ஷிரினை இழந்து விடுவோமோ என்ற கவலை.
பர்ஹத்தைக் கொல்லாமல் கொல்ல வழி தேடுகிறான். சூழ்ச்சி மதி கொண்ட மந்திரி ஒருவன் வழி சொல்கிறான். பிரம்மாண்டமான பீஸ்தூண் மலையைக் குடைந்து, ஆறு கடந்து செல்லும் பாதை அமைக்க வேண்டும். கரை ஓரங்கள் முழுவதும் சிற்பங்கள் செதுக்க வேண்டும். இதைச் செய்து முடித்தால் ஷிரின் கிடைப்பாள் என அரசன் குஸ்ரூ சிற்பி பர்ஹத்திடம் சொல்கிறான்.
சிற்பியின் நெஞ்சில் கனன்றெழுந்த காதலின் வேகம், மலையைக் குடைந்து பாதை அமைத்து, ஓரங்களைச் சிற்பங்களால் நிறைத்தது. சிற்பி வென்று விடுவான் என்பதை அறிந்து, குமைந்தான் மன்னன் குஸ்ரூ.
அதிகார மன்னவனின் அந்தப்புர சோகத்தைப் போக்க ஒரு சதிகாரக் கிழவி முன்வருகிறாள். கவலைப்படாதே மன்னா! கல்தச்சன் பர்ஹத்தை நான் ஒழித்துவிடுகிறேன்'' என்கிறாள்.
சதிகாரக் கிழவி கல்லிலே காதல் வண்ணம் கண்டு கொண்டிருந்த பர்ஹத்திடம், பரிதாபத்திற்குரியவனே! இன்னுமா அந்த ஷிரின் பெயரை நீ உச்சரித்துக் கொண்டிருக்கிறாய்? உன் மூச்சில் கலந்தவள், தன் மூச்சை முடித்து, மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதே'' என்றாள்.
நிஜத்தை மறைத்து விஷத்தைக் கக்கிய கிழவியின் சொற்கள் செவியில் விழுந்த கணமே, பர்ஹத்திடமிருந்து ஆழிய சோகத்தின் ஆழிப்பேரலை, ஒரு கவிதையாய் வெளிப்படுகிறது. அவன் கவிதையோடு, வாழ்வையும் முடித்துக்கொள்கிறான்.
ஹப்தே பைகார்' (ஏழு அழகிகள்) என்ற நிஜாமியின் காப்பியம், இன்றைய காலத்து ஹாரிபாட்டர் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் பிரம்மாண்டமும், அழகியலும் கொண்டது.
காப்பிய நாயகன் பஹ்ராம், தனது தோழி ஃபித்னாவோடு வேட்டைக்குப் போகிறான். ஃபித்னா என்றாலே குழப்பம், குறும்பு என்று பொருள். அவளும் பெயருக்கேற்ற பெண்தான். அவளிடம் ஒரு பாராட்டையேனும் பெற வேண்டும் என்பது பஹ்ராமின் இலட்சியம். அவளோ மறந்தும் பிறரைப் பாராட்ட மாட்டாள்.
காட்டில் ஒரு கழுதை நிற்கிறது. இதை எப்படி அம்பெய்து வேட்டையாட வேண்டுமென்று சொல். செய்து காட்டுகிறேன்'' என்கிறான் பஹ்ராம். அப்படியா? ஒரே அம்பில் அந்தக் கழுதையின் கால் குளம்பையும், காது மடலையும் உன்னால் துளைக்க முடியுமா?'' என்கிறாள் ஃபித்னா.
சரி'' என்ற பஹ்ராம், ஒரு மண்ணுருண்டையை அம்பில் கோத்து கழுதையின் காதுக்கு அனுப்புகிறான். காதுக்குள் புகுந்த மண்ணை கழுதை காலால் தட்டிவிடும் கணத்தில், அடுத்த அம்பை செலுத்துகிறான். கழுதையின் கால் குளம்பும், காதும் ஒரே அம்பால் தைக்கப்படுகிறது.
அப்படியும் ஃபித்னா பாராட்டவில்லை. பழக்கம் இருந்தால் இது எளியதே'' என்கிறாள். சினம் தலைக்கேறிய பஹ்ராம், இவளை மலை உச்சிக்கு அழைத்துப் போய் கொல்லுங்கள்'' என்கிறான். அமைச்சர் அவனை சமாதானப்படுத்தி, அவளை ஒரு மலைக்கிராமத்தில் ஒரு மாடியில் வசிக்கச் சொல்கிறார்.
ஒரு பசுவும், கன்றும் அவள் வாழ்வாதாரத்திற்காகக் கொடுக்கப்பட்டன. அவள் அந்தக் கன்றுக் குட்டியைத் தூக்கிக்கொண்டு மாடியில் ஏறுவதும், இறங்குவதும் வழக்கம். கன்று வளர்ந்து பெரிய மாடாக ஆன பிறகும் கூட, அதை மாடிக்குத் தூக்கிச் செல்வதும், இறங்குவதுமாக இருந்தாள்.
பல காலம் கழித்து, அவ்வூர் வழியே சென்ற பஹ்ராம், ஒரு பெரிய மாட்டைத் தூக்கிக்கொண்டு ஒரு பெண் மாடியிலிருந்து இறங்குவதைப் பார்த்து, புர்காவிலிருந்த அவளிடம் போய், எப்படி உன்னால் இது முடிகிறது?'' என்று அவன் கேட்க, அவளோ, பழக்கம் இருந்தால் எதுவும் எளிதுதான்'' என்கிறாள். முகத்திரையை விலக்கிப் பார்த்தால், அவள் பழைய தோழி ஃபித்னா. பிறகு, அவன் ஏழு அழகிகளை மணமுடிப்பதாகக் கதை, ஏறத்தாழ இது சீவக சிந்தாமணியை நினைவூட்டும்.
மகா அலெக்சாண்டர் என வரலாறு போற்றுகின்ற, உலகை வென்ற மாவீரனின் சரித்திரம்தான், நிஜாமியின் சிக்கந்தர் நாமா'.
பாபிலோன் நகரில் அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் எழுதியதாக, நிஜாமி எழுதிய கவிதை ஆழ்ந்த உண்மைகளின் அணிவகுப்பாகும்.
தாய் வயிற்றிலிருந்து நிர்வாணமாகவே வந்தேன். 
பூமியின் வயிற்றுக்குள் என்னை
நிர்வாணமாகவே திருப்பி விடுங்கள்.
வந்தது போல் தானே போக வேண்டும்?
மலையில் இருந்த பறவை
பறந்து செல்லும்போது,
மலைக்கு அது தந்தது என்ன?
மலையிடம் அது கொண்டது என்ன?'
என்கிறார். நிஜாமியின் கவித்துவம், நிஜாம்களையும், நவாப்களையும், மகாராஜாக்களையும் ஆட்சி செய்தது. காலத்தை வென்ற கவிஞானியாக, நிஜாமி நினைவில் வாழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com