நிலவின் நிழலோ உன் வதனம்?

உவமைக் கவிஞர்' என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா, சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும் பயிற்சியுமுடையவர். புறநானூறு என்பதைப் புயநானூறு' என்று தன் மகன் மழலை
நிலவின் நிழலோ உன் வதனம்?



உவமைக் கவிஞர்' என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா, சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும் பயிற்சியுமுடையவர். புறநானூறு என்பதைப் புயநானூறு' என்று தன் மகன் மழலை மொழியிற் சொன்னதைக் கேட்டு, அதற்கும் சுவையானதொரு விளக்கம் தந்து கவிதை பாடியவர்.
விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும்
உறுப்புகள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம்
புறநா னூற்றைப் புயநா னூறெனக்
கூறுவ தாலே குற்ற மில்லை 
(தேன்மழை, பக்.171-172)
இவ்வாறே நற்றிணை, குறுந்தொகை முதலான அகத்திணை நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.
குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே; நெருங்கி நீண்டு
நிறந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ? 
(தே.ம. பக்.68)
மாடத்திலும் கூடத்திலும்' என்னும் கவிதையில் மாதவியைக் கோவலன் இப்படி வருணிப்பதாகப் பாடுகிறார் சுரதா. அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்று பிறிதொரு பெயர் வழங்குவதை இதில் பொன்போல் பொதிந்திருக்கிறார் அவர். மேலும்,
பூத்த சோலைப் பூங்குயில் போன்றவள்
சாயல் குறுந்தொகைத் தமிழே;
நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே! 
(தே.ம. ப.261)
என்பதும் அவர் பாடலே.
கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
கற்பனைபோற் சிறந்தவளே! (தே.ம.ப.60)
என்று தொகைநூல்கள் அனைத்தையும் ஒரே கொத்தாகக் கருத்தில் இருத்தி அவர் உவமிக்கும் இடமும் உண்டு. இத்தகைய ஈடுபாட்டோடு சங்க இலக்கியத்தில் தமக்கிருந்த பயிற்சியைப் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார் சுரதா.
சினந்தணிந்த செங்கதிரோன்' என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்;
மனந்திறந்து சொல்லுகிறேன் சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு
(சுரதா' இதழ், 15-04-1968, ப.5)
என்பது கவிஞர் சுரதாவின் வாக்கு மூலம். கவிஞர் எழில்முதல்வனின் இனிக்கும் நினைவுகள்' என்னும் கவிதை நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார் அவர். 
சுடர்சினம் தணிந்து குன்றம் சேர (195)
கதிர்சினந் தணிந்த கையறு மாலை (387)
எனக் குறுந்தொகையில் வருவனவற்றை அறிந்திருந்ததாலேயே அவர் இங்ஙனம் பாடினார். இனி, சங்க நூல்களில் அவருக்கிருந்த மிக நுட்பமான புலமைக்கு ஒரு சான்று காட்டுவோம். அவருக்குப் பொன்றாப் புகழ்குவித்த திரையிசைப் பாடல்களுள் ஒன்று,
அமுதும் தேனும் எதற்கு? - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
எனத் தொடங்குவதாகும். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பின்றி மனம் களிப்புறச் செய்யும் பாடல் அது. அதில்,
நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்று காதலியின் அழகில் மனங்கிறங்கிப் பாடுகிறான் காதலன். நிழல் படிந்தோ ஆடை அழுக்காகும்' (தே.ம. ப.184) என்று பாடிய சுரதா, இங்கு நிலவின் நிழலோ?' என்று பாடியதன் பொருள் என்ன? நிலவின் ஒளியே என்று பாடியிருக்கலாமே - என நினைக்கத் தோன்றும்.
ஆம், கவிஞர் சுரதா, ஒளி' என்னும் பொருளில் தான் நிழல்' என்பதை இங்கு எடுத்தாண்டிருக்கிறார். அவர் வாக்கு மூலத்தில் வருவதுபோலத்தான் சங்கப் பாடல்களில் அவருக்கிருந்த தேர்ச்சியின் விளைவே இது. 
சரி, சங்கப் பாடல்களில் நிழல் என்பதற்கு ஒளி என்னும் பொருள் எங்கே கிடைக்கிறது? நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி' என நற்றிணையிலும் (371-6), நிழல் திகழ் நீல நாகம்' எனச் சிறுபாணாற்றுப்படையிலும் (95) வருவதை அறிந்தே பாடினார் அவர். 


இந்த நுட்பத்தை உணரும் போது, நம் உவமைக் கவிஞரை இன்னும் ஒரு முழம் மேலே உயர்த்திக் கொண்டாடத் தோன்றுகிறது அல்லவா?
- முனைவர் ம.பெ.சீனிவாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com