இந்த வாரம் கலாரசிகன்

கடந்த ஞாயிறு அன்று ஊற்றங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரியன், ஐயாறு ஆகியோருடன்
இந்த வாரம் கலாரசிகன்

கடந்த ஞாயிறு அன்று ஊற்றங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரியன், ஐயாறு ஆகியோருடன் சென்றிருந்த எனக்குப் பல வியப்புகள் காத்துக் கொண்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் இத்துணை சிறப்பாக ஆண்டுதோறும் இலக்கிய விழா கொண்டாடுகிறார்கள் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த விழாவுக்குப் பெருந்திரளாக இலக்கிய ஆர்வலர்களும், மாணவர்களும் கலந்துகொள்வது அதைவிடச் சிறப்பு.
முத்தமிழ் இலக்கியப் பேரவை ஒருபுறம் இருக்க, ஊற்றங்கரை என்கிற சிறிய ஊரில் மிகப்பெரிய கல்விப் புரட்சி நடந்து கொண்டிருப்பது பெரிய அளவிற்குப் பரவலாக வெளியில் தெரியாமல் இருக்கிறது. ஆசிரியர் பணிக்காக ஊற்றங்கரை அரசுப் பள்ளிக்கு வந்த வே.சந்திரசேகரன் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு தொடங்கிய "ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்'தான் ஊற்றங்கரையின் முகத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. ஸ்ரீவித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி ஆகட்டும், அதே பெயரில் அமைந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகட்டும் இவை எல்லாமே வெளிமாவட்டங்களிலிருந்து மாணவர்களை ஊற்றங்கரையை நோக்கிப் படையெடுக்க வைத்திருக்கின்றன. அதற்குக் காரணம், ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன்தான்.
வேறு எந்த ஊரிலாவது தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் ஒருவர், அரசுப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருப்பதைக் காண முடியுமா? தான் வேலை பார்த்த ஊற்றங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சியிலும், கட்டமைப்பு மேம்பாட்டிலும் வே.சந்திரசேகரன் முழு ஈடுபாடு காட்டுவது ஊற்றங்கரையையே மேம்படுத்தி இருக்கிறது. ஊற்றங்கரையிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் பல வளர்ச்சிப் பணிகளில் ஸ்ரீவித்யா மந்திர்அறக்கட்டளை பங்களிப்பு நல்கி வருகிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
ஊற்றங்கரைக்குச் சென்றிருந்தபோது எனக்கு இன்னொரு வித்தியாசமான அனுபவம். ஊற்றங்கரை பகுதியிலுள்ள அனைத்து ஊடக நிருபர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒற்றுமையாகவும், நட்புறவுடனும் ஊற்றங்கரை பகுதியில் நிருபர்கள் மிகுந்த உற்சாகத்தோடு முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பது பெருமிதம் அளித்தது. ஊடகவியலாளர்கள் இலக்கிய ஈடுபாடு கொள்ளும்போதுதான் மொழி உண்மையான வளர்ச்சி அடையும் என்பதை செயல்படுத்திக் காட்டுகிறார்கள் ஊற்றங்கரை ஊடகவியலாளர்கள். அவர்களுடன் அளவளாவி மகிழ்வதற்காகவே இன்னொரு முறை ஊற்றங்கரைக்குப் பயணிக்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

கல்வெட்டு அறிஞர் செ. இராசு கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆகியவற்றில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அறிஞர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களையும், 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், எழுதியிருப்பது மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் தேடி அலைந்து இவர் நூற்றுக்கணக்கான செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து அவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார்.
அவரது "நமது கச்சத்தீவில்' என்கிற புத்தகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் இப்போது மூன்றாவது பதிப்பு கண்டிருக்கிறது.
கச்சத்தீவு குறித்து அனைத்துத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள புத்தகம் இது. தமிழக வரலாறு குறித்த அக்கறை உள்ள ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணம்.
இராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. வடகிழக்கில் ஆள் அரவமே இல்லாத, உயரம் குறைவான ஒரு குட்டித் தீவுதான் கச்சத்தீவு. கோழி முட்டை வடிவில் உள்ள இந்தத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர், 20 சென்ட். இந்திய அளவைத் துறையினர் 1784, 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை அளந்து சர்வே எண்: 1250 என்று குறித்து, அதை சிறு கல் தூணிலும் பொறித்துள்ளனர். தங்கள் வரைபடங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தீவுக்கு "கச்சத்தீவு' என்று பெயர் வந்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பசுமை நிறைந்த இந்தத் தீவு "பச்சைத் தீவு' என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி "கச்சத் தீவாகி' விட்டது என்பார் உண்டு.
"கச்சம்' என்றால் ஆமை என்று பொருள். இந்தப் பகுதியில் மிகுதியாகக் கிடைக்கும் சிறு மீனுக்கு "கச்சா' என்று பெயர். ஒருவேளை அதனடிப்படையில் ஆளில்லாத இந்தத் தீவுக்குக் "கச்சத்தீவு' என்கிற பெயர் வந்திருக்கக்கூடும்.
இராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு உரித்தான கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்து, இராமநாதபுரம் மரைக்காயர்களும் இன்னும் சிலரும் மருந்து மூலிகைகள் பயிரிட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு ஏராளமாகக் கிடைக்கும் கிளிஞ்சல்கள் மூலம் சுண்ணாம்பு தயாரிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இராமேஸ்வரம் கோயிலுக்குரிய நந்தவனம் கச்சத்தீவில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.
நல்ல மேய்ச்சல் நிலம் இருப்பதால், இராமேஸ்வரம் கோயில் கால்நடைகள் கூட, இங்கு மேய்ச்சலுக்குக் கொண்டுவரப்பட்டதாகப் பதிவுகள் காணப்படுகின்றன. கச்சத்தீவின் வருவாயைக் கணக்கு வைப்பதற்கென்றே இராமநாதபுரம் அரசரின் "இராமநாத விலாசம்' அரண்மனையில் தனி எழுத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை-சீனாவின் கூட்டு இராணுவம் கச்சத்தீவில் படைக்கலம் அமைக்குமேயானால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகிவிடும். அதனால், கச்சத்தீவை மீட்பது என்பது மிக மிக அவசியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்தப் புத்தகத்துக்குப் பதிப்புரை எழுதியிருக்கும் வே.சிதம்பரம் குறிப்பிட்டிருப்பது போல, புலவர் செ. இராசுவின் "நமது கச்சத்தீவு' என்கிற இந்தப் புத்தகம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, மத்திய ஆட்சியில் இருப்பவர்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். கச்சத்தீவு குறித்த மற்றுமொரு நல்ல பதிவு இது.

முகநூலில் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு கவிதை இது. இதையே இந்த வாரத் தேர்வாக வைத்துக் கொள்கிறேன்.
வெளிநாட்டில் இருக்கும்
அப்பா அனுப்பிய
ஐஃபோன் இது என்றாள்
ஒரு சிறுமி
என்னிடம் ஐஃபோன் இல்லை
அப்பா இருக்கிறார் என்றாள்
அவள் தோழி!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com