மூலமும் மொழிபெயர்ப்பும்!

வான்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி. இராவணனைப் போரில் வென்று இலங்காபுரியை விபீடணனுக்குப் பரிசாக இராமபிரான் வழங்குகிறார். விபீடணனை இலங்கையின் மன்னராக முடிசூட்டும்படி
மூலமும் மொழிபெயர்ப்பும்!

வான்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி. இராவணனைப் போரில் வென்று இலங்காபுரியை விபீடணனுக்குப் பரிசாக இராமபிரான் வழங்குகிறார். விபீடணனை இலங்கையின் மன்னராக முடிசூட்டும்படி இலக்குவனைப் பணிக்கிறார்.
 "விபீடணா! நீ என்னைச் சரணடைந்தபோது நான் உனக்குத் தந்த வாக்குறுதிப்படி "இந்தா விபீடணா இலங்காபுரி ராஜ்ஜியம்'' என்று இராமன் கூறுகிறார். அப்போது விபீடணன் இலங்கையை இராமபிரானே ஆள வேண்டுகிறார்.
 இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் என்ன? என்று அப்போது இலக்குவனுக்கு ஒரு சபலம் தட்டுகிறது. குறிப்பால் அதனை உணர்ந்த இராமர், "பொன்மயமான இலங்கை மீது என் மனம் லயிக்கவில்லை. எனது தாய் மண்ணான அயோத்தி மீதே எனது ஆர்வமும் அன்பும் அலைபாய்கிறது'' என்பதை,
 "ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காத் அபிகரீயஸி''
 என்கிறார்.
 இந்த வடமொழி ஸ்லோகத்தை மகாகவி பாரதியார் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்கிறார். மகாகவி பாரதியாரின் அருகில் அவருடைய நண்பர் பரலி சு.நெல்லையப்பரும் இருக்கிறார்.
 வடமொழி மூல ஸ்லோகத்தில் ஜனனீ (தாய்க்கும்), ஜன்மபூமி (தாய் நாட்டுக்கும்), ஸ்வர்காத் (சொர்க்கத்திற்கும்), கரீயஸி (சிறந்தது) ஆகிய நான்கு சொற்களுக்கும் எவ்விதச் சிறப்பு அடைமொழியும் கூறப்படவில்லை.
 ஆனால், இதற்கு மகாகவி பாரதியார் செய்த தமிழ் மொழிபெயர்ப்பில் நான்கு சொற்களுக்கும் நல்லதொரு சிறப்பு அடைமொழி தரப்பட்டுள்ளது. இதனால், மூலத்தை விட மொழிபெயர்ப்புக் கவிதை அழகோடு மேலும் சிறப்பாக இருக்கிறது.
 "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
 நற்றவ வானினும் நனி சிறந்தனவே''
 என்பது பாரதியின் மொழிபெயர்ப்புக் கவிதையாகும். இதனை நோக்கும்போது, மகாகவி பாரதியாரின் ரசனையும் கவியுள்ளமும் மேலோங்கி நிற்பதைக் காணமுடிகிறது.
 மகாகவி பாரதியார் புதுவையில் நடத்திய "சூரியோதயம்' வாரப் பத்திரிகையின் முகப்பு வாசகமாக இந்த மொழிபெயர்ப்புக் கவிதை முதலில் வெளிவந்தது. அப்போது பரலி சு.நெல்லையப்பர் "சூரியோதயம்' வாரப் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
 இந்த மொழிபெயர்ப்புக் கவிதையின் கீழே "சுருதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வரிக் கவிதையை பரலி சு.நெல்லையப்பர் 1917இல் பதிப்பித்த "நாட்டுப் பாட்டின்' முதல் பதிப்பின் முகப்பட்டையில் முதலில் வெளியிட்டார்.
 மகாகவி பாரதியாரின் மொழிபெயர்ப்பு ஆற்றலுக்கு இந்த நாலுவரிப் பாடல் ஓர் அழகிய முன்னுதாரணம்.
 
 - எதிரொலி எஸ்.விசுவநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com