இந்த வார கலாரசிகன்

ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து குறித்து ஏற்கெனவே நான் பதிவு செய்திருக்கிறேன். சென்னையை அடுத்த போரூரில் இவர் நடத்தும் "திருக்குறள் வாழ்வியல் மன்றம்' பள்ளிச் சிறார்கள் மத்தியில் திருக்குறளை எடுத்துச்

ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து குறித்து ஏற்கெனவே நான் பதிவு செய்திருக்கிறேன். சென்னையை அடுத்த போரூரில் இவர் நடத்தும் "திருக்குறள் வாழ்வியல் மன்றம்' பள்ளிச் சிறார்கள் மத்தியில் திருக்குறளை எடுத்துச் செல்வதில் மிகப்பெரிய முனைப்புக் காட்டுகிறது. சக ஆட்டோ ஓட்டுநர்களும் இவருக்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதுதான் அதை விடச் சிறப்பு. 
ஓட்டுநர் வள்ளிமுத்து என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலைச் சொன்னார். சமீபத்தில், ராமாபுரத்திலுள்ள பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் இவரது ஆட்டோவில் சவாரி சென்றிருக்கிறார். நிச்சயமாக அவர் பொறியியல் பட்டதாரியாக இருக்க வேண்டும். அவரை இறக்கிவிட்டபோது 38 ரூபாய் ஆட்டோவுக்கான கட்டணம் என்று சொன்னபோது, அவர் 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி
யிருக்கிறார்.
ஓட்டுநர் வள்ளிமுத்து அவருக்குத் தரவேண்டிய 62 ரூபாய் பாக்கித் தொகையைக் கொடுத்தபோது, அந்தப் பெண்மணியின் நடவடிக்கை அவரைச் சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது. ரூ.100இல் இருந்து 38 ரூபாயைக் கழிப்பதற்கு தனது செல்லிடப்பேசியில் அவர் கணக்குப் போட்டபோது, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த வள்ளிமுத்து, அவரிடம் கேட்டாராம்: "இதுக்கெல்லாமா மேடம் கணக்குப் போட்டுப் பாக்கணும். மனக்கணக்குப் போட முடியாதா?' 
இன்றைய கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.


முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றியிருக்கும் ராஜ்கண்ணனின் தந்தையாரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தபோது, ராஜ்கண்ணன் "சமரன்' இதழ்களின் தொகுப்பை என்னிடம் தந்தார். இதற்கு முன்பே ஒருமுறை "சமரன்' இதழ் குறித்து நான் பதிவு செய்திருப்பது நினைவுக்கு வந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு "சமரன்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இப்போது வ.விஜயபாஸ்கரனின் இளவல் வ.மோகனகிருஷ்ணனால் மீண்டும் தொகுத்து "சமரன் களஞ்சியம்' என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நின்றுபோயிருந்த சமரனின் பழைய இதழ்கள் சிலவற்றை நான் மதுரையில் பள்ளி மாணவனாக இருந்தபோது படித்திருக்கிறேன். மதுரையில், பெரியவர் எஸ்.ஆர்.கே. இன் வீட்டில் படித்ததாக நினைவு. 1962 முதல் 1964 வரையிலான இரண்டாண்டுகள் மட்டும்தான் "சமரன்' வெளிவந்தது. அதில் அன்றைய இடதுசாரி இயக்க முன்னோடிகள் பலருடைய கட்டுரைகள் வெளிவந்தன. குறிப்பாக, ஜெயகாந்தன் எழுதிய பல வீரியமான கட்டுரைகள் சமரனில்தான் காணக்கிடைக்கின்றன.
வ.விஜயபாஸ்கரன் ஒரு மிகப்பெரிய அரசியல், சமுதாய, இலக்கிய ஆளுமை. இவர் தொடங்கி நடத்திய தமிழ் இலக்கிய இதழ் "சரஸ்வதி'. மாத இதழாக வந்த "சரஸ்வதி' நின்ற பிறகு, வார இதழாக "சமரன்' அவரால் தொடங்கப்பட்டது. இதுகுறித்த வல்லிக்கண்ணனின் பதிவை "சமரன் களஞ்சியம்' தொகுப்பில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனும், இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் எழுதியிருக்கும் அணிந்துரைகள் அற்புதமானவை. இந்தப் புத்தகம் குறித்து நான் அதிகமாக எதுவும் எழுத விரும்பவில்லை. அவர்கள் இருவரும் தங்களது அணிந்துரையில் பதிவு செய்திருப்பதை அப்படியே வாசகர்களுக்குத் தந்து விடுகிறேன். முதலில் நாஞ்சில் நாடனின் பதிவு:
""எளிமையான தமிழில், நேரடியான துணிவில் அமைந்திருந்தன சமரனில் வெளியான அனைத்துக் கட்டுரைகளுமே! எழுதியவர்கள் எவருமே சாமானியமானவர் இல்லை. ஜெயகாந்தன், எஸ்.இராமகிருஷ்ணன், கே.பாலதண்டாயுதம், எம்.என். கோவிந்தன், தா.பாண்டியன், டி.செல்வராஜ், கே.சி.எஸ்.அருணாசலம், மோகன் குமாரமங்கலம், ஆர்.கே.பாண்டுரங்கன், வல்லிக்கண்ணன் எனும் ஆளுமைகள் மற்றும் பலர் எழுதிய 97 கட்டுரைகளைத் தொகுத்து 576 பக்கங்களில் வெளியாகின்றது விஜய பாஸ்கரனின் "சமரன் களஞ்சியம்.
எனதாச்சரியம், ஐம்பதாண்டுகளுக்கு முன்பு "சமரன்' எனும் அரசியல் இதழ் வெளியிட்ட பல கட்டுரைகள் இன்றும் பயனுள்ளதாகவும், பொருளுள்ளதாகவும் இருக்கின்றன என்பதே! அதுவே தான் இன்று"சமரன் களஞ்சியம்' வெளியாவதன் நியாயமும் தேவையும் ஆகும்.''
"ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்' என்று தலைப்பு கொடுத்து அணிந்துரை அளித்திருக்கிறார் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன். அவரது பதிவு:
""சமரன் பத்திரிகை தொடங்கியது அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலைப் பதிய வேண்டியது முக்கியமாயிற்று. 
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம்.
எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை, பத்திரிகைகள் சமீபகாலம் வரை இழந்திருக்கின்றன, அதன் பாதிப்புகள் என்ன என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த "சமரன்' கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும். தன்னளவுக்கு, தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.
பேச வேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும், அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.''
சமரன் இதழ்களின் தொகுப்பை பதிப்பித்திருப்பதன் மூலம் வ.மோகனகிருஷ்ணன் தமிழினத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றி இருக்கிறார். இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது "மெயின் ஸ்ட்ரீம்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கத்தின் ஒரு பகுதி, வல்லிக்கண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, சமரன் இதழில் வெளியிடப்பட்டிருப்பது. 
அரசியல், சமூகக் கண்ணோட்டமுடைய இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயமாகப் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு இது.

சில நாள்களுக்கு முன்பு வேலூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு மரத்தடியில் வாகனத்தை நிறுத்தினோம். கண்ணுக்கெட்டும் தூரத்தில் "சமத்துவபுரம்' ஒன்று காணப்பட்டது. சாதியற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்கிற நோக்கில் சாதி ரீதியாக வீடுகள் ஒதுக்கப்பட்டு, சமத்துவபுரங்கள் உருவாக்கப்படுவதை நினைத்தபோது சிரிப்பு வந்தது. 
சமத்துவபுரம் குறித்து எப்போதோ படித்த மூன்றுவரிக் கவிதை நினைவுக்கு வந்தது. எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் பாராட்டுகள்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி...
உறுதி தந்தது அரசு
சமத்துவபுரம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com