கவி பாடலாம் வாங்க - 10: எண்சீர் விருத்தம்

கவி பாடலாம் வாங்க - 10: எண்சீர் விருத்தம்

தமிழில் சித்தர் பாடல்கள் என்று ஒரு வகையான நூல் உண்டு. போகர், அகத்தியர், ரோமரிஷி, புலிப்பாணி என்பன போன்ற பெயர்களையுடைய சித்தர்கள் உண்டு.

தமிழில் சித்தர் பாடல்கள் என்று ஒரு வகையான நூல் உண்டு. போகர், அகத்தியர், ரோமரிஷி, புலிப்பாணி என்பன போன்ற பெயர்களையுடைய சித்தர்கள் உண்டு. பதினெண் சித்தர் ஞானக்கோவை என்ற நூலில் சித்தர் பாடல்கள் எனப் பல வகைப் பாடல்களைக் காணலாம். வைத்திய நூல்களில் பல, சித்தர்கள் பாடியவை.
சித்தர் பாடல்களில் பெரும்பாலானவை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவே இருக்கின்றன. பாடுவதற்கு எளியது இந்த விருத்தம் ""கேளப்பா, ஆளப்பா'' என்று எதுகையில் தொடர்கள் வரும் பாடலைப் பார்த்தால், சித்தர் பாட்டென்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். "பாரதி அறுபத்தாறு' என்பதில் உள்ள கவிகள் எல்லாம் இவ்வகையைச் சார்ந்தனவே. இந்த வகை விருத்தத்தில் ஓரடியில் முதல் பாதியும் மறு பாதியும் ஒத்து நிற்கும். ஆதலால், ஐந்தாவது சீரில் - அதாவது இரண்டாவது பாதி தொடங்கும் இடத்தில் மோனை அமையும்.
"காப்பியமும் தோத்திரமும் புலவர் பாடிக்
கவின்செய்யப் பேரழகு பூண்ட அன்னை
யாப்பியலும் அணிஇயலும் பொருளின் பாங்கும்
இனிமையுற அமைந்தசெல்வி, மன்னர் பல்லோர்
பாப்பயிலத் தொண்டுகொண்ட தெய்வப் பாவை,
பழம்புலவோர் குழுவருளைப் பெறவைத் தாண்டு
பூப்பயிலும் பெரும்புகழ்சேர் தமிழாம் தேவி
புதுமலர்த்தாள் சிரம்வைத்துப் போற்றி வாழ்வாம்.'
இந்தப் பாட்டில் ஒவ்வோரடியிலும் எட்டுச் சீர்கள் இருக்கின்றன. அரையடியில் முன் இரண்டு சீரும் காய்ச்சீர்கள்; நேரை இறுதியில் உடைய மூவகைச் சீர்கள். பின் இரண்டு சீரும் மாச்சீர்கள். நேரை இறுதியிலே உடைய ஈரசைச்சீர்கள். 
ஆனால் ஒவ்வோர் அரையடியிலும் உள்ள நான்காவது சீர் தேமாவாகவே - நேர் நேராகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும்; அங்கே நிரை நேர் அல்லது புளிமாச்சீர் வந்தால் ஓசை கெட்டுவிடும். பாட்டைப் படிக்கும்போது அங்கே புளிமா இருந்தால் வேறுபாடான ஓசை உண்டாதலைக் கவனிக்கலாம்.
தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாக்களில் பெரும்பாலான எண் சீரடி விருத்தங்களாகவே இருக்கும். சில இடங்களில் ஓசை கூடியும் இருக்கும்; குறைந்தும் இருக்கும். தாண்டகம் என்ற பெயரொடு வரும் பாடல் அது. அதற்குரிய இலக்கணம் இப்போது வழக்கில் இல்லை.
"சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகின்;
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந் தார்க்கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே!'
இந்தப் பாடலில் மூன்றாம் அடியில் முதல் பாதயில் நான்காம் சீர் "யராய்' என்று இருக்கிறது. எழுத்துக் கணக்கைக் கொண்ட தாண்டகப் பாட்டின் தாண்டகப் பாட்டின் இலக்கணப்படி இந்த அடி சரி. ஆனால் இப்போதெல்லாம் இந்த முறைப்படி பாடுவதில்லை. ஆகவே, எண் சீர் விருத்தப்படி அதை அமைத்தால் ஒட்டி வராது. மற்ற அடிகளெல்லாம் ஒத்து வந்திருப்பதைக் காண்க.
எண்சீர் விருத்தத்தில் காய்சீர் வரும் சில இடங்களில் விளச்சீர் வரலாம். மேலே உள்ள தாண்டகத்தில் இரண்டாவது அடி ஆரம்பத்தில் மங்குவார் என்று விளச்சீர் வந்திருப்பதைக் காண்க.
இனி வேறு வகை எண்சீர் விருத்தமும் தமிழ் இலக்கியத்தில் மிகுதியாகப் பயின்று வருகிறது. இராமலிங்க சுவாமிகள் பாடல்களில் இந்த வகை விருத்தம் அதிகம்.
"வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில்யா னொருவனன்றோ வகையறியே னிந்த 
ஏழைபடும் பாடுனக்குத் திருவுள்ளச்சம் மதமோ 
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ 
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு 
மகனலவோ நீயெனக்கு வாய்த்ததந்தை யலவோ
கோழையுல குயிர்த்துயர மினிப்பொறுக்க மாட்டேன் 
கொடுத்தருணின் னருளொளியைக் கொடுத்தருளிப் பொழுதே!' 
இது இராமலிங்க சுவாமிகள் பாடல். அரையடியில் முதல் மூன்றும் காய்ச்சீராகவும் நான்காவது மாச்சீராகவும் வந்துள்ளன. மாச்சீரில் தேமா, புளிமா என்னும் இரண்டும் வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். கூட்ட, னிந்த, தானோ, மாட்டேன் என்பவை தேமாச் சீர்கள்; மதமோ, உனக்கு, யலவோ, பொழுதே என்பவை புளிமாச் சீர்கள். திருவருட்பாவில் உள்ள இத்தகைய பாடல்களைப் படித்துப் படித்துப் பழகினால் எளிதில் பாட வரும்.
இந்த எண்சீர் விருத்தத்திலும் ஐந்தாவது சீரில் மோனை அமையும். வேறு வகையான எண்சீர் விருத்தங்களும் உண்டு. அவை அருமையாகவே நூல்களில் வந்துள்ளன.
"அலையோ டியநெஞ் சினிலே துயரால்
அயர்வே னையரு ளருளிப் புவியில்
மலைவோ டொருசஞ் சலமும் பிறவா
வகையில் குலவும் படிவைத் தருள்வாய்
இலையோ டியசெவ் வயில்வே லவனே
இமையோர் நலவாழ் வடையச் சமரில்
குலையோ டசுரர் ஒழியப் பொருதாய்
குமரா அமரா பதிகா வலனே!' 
இது ஒருவகை எண்சீர் விருத்தம். இதில் எல்லாச் சீர்களும் புளிமாச்சீராகவே அமைந்திருக்கின்றன. பொதுவாகவே, ஆசிரிய விருத்தங்களில் புலவர்கள் தம்முடைய கற்பனைத் திறத்தால் பல வகையான உருவங்களைப் படைத்திருக்கிறார்கள்; இனியும் படைப்பார்கள். ஆசிரிய விருத்தங்களைப் பாடிப் பழக வேண்டுமானால், கம்பராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் அடிக்கடி படித்து, வாயாரப் பாடிப் பழக வேண்டும்.
(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com