சினம் கொண்ட சேவல் என்ன செய்யும்?

விலங்குகளுள் பெரிய, வலிய, சாதுவான யானைகளுக்கு மதம் பிடிக்கும். ஆனால் யானைகளுள் ஆண் யானையான களிறுக்கு மட்டுமே மதம் பிடிக்கும். மேலும், காடுகளில், தன் கூட்டத்திலிருந்து தனித்து
சினம் கொண்ட சேவல் என்ன செய்யும்?

விலங்குகளுள் பெரிய, வலிய, சாதுவான யானைகளுக்கு மதம் பிடிக்கும். ஆனால் யானைகளுள் ஆண் யானையான களிறுக்கு மட்டுமே மதம் பிடிக்கும். மேலும், காடுகளில், தன் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பெற்ற ஆண் யானைக்கே மதம் பிடிக்கும். மனிதர்களால் தனிப்பட்ட பணிகளுக்காகத் தனியாக வளர்க்கப்பெறும் ஆண் யானைகளுக்கும் மதம் பிடிக்கும். அவ்வாறு மதம் பிடித்த வேளைகளில், எதிர்ப்படுவோரைத் தூக்கி அடித்துக் கொன்றுவிடும். அந்த வேளையில், தன்னை வளர்க்கும் பாகனையும் கொல்ல முற்படும். மதம் பிடித்த யானைகளை அடக்குவது எளிதன்று. ஆனால் பழந்தமிழகத்தில், இத்தகைய மதம் பிடித்த யானைகளையும், சின்னஞ்சிறு சேவற் கோழிகள், தாக்கிக் கொன்றிருக்கின்றன. 
திருச்சி, உறையூரிலுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில், யானையைச் சேவல் தாக்கிப் போரிடும் காட்சி, இரு புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பெற்றுள்ளன. (காண்க. படங்கள் 2&3, நன்றி:ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., சிந்துவெளி ஆய்வாளர்).
சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இவ் உறையூரிலிருந்து ஆண்டுவந்த கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் புறநானூற்றில், "கோழியோன்' என்றே குறிப்பிட்டுள்ளமை(புறம்.212:8) ஈண்டு எண்ணத்தக்கது. இளங்கோவடிகளோ 
உறையூரைக் கோழி எனக் குறிப்பிடாது, வாரணம் எனப் பதிவு செய்துள்ளதோடு, பெயர்க்காரணத்தையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அக்காரணம் குறித்துச் செவிவழிக் கதைகள் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பெற்று வருகின்றன. அக்கதை வருமாறு:
திருச்சி உறையூர், முற்காலச் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு கரிகாற்சோழன் ஆட்சி செய்த காலகட்டத்தில் மன்னன் பட்டத்து யானையில் வலம் வந்தபோது அந்த யானைக்குத் திடீர்ரென மதம் பிடிக்க, மன்னரும் பிறரும் செய்வதறியாது திகைத்து நின்றனராம். அந்நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சேவல், யானையின் தலையில் கொத்தவே மதம் பிடித்த யானை தரையில் மலைபோல் சரிந்து உயிர் விட்டதாம். அன்றிலிருந்து உறையூரானது கோழிமாநகர் என வழங்கப்பெற்றதாம். மதம் பிடித்த யானையை வீழ்த்தியது சாதாரண சேவல் அல்ல, இறைவன்தான் சேவல் வடிவில் வந்து யானையைக் கொன்று மக்களையும் நாட்டையும் காத்ததாக நம்பிய மன்னன், அவ்விடத்தில் கோயில் எழுப்பினானாம். அக்கோயில்தான் உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். 
இந்த வரலாற்று நிகழ்வை, நினைவுகூரும் வகையில் கோயில் மதிலின் உட்புறச் சுவற்றில் யானையின் தலையில் சேவல் கொத்துவது போன்ற சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுவர். ஆனால், இவ்விரண்டு சிற்பங்களும், வெவ்வேறு காலத்தைச் சார்ந்தவை என்பர் தொல்லியல் அறிஞர். அவை வெவ்வேறு காலத்தையன மட்டுமல்ல; வெவ்வேறு நிகழ்வுகளையும் குறிப்பிடுவன என்பதை சிற்பக் காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. 
அதாவது, அரசன் யானை மேல் அமர்ந்திருக்கும் முதல் சிற்பமானது மேற்கூறப்பெற்ற கரிகாற்சோழன் தொடர்பான நிகழ்வைக் காட்சிப்படுத்தியுள்ளது. அரசன் அமர்ந்து ஊர்ந்துவந்த அந்த யானைக்கும், இரண்டாவது சிற்பத்தில் உள்ள யானைக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டாவது சிற்பத்தில் உள்ள யானையின் தந்தங்கள் உடைபட்டவையாக உள்ளன. பொதுவாக, தந்தங்கள் உடைபட்ட களிறுகளைக் கோயில் பணிகளுக்கும், பிற பணிகளுக்கும் பயன்படுத்துவது வழக்கம். கட்டுரையின் தொடக்கத்தில் கூறியவாறு, கோயில் முதலான இடங்களில், பணிகளுக்காகத் தனியாக வளர்க்கப்பெறும் ஆண் யானைகளுக்குப் பெரும்பாலும் மதம் பிடிக்கும். அவ்வாறான தந்தங்கள் உடைபட்ட, மதம் பிடித்த யானை ஒன்றைச் சேவல் கொல்லும் நிகழ்வையே, இரண்டாவது சிற்பம் காட்டுகிறது. இவ்வாறு, மதம் பிடித்த யானைகளைச் சேவல் கொல்லும் இரு நிகழ்வுகளுக்கான சான்றுகளாக அச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன. 
சேவல் சண்டைக் குணம் மிக்கது. சேவல்களுக்கிடையேயான போரினை சங்க இலக்கியங்களும் காட்டியுள்ளன(குறுந்.305, அகம்.277). பழந்தமிழகத்தில் யானை-சேவற்போர் வழக்கத்திலிருந்ததை கி.மு.1ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்கால நாணயம் காட்சிப்படுத்தியுள்ளது(காண்க. படம்.3, நன்றி: ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி ஆய்வாளர்).
அம்மூன்று சான்றுகளிலும் சேவல் தாக்குவது, யானையின் தலையிலுள்ள நுதற்பகுதியை மட்டுமே. விலங்கியல் அறிஞர்கள், யானையின் தலையில் அந்நுதற்பகுதி, எலும்புகளற்ற மென்மையான பகுதி என்ற செய்தியைத் தெரிவித்துள்ளனர். அதாவது யானையின் அப்பெருத்த உடம்பின் பலவீனமான பகுதி அந்நுதற் பகுதியே ஆகும். அதனால் யானையின் நுதலைப் பூநுதல் என இலக்கியங்கள் குறித்துள்ளன. (அகநா. 268:2-4, நற்.36:1-3, நற்.333:4,5).
காட்டு விலங்குகளுள் யானையும் புலியும், "எலியும் பூனையும் போல' ஒன்றுக்கொன்று பகை உணர்வு கொண்டவை. ஒன்றையொன்று போரிட்டுத் தாக்கிக் கொல்லக் கூடியவை (அகம்.272:1,2, பதி.53:18, பரி.20:4-5). எனவே புலி, தன் பகையாகக் கருதும் யானையைக் கொல்லும் முறையை, அறிவை இயல்பாகவே பெற்றிருந்ததில் வியப்பில்லை. யானையின் நுதலைத் தாக்கியே கொன்றிருக்கிறது; வென்றிருக்கிறது. யானையின் பூநுதலே, ஒரே அடியில் அதனை வீழ்த்துவதற்குரிய பலமற்ற உடற்பகுதி என்பதைப் புலியும் அறிந்திருந்தது; மனிதனும் அறிந்திருந்தான். 
போரின்போது யானை தன்மீது எவ்வளவு அம்புகள் பாய்ந்தாலும் சற்றும் தளராது, சினத்துடன் மேலும் போர்க்குணமுடன் முன்னேறிச் செல்லும் தன்மையுடையது. ஆனால், அவற்றின் இரு கண்களுக்கு இடையே அமைந்துள்ள இந்நெற்றிப் பகுதியில்(நுதலில்), ஓரம்பு தைத்தாலும் அவை இறந்துவிடும். எனவே போர்க்களங்களில் மறவர், யானைகளை அவற்றின் நுதலில் படைக்கருவிகளைச் செலுத்தியே கொன்ற செய்தியை,
"கொல்யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல்' (கலி.134:3) எனக் கலித்தொகை குறிப்பிட்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த புறநூலான களவழி நாற்பதிலும், 
"எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து 
நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு
(களம்.23) 
"ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த 
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில்ஓடை' 
(களம்.31) 
எனப் போர்க் களிறுகளை மறவர், நெற்றியில் அம்பெய்திக் கொன்ற நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் பெற்றுள்ளன. அதனால்தான் போரில் ஈடுபட்ட களிறுகளின் அந்நுதற் பகுதியை இரும்பு, பொன் முதலிய உலோகங்களாலான கவசத்தால் மறையுமாறு பிணித்தனர். இக்கவசத்தை ஓடை எனக் குறிப்பிடும் இலக்கியங்கள், ஓடை அணிந்திருந்த போர்க்களிற்றின் தோற்றத்தினை,
"ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை'
(நெடுநல்.169)
"ஒண்ணுதல் யாத்த திலகவவிர் ஓடை' (கலி.97:11)
எனப் பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இவ்வாறு யானையை எளிதில் தாக்கிக் கொல்வதற்குரிய உடற்பகுதியை அறிந்திருந்த பழந்தமிழர், போர்க்குணம் உடைய சேவலுக்கும் யானையின் அந்நுதற்பகுதியைத் தன் கூரிய அலகாலும், நகங்களாலும் தாக்கிக் கொல்லும் பயிற்சியை அளித்திருக்கின்றனர். அதனால்தான் சிறு சேவற் கோழிகளால், பெரிய வலிய மதம் கொண்ட யானைகளைத் தாக்கிக் கொல்ல முடிந்தது. அதனைத்தான் இச்சிற்பங்களும் நாணயமும் காட்சிப்படுத்தியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com