இந்த வார கலாரசிகன்

உலகத் தாய்மொழி தினம் இருக்கிறதென்று இன்னும் கூட நம்மில் பலருக்கும் தெரியாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது. உலக நாடுகள் பல தாய்மொழி தினத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றன.
இந்த வார கலாரசிகன்

உலகத் தாய்மொழி தினம் இருக்கிறதென்று இன்னும் கூட நம்மில் பலருக்கும் தெரியாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது. உலக நாடுகள் பல தாய்மொழி தினத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றன. அதன் மூலம் மக்களுக்கு தங்களது தாய்மொழியின் மீதான பற்றை உறுதிப்படுத்துகின்றன.
சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால், தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் ஏப்ரல் மாதத்தைத் தமிழர்களின் தாய்மொழி மாதம் என்று அரசே முனைப்புடன் கொண்டாடுகிறது. அந்த மாதத்தில் தாய்மொழி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை அரசின் உதவியுடன் தமிழ் அமைப்புகள் நடத்துகின்றன. குழந்தைகள் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது ஊக்குவிக்கப்படுகிறது. தமிழுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூரின் ஏனைய இரண்டு மொழிகளான மாண்டரின் (சீனம்), மலாய் ஆகிய மொழிகளுக்காகவும் ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது.
ஐரோப்பா கண்டத்திலுள்ள 49 நாடுகளிலுமே அவரவர் நாட்டின் தாய்மொழி மூலமாகத்தான் கல்வி வழங்கப்படுகிறது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்திலேயே கூட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளான காடிஸ், ஐரிஷ், வேல்ஸ் உள்ளிட்ட மொழிகள்தான் கல்வியிலும் ஆட்சியிலும் கோலோச்சுகின்றன. 
பிப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி தினமாக அறிவித்ததற்கு ஒரு பின்னணிக் காரணமும் உண்டு.1947-இல் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இணைந்து பாகிஸ்தான் உருவானபோது, அதன் தேசிய மொழியாக பஞ்சாபியர்களின் ஆதிக்கத்தில் இருந்த பாகிஸ்தானிய அரசு, உருதுவை அறிவித்தது. இதை வங்காளத்தவர்கள் அதிகமாக வாழும் கிழக்கு பாகிஸ்தான் ஏற்கவில்லை. 1952-இல் வங்காள மொழியையும், பாகிஸ்தானின் இரு தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று கூறி மிகப்பெரிய போராட்டம் நடந்தது. டாட்டா நகரில், நீதிமன்றத்துக்கு அருகில் நடந்த தாய்மொழிக்கான போராட்டத்தில் மாணவர்கள் பலர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான நாள், பிப்ரவரி 21.
ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க தங்களது மொழி பாதிக்கப்பட்டுவிடுமோ என்று உலக நாடுகள் பல அஞ்சத் தொடங்கியதன் பின்னணியில்தான் 1999-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ தாய்மொழியைக் காக்கவும், வளர்க்கவும், கொண்டாடவும் உலகத் தாய்மொழி தினம் என்று அந்த பிப்ரவரி 21-ஆம் தேதியை அறிவித்தது.
தாய்மொழி வழிக் கல்வி படிப்பதால் மாணவர்கள் பாடங்களை நன்கு உணர்ந்து, புரிந்து படித்து, வளர்ச்சி பெறுவர் என்பதுதான் தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம். தொன்மையான நாகரிகமுள்ள தமிழர்கள் தங்களது மொழியையும் கலாசாரத்தையும் காக்க வேண்டிய அவசியம் குறித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது அவசியம். சிங்கப்பூர் போல தமிழகத்திலும் தாய்மொழி மாதம் கொண்டாடாவிட்டாலும் கூட தாய்மொழி தினத்தையாவது அரசின் ஆதரவுடன் தமிழகமெங்கும் கொண்டாடுவதை உறுதிப்படுத்த வேண்டும். அன்று ஒரு நாளாவது "தமிழில் பேசுவோம்' என்பதைத் தாரக மந்திரமாக நம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியுமானால், தமிழ் தழைக்கும்.


கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, சென்னை புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்துப் பதிப்பித்திருக்கும், அ.ச.ஞா.வின் "இலக்கியக் கலை' புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தும் நடக்காமல் போயிற்று. பேராசிரியர் அ.ச.ஞா.நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு வெளியீடாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது "இலக்கியக் கலை' என்கிற தொகுப்பின் முதல் பகுதி. 
1006 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை முழுமையாக என்னால் படிக்க முடியவில்லை. அதில் பல பகுதிகளைப் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் சில முக்கிய பகுதிகளைப் படித்துவிட்டேன்.
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் என்பதில் யாருக்குமே இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. இளைஞர்களால் ஏற்கப்பட்ட அறிஞர். கற்றோரால் போற்றப்பட்ட பெருந்தகை. திறனாய்வாளர், படைப்பாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் என திருச்சி மாவட்டம் அரசன்குடியில் பிறந்த அ.ச.ஞா.வின் பரிமாணங்கள் எத்தனை எத்தனையோ...
நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், இரா. இராகவையங்கார், சீனிவாச சாஸ்திரியார் உள்ளிட்டோர் இவருக்கு ஆசான்களாக இருந்தவர்கள். பன்மொழி வித்தகர் என்று அனைவராலும் போற்றப்படும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் நிழலாகக் கடைசி வரை இருந்தவரும் அ.ச.ஞா.தான். 37க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கும் அ.ச.ஞா., கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகள் இன்றளவும் இலக்கிய வட்டாரங்களில் பேசவும், மேற்கோள் காட்டவும்படுகின்றன.
இந்தத் தொகுப்பில் நான் ரசித்துப் படித்தது, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல்வேறு ஆளுமைகள் குறித்த அவருடைய பதிவுகள். "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி., நாவலர் வேங்கடசாமி நாட்டார், மகாவித்துவான் இரா.இராகவையங்கார், நாவலர் சோமசுந்தர பாரதியார், விபுலாந்த அடிகள், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார், பி.டி.ராஜன், "கம்பன் அடிப்பொடி' சா.கணேசன், "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன், "ரசிகமணி' டி.கே.சி., மூதறிஞர் ராஜாஜி, "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் ஆகியோர் பற்றிய ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி புத்தகங்கள்.
அ.ச.ஞா.வுக்கு "தமிழ்த் தென்றல்' திரு. வி.க. மீது இருந்த தாளாப் பற்றும் மரியாதையும் அவர் குறித்த பதிவுகளின் மூலம் தெரிகிறது. திரு.வி.க.வை பற்றிய அ.ச.ஞா.வின் பதிவுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தியே தீரவேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற பிறகு இன்னொரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று சில புத்தகங்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். அந்தப் பட்டியலில் அ.ச.ஞா.வின் "இலக்கியக் கலை'யையும் சேர்த்துவிட்டேன்.


கடந்த மாதம் மதுரையிலிருந்து கோவைக்குக் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். "தினமணி' நிருபர் ரஹ்மான், கவிஞர் திருதாரை. தமிழ்மதி என்கிற புனைபெயரில் எழுதும் தனது நண்பர் சி.தண்டபாணி என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். சிறுவர் மணியிலும், தினமணி கதிரிலும் அவருடைய படைப்புகள் ஏற்கெனவே வெளிவந்து, நான் அவற்றைப் படித்திருக்கிறேன். மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் அவரின் புதிய படைப்பு "உன்னைத் தோளில் வைத்து உலகைச் சுற்ற ஆசை!' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை, "யானையின் ஆசி மொழி!' 
குனி.. நன்றாகக் குனி..
தானே நிமிருவாய்
என்னிடம் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com