இலக்கியங்களில் "கொச்சை' மொழி!

இலக்கியத்தில் கொச்சை மொழிகள் (பேச்சு வழக்கு) அனுமதிக்கப்படுகின்றன. "போடா' "வாடா' "சீச்சி!' போன்ற சொற்கள் நித்தாஸ்துதி போன்ற கவிதைகளில் காணக்கிடைக்கின்றன.
இலக்கியங்களில் "கொச்சை' மொழி!

இலக்கியத்தில் கொச்சை மொழிகள் (பேச்சு வழக்கு) அனுமதிக்கப்படுகின்றன. "போடா' "வாடா' "சீச்சி!' போன்ற சொற்கள் நித்தாஸ்துதி போன்ற கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. பாஞ்சாலி சபதத்தில் பீமன் ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிற இடத்தில் பல சொற்கள் வருகின்றன. ஆனால், அசலான கவிதையிலேயே மகாகவி பாரதி, உரையாடல் வார்த்தையை கவிதையின் தன்மைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.

""ஓமென் றுரைத்தனர் தேவர் ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்
பூமி யதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற்காற்று. 

புதுச்சேரியில் பிரேஞ்சு அரசு ஆட்சி புரிந்தபோது ஆனந்தரங்கம் பிள்ளை என்கிற தமிழர் அங்கு வசித்து வந்தார். செந்தமிழை ஆதரித்து, வாடி வந்தடைந்த அறிஞர்களுக்குப் பரிசளித்து வந்தார். 
ஒருமுறை பசியால் வாடிய புலவர் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாளிகையை அடைந்தார். அறுவடைக் காலமாதலால், பிள்ளையவர்கள் தம் நிலத்தைக் கண்காணிக்கச் சென்றிருந்தார். அங்கு வரப்பிலே சிதறிக்கிடந்த நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி, சேர்த்துக் கொண்டிருந்த வள்ளலை அந்தப் புலவர் பார்த்தார்.
புலவர் தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தும்கூட ஆனந்தரங்கம்பிள்ளை, நெல்லைப் பொறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த புலவரைக் கண்டு பிள்ளையவர்கள், ""ஏன் பறக்கறீர்? சற்றுப் பொறும்'' என்றார். உடனே புலவர் வாயிலிருந்து பாசமும், பசியும் ஒருசேர பாட்டு ஒன்று பிறந்தது:

"கொக்குப் பறக்கும், புறாப் பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நானேன் பறப்பேன் நராதிபனே!
திக்கு விசயம் செலுத்தி உயர்
செங்கோல் நடாத்தும் அரங்கா நின்
பக்கம் இருக்க ஒருநாளும்
பறவேன், பறவேன், பறவேனே...!'

இப்பாட்டைக் கேட்டு இன்புற்ற ஆனந்தரங்கம்பிள்ளை பரிசளித்தார் என்பது வரலாறு. மேலே குறிப்பிட்ட இரண்டும் சமீப காலத்தில் இயற்றப்பட்ட பாடல்கள். ஆனால், கம்பராமாயணத்திலேயே கொச்சையான ஒரு சொல் (சீச்சி!) வருவதைக் காண்கிறோம்.
சீதையைக் கவர பொன் மான் வேடம் (உருவம்) கொண்டு யோசனை கூறியபோது மாரீசன் அதை விரும்பவே இல்லை. அப்போது மாரிசன் அறிவுரை பகர்கிறான்; சினம் பொங்கும் உள்ளத்தோடு பலவாறு பேசுகிறான். 

"இச்சொல் அனைத்தும் சொல்லி
அரக்கன், எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
என்னக் கிளரா முன்
"சிச்சி' என, தன் மெய்ச் செவி
பொத்தி தெருமந்தான்;
அச்சம் அகற்றி, சென்ற 
மனத்தோடு அறைகின்றான்' (3243)

"பற்றி எரியும் தீயில் இரும்பைப் போட்டுக் காய்ச்சி, அதைச் செவியில் பாய்ச்சினாற் போன்ற சொற்களை எல்லாம் கூறி, தூண்ட முற்படுமுன் "சிச்சி' என்று தன் காதுகளை மூடுகிறான். 
பின்னர் இராவணனிடம் கொண்ட பயத்தை நீக்கி, சினம் பொங்கும் உள்ளத்தோடு சொல்லத் தொடங்கினான்' என்பது இப்பாட்டின் பொருள். கிச்சு - நெருப்பு, கிரிசானு என்ற வடசொல்லின் திரிபு) பழைய இலக்கியத்திலும் சரி, சென்ற நூற்றாண்டு இலக்கியத்திலும் சரி, உணர்ச்சி வேகத்தில் வந்து பாய்கின்ற சில சொற்கள் கவிதைக்கு வலிமை சேர்த்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com