உ.வே.சா.வின் இலக்கியப் படைப்புகள்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள் பலவற்றையும்; தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வேறு நூல்களை பதிப்பித்து தலைசிறந்த பதிப்பாசிரியராகத் திகழ்ந்தார்.
உ.வே.சா.வின் இலக்கியப் படைப்புகள்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள் பலவற்றையும்; தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வேறு நூல்களை பதிப்பித்து தலைசிறந்த பதிப்பாசிரியராகத் திகழ்ந்தார்.
அதுமட்டுமின்றி, இறைவன் மீது பக்திப் பாடல்கள், ஏடு தேடிச் சென்ற அனுபவங்கள், இலக்கியக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், பண்டைக் காலத்து பழக்க வழக்கங்கள், நகைச்சுவை உரையாடல்கள், திருக்கோயில்கள் என தாம் எழுதிய கட்டுரைகளை சுதேசமித்ரன், செந்தமிழ், கலைமகள், தினமணி, விவேகபோதினி முதலிய இதழ்களில் எழுதி படைப்பாசிரியராகவும் திகழ்கிறார். இக்கட்டுரைகள் அவரது காலத்திலேயே தொகுக்கப்பட்டு நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும், நினைவு மஞ்சரி, நல்லுரைக்கோவை ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன.
மேலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார்.
கி.பி.1891ஆம் ஆண்டு கொழும்புத்துறை ஸ்ரீமான் தி.குமாரசாமி செட்டியார் விருப்பத்தின்படி உ.வே.சா., யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் முருகன் மீது தண்டபாணி விருத்தம், முத்துக்குமாரர் ஊசல், எச்சரிக்கை, கீர்த்தனங்கள் போன்றவற்றை இயற்றி, கும்பகோணத்தில் வெளியிட்டுள்ளார். பிறகு ஐயரவர்களின் குமாரர் எஸ்.கலியாணசுந்தரையர் எழுதிய குறிப்புரையுடன் 1944ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 
மதுரை மீனாட்சியம்மை மீது கயற்கண்ணி மாலை, அங்கயற்கண்ணி மாலை, கடம்பவனவல்லி பதிகம் ஆகியனவும்; மதுரை சுந்தரேசுவரர் மீது சுந்தரேசுவரர் துதி, அருளுறை நீலியம்மன் இரட்டைமணி மாலை, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் பெரியநாயகி இரட்டைமணி மாலை ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். கயற்கண்ணிமாலை கட்டளைக் கலித்துறையால் அமைந்த 100 பாடல்களைக் கொண்டது. இதில் ஒரு செய்யுள் வருமாறு: 
"படித்தேன் படித்தவை சொல்லும்
திறமை படைத்தலின்றித்
துடித்தேனி னன்பர்கள் போலே
யெவரும்சொலும் பொருட்டு
நடித்தே னினிச்சகி யேனென்னைக்
காத்தரு ணாரணிபூங்
கடித்தே னுகுபொழிற் றென்கூடல்
வாழும் கயற்கண்ணியே' (5)

இந்நூல் கி.வா.ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சி உரை, குறிப்புரையுடன் 
1970-இல் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. மேலும் பக்திப் பாடல்களாக உத்தமதானபுரம் ஆனந்தவல்லி முதல் சென்னை திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் வரை பாடல்கள் இயற்றியுள்ளார். ஐயரவர்கள் இயற்றிய பாடல்களைத் தொகுத்த கி.வா.ஜகந்நாதன், இவற்றை தனிப்பாடல்கள், பதிப்புப் பாடல்கள், திருத்தொண்டர்கள், பழகிய பெரியோர், சிறப்புப் பாயிரங்கள் எனப் பகுத்து "தமிழ்ப்பா மஞ்சரி' என்கிற பெயரில் இரு தொகுதிகளாக (கி.பி.1961-62) வெளியிட்டுள்ளார். 
தம் வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்ததோடு, சிறந்த முகவுரையும் ஆராய்ச்சிவுரையும் எழுதி வெளியிட்டு, பதிப்புப் பணியில் சாதனை புரிந்த உ.வே.சா., தாம் படைத்த இலக்கியங்களை நூலாக வெளியிடாமைக்கான காரணத்தை கி.வா.ஜகந்நாதன், 
""தமிழ் பயின்ற காலத்தில் கவிபாடும் சந்தர்ப்பங்கள் பல ஐயரவர்களுக்குக் கிடைத்தன. இளமை தொடங்கி வந்த இந்தப் பழக்கம் கடைசி மூச்சு வரையில் ஐயரவர்களிடம் இருந்து வந்தது. ஆனால், அவற்றை உலகம் காண வெளியிட அவர்கள் விரும்பவில்லை. 
இடிந்த பழங்கோயில்களைப் போன்ற பழங்கவிகளைச் சிறப்படையச் செய்ய வேண்டுமென்று அவர்கள் எண்ணினார்களே யன்றி, தம்முடைய கவிகளை வெளியிடும் நாட்டம் அவர்கள்பால் எழவில்லை'' என்று தமிழ்ப்பா மஞ்சரியில் குறிப்பிட்டுள்ளார். 

- கோதனம். உத்திராடம்
(பிப்ரவரி 19, உ.வே.சாமிநாதையரின் 164ஆவது பிறந்தாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com