கவி பாடலாம் வாங்க - 12: ஆசிரியப்பா

இதுவரையில் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும், ஆசிரியப் பவைப் பற்றியும் சில இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். ஆசிரியப் பாவைப் பற்றி இன்னும் சில இலக்கணங்கைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கவி பாடலாம் வாங்க - 12: ஆசிரியப்பா

இதுவரையில் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும், ஆசிரியப் பவைப் பற்றியும் சில இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். ஆசிரியப் பாவைப் பற்றி இன்னும் சில இலக்கணங்கைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆசிரியப்பாவில் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும் என்பதை, அவ்வகைச் சீர்களுக்கு அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர் என்று பெயர் வழங்குவதால் தெரிந்து கொள்ளலாம். சங்க காலத்து நூல்களில் வரும் ஆசிரியப்பாக்களில் காய்ச்சீர் இடையே விரவி வரும். அதனால் அதன் ஓசையே கம்பீரமாக இருக்கும்.
"கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ்செப் பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ அறியும் பூவே!'
இந்தப் பாட்டு எழுந்ததற்குக் காரணமான கதையைப் பலர் அறிந்திருப்பார்கள். கதை உண்மையோ, இல்லையோ அதைப்பற்றி இங்கே கவலை வேண்டாம். ஒரு கதையைப் படரவிடுவதற்குக் காரணமான பாட்டு இது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். சங்க நூல்கள் மிகுதியாக வழங்காத இடைக்காலத்திலும் இந்தப் பாட்டு வழங்கி வந்தது. இதை ஆலவாய் இறைவன் பாடல் என்று அந்த வரலாறு கூறுகிறது.
இந்தப் பாடலில் ஈற்றயலடி மூன்று சீர்களால் அமைந்திருக்கிறது. ஆகவே, இது நேரிசை ஆசிரியப்பா. இதில் இரண்டாவது அடியின் முதற்சீரூம். மூன்றாம் அடியின் முதற்சீரும், ஐந்தாம் அடியின் இரண்டாவது சீரும் மூவசைச் சீர்களாக வந்திருக்கின்றன. அவை தேமாங்காய், கருவிளங்காய், புளிமாங்காயாக உள்ளன. எட்டுத்தொகையில் நற்றிணை, குறுத்தொகை, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள் ஆறும் ஆசிரியப்பாக்களால் ஆனவை. அவற்றிற் பெரும்பாலன நேரிசை யாசிரியப்பாக்கள். அவற்றை ஆராய்ந்தால் காய்ச்சீர்கள் அங்கங்கே விரவி வந்திருப்பதைக் காணலாம்.
அகவல்களில் ஈறு ஏகாரமாக முடிவது பெரும்பான்மை மரபு. ஓ, ஈ, ஆய், என், ஐ என்று முடிவதும் உண்டென்று இலக்கணம் கூறுகிறது. ஆனால் ஏ என்று முடியும் அகவல்களும், என் என்று முடியும் அகவல்களுமே இப்போது கிடைக்கின்றன. "நிலைமண்டில ஆசிரியப்பா என் என்று முடிவது சிறப்பு' என்று ஓர் இலக்கண நூல் கூறுகிறது. இணைக்குறளாசிரியப்பாவில் முதல் அடியும், ஈற்றடியும் நாற்சீரடிகளாகவே இருக்க வேண்டும். இடையில் இரண்டு மூன்று நான்கு சீரடிகள் வரலாம். சிறுபான்மை ஐந்து சீர் அடியும் வருவதுண்டு.
இங்கே ஒரு பழங்கதை நினைவுக்கு வருகிறது. கம்பரிடம் யாரோ ஒரு விறகுதலையன் வந்து, ""எனக்கு அரசனிடம் பரிசு வாங்கித்தர வேண்டும்'' என்று சொன்னானாம். ""எதையாவது பாடிக்கொண்டு வா; பரிசு வாங்கித் தருகிறேன்'' என்று அந்தக் கவிச்சக்கரவர்த்தி சொன்னாராம். அவனுக்குத் தமிழிலே பயிற்சி இல்லை. எங்கோ நடந்துபோகும்போது, வீதியில் சிறு பிள்ளைகள் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனராம்.
ஒரு பெண் ஓர் ஆண்பிள்ளையை உட்கார்த்தி வைத்து, ""நீதான் மாப்பிள்ளை நான்தான் உன் மனைவி; இந்தா இதைச் சாப்பிடு'' என்று ஒரு சிறிய இலையில் மண்ணைப் படைத்தாள். அதைக் கண்ட விறகுதலையன், ""மண்ணுண்ணி மாப்பிள்ளையே'' என்று சொல்லிக் கொண்டான். பிறகு ஒரு காக்கை கத்தியது; ""காவிறையே'' என்பதைச் சேர்த்துக் கொண்டான். குயிலின் குரல் காதில் பட்டது. ""கூவிறையே'' என்று பாடினான். பிறகு அங்கே பெருச்சாளி ஒரு கோவிலில் ஓடியது. ""உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி'' என்று பாட்டை நீட்டினான். எதிரே ஒரு நண்பன் வந்தான். இந்தப் பாட்டை விறகுதலையன் கூறவே, ""என்னடா இது? கன்னா பின்னா என்று இருக்கிறது. அரசன் பெயர் வேண்டாமோ? என்று கேட்டான்.
அவன் சொன்னதையும் சோழன் பெயரையும் சேர்த்து, ""கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே'' என்று பாட்டை முடித்தான். ""மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே கூவிறையே உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி - கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே' என்று அந்த அருமையான கவிதையைக் கம்பரிடம் போய்ச் சொன்னானாம்!
அவர் அதைக்கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவனை அரசவைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவன் தன் பாடலைச் சொன்னான். கேட்டவர்கள் நகைத்தார்கள். கம்பர் எழுந்து உரை கூறினார்.
""இதற்குப் பொருள் இன்னதென்பதை ஆய்ந்து காண வேண்டும். நம்முடைய அரசரை முதலில் மன்மதனே என்று அழைத்திருக்கிறார் புலவர். மண்ணுண்ணி - உலகத்தை உண்ட திருமால்; மா - திருமகள். இந்த இருவருக்கும் புதல்வனாகிய மன்மதனே என்று பொருள்பட, "மண்ணுண்ணி மாப்பிள்ளையே' என்று தொடங்கியிருக்கிறார். கா என்பது கற்பகம்; அதற்கு இறைவன் இந்திரன்; ஆதலின், காவிறையே என்பதற்கு இந்திரனே என்று பொருள் கொள்ள வேண்டும். கூ என்பது பூமி; அதற்கு இறைவன் நம் பெருமான். உலகச் சக்கரவர்த்தி என்பதையே கூவிறையே என்று உணர்த்தினார். "உங்கள் தந்தையாரும் சக்கரவர்த்தி' என்பதை "உங்கள் அப்பன் கோ' என்றார். 
அவர் வில்லில் பெரிய சிங்கம் போன்ற திறமையுடையவர்; "வில்லில் பெரிசு ஆளி' என்று பிரிக்க வேண்டும். வில்லில் என்பது விலில் என்றும், பெரிது என்பது பெருசு என்றும் விகாரமாயின. கன்னா - கர்ணனே, பின்னா - அவனுடைய தம்பியாகிய தர்மபுத்திரனே, மன்னா - அரசனே, தென்னா - தென்னாட்டுக்குத் தலைவனே, சோழங்கப் பெருமானே - சோழர்களில் பெரியவனே. இப்படிப் பொருள் கொள்ளும்படி பாடிய இப்புலவர் புலமையை நாம் பாராட்ட வேண்டும்'' என்று உரை விரித்தார் கம்பர்.
அதோடு நிற்கவில்லை. அந்த உளறலை இன்ன வகைப் பாடல் என்று சொல்ல வேண்டுமே! ""இது இணைக் குறளாசிரியப் பா. ஏகாரத்தில் முடிந்திருக்கிறது'' என்று கூறிச் சீரும் பிரித்துக் காட்டினாராம்.
"மண்ணுண்ணி மாப்பிள்ளை யேகா விறையே
கூவிறை யேஉங்க ளப்பன்
கோவி லில்பெருச் சாளி
கன்னா பின்னா மன்னா
தென்னா சோழங் கப்பெரு மானே' 
இணைக் குறளாசிரியப் பா என்பதைப் பரிகாசம் பண்ணிய பாடலாக இதைக் கருதலாம். எதையும் ஆசிரியப்பாவில் அடக்கிவிடலாம் என்று சிலர் எண்ணுவதுண்டு. அதைப் பரிகாசம் செய்யவே இந்தக் கதை எழுந்திருக்க வேண்டும். இதோ நல்ல இணைக்குறளாசிரியப் பா ஒன்றைப் பாருங்கள்:
""நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரச் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே''
இதில் உள்ள ஆறு அடிகளில் முதலடியும் ஈற்றடியும் நான்கு சீரடிகளால் வந்துள்ளன. மற்றவை முறையே இருசீரடி, இருசீரடி, முச்சீரடி, முச்சீரடியாக அமைந்திருக்கின்றன. இத்தகைய ஆசிரியப்பாக்கள் மிகவும் அருமையாகவே நூல்களில் வந்துள்ளன. அருமையாக வந்தாலும் அதற்கும் இலக்கணம் உண்டல்லவா? அதனால்தான் அதற்கும், அது போலவே அடிமறி மண்டில ஆசிரியப்பாவுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார்கள்.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com