பெம்மான் "பித்தன்' ஆனதேன்?

'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. அவர் திருவானைக்காவில் தங்கி, சிவபெருமானையும், அகிலாண்ட நாயகியையும் வணங்கி வந்தார். 
பெம்மான் "பித்தன்' ஆனதேன்?

'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. அவர் திருவானைக்காவில் தங்கி, சிவபெருமானையும், அகிலாண்ட நாயகியையும் வணங்கி வந்தார். 
ஒருநாள் மாலையில், தம் சீடங்களுடன் அந்தக் கோயிலை நோக்கி வழிபடச் சென்றார். அப்பொழுது சீடருள் ஒருவர், ""ஐயா! இம்மாலைப்பொழுதில் ஒரு மாலை பாடுங்கள்'' என்று கனிவுடன் வேண்டினார். அதுகேட்ட பிள்ளையும், ""நல்லது, சொல்லிக்கொண்டே வருகிறேன், ஏட்டில் எழுதி வாருங்கள்'' என்று கூறிப் பாடத் தொடங்கினார். கோயிலை அடையவும் நூறு பாடல்கள் நிறைவடைந்தன. அச்சிறு பிரபந்தமே "திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை' எனும் நூலானது. 
சிவபிரான் தம் கபர்த்தம் என்னும் சடையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார். கங்கை (கங்காதேவி) - நீச்சல் தெரியாதவர்கள் கிணற்றில் தவறி விழுந்தால் மூன்று முறை மேலே கொண்டு வருவாள். அதற்குள் அந்த நபர் கரை, கொடியைப் பற்றிக் கொண்டு பிழைக்கலாம். இல்லையெனில் தன்னுள் (கங்கையில்) அழுத்திக் கொன்றுவிடுவாள். ஆனால், உமையம்மையோ, நாம் பல பிழைகள் செய்தாலும் கருணையுடன் பொறுத்தருளுவாள். இவ்வகையில் கங்கா தேவி தாழ்ந்தும், பார்வதி தேவி உயர்ந்தும் இருக்கின்றனர். தாழ்ந்தவர்களுக்குத் தாழ்ந்த இடத்தையும், உயர்ந்தவர்களுக்கு உயர்ந்த இடத்தையும் அளிப்பதே முறையாகும். ஆனால், சிவபெருமானோ - தாழ்ந்த நிலையிலுள்ள கங்கைக்கு சிரசில் உயர்ந்த இடத்தையும், உயர்ந்த நிலையிலுள்ள உமையம்மைக்குத் தாழ்ந்த தம் இடபாகத்தையும் கொடுத்திருக்கிறார். இது பித்தரின் செயல் ஆதலின் அப்பெருமானுக்குப் "பித்தன்' என்று ஒரு திருப்பெயர் ஏற்பட்டது' என்று மீனாட்சிசுந்தரம் பிள்ளை பழிப்பது போல் புகழ்ந்து (நிந்தாஸ்துதி) இப்பாடலைப் பாடியுள்ளார்.

""அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை அணி உரு பாதியில் வைத்து
தளர் பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச் சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவிய மதியம் சூடிய பெம்மான் பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்,
களமா மொய்கழனிசூழி திருவானைக்கா அகிலாண்ட நாயகியே''

பித்து - முதிர்ந்த அன்பு என்று பொருள். "பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்னும் பழமொழியையும் நோக்குக. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருவெண்ணெய் நல்லூர் அருள்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவபரம்பொருளை "பித்தா! பிறை சூடி' என்றே தொழுது பாடத் தொடங்குகிறார் என்பதையும் இங்கு ஒப்பு நோக்கி இன்புறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com