சங்கப் பாடல்கள் சுட்டும் கூர்வாய் எறியுளி

உ.வே. சாமிநாதையர் போன்றோர் ஏடுகளிலிருந்து நூல்களைப் பதிப்பிக்கும்போது ஒரே தலைப்பில் அமைந்த பல ஊர்களிலிருந்து
சங்கப் பாடல்கள் சுட்டும் கூர்வாய் எறியுளி

உ.வே. சாமிநாதையர் போன்றோர் ஏடுகளிலிருந்து நூல்களைப் பதிப்பிக்கும்போது ஒரே தலைப்பில் அமைந்த பல ஊர்களிலிருந்து கிடைத்த பல சுவடிகளில் காணப்பெறும் ஒவ்வொரு பாட்டையும், ஒவ்வொரு சொல்லையும் ஒப்பிட்டுப் பார்த்து பாட வேறுபாடுகள் இருக்குமானால் எது சரியான பாடம் என்பதை உறுதிசெய்து, மூலப்பாடலை அச்சிடுவதோடு வேறுபட்டுக் காணும் சொற்களையோ, அடிகளையோ ஒவ்வொரு பாட்டிற்கும் கீழாக "பாடபேதம்' எனக் குறிப்பிட்டு அதனையும் அச்சிடுவர்.
பல பதிப்புகளைக் கண்ட அகநானூறு எனும் அருந்தமிழ் நூலின் நித்திலக்கோவையில் அமைந்த நெய்தல் திணைப்பாடல், "பன்னாளெவ்வந் தீரப் பகல்வந்து' (பா.340) எனத் தொடங்குகிறது. இருபத்து நான்கு அடிகளை உடையதாகிய இப்பாடலை நக்கீரர் பாடியுள்ளார். திரையன் என்பானுக்கு உரியதான பவத்திரி எனும் நெய்தல் நிலத்துத் தலைவன் ஒருவன் தான் காதல் கொண்ட தலைவி ஒருத்தியை குறிப்பிட்ட ஓரிடத்தே நாளும் சந்தித்து இன்புற்று வருகிறான். இதற்குத் தோழியும் உறுதுணையாக விளங்கினாள். பகற்பொழுதில் கானற் சோலையில் கூடியிருந்து இரவு நெருங்கவும் அவன் தன்னூர்க்குச் செல்லுதலை வழக்கமாகக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவர்களை மண உறவால் நிலையாக இணைக்க விரும்பிய தோழி, தலைவியின் தனிமையான இரவு
நேரத் துன்பத்தினை தலைவனுக்கு எடுத்துரைத்து, அன்று அவர்கள் பாக்கத்தில் தங்கிச் செல்லுமாறு கூறுகிறாள். குறியிடத்தில் மட்டுமே தலைவியைச் சந்தித்த தலைவனுக்கு, அவள் இல்லம் இருக்கும் ஊரின் சிறப்பினை இப்பாடலில் தோழி கூறியுள்ளாள்.
கடற்கரைப் பாக்கமான அவ்வூரில் அவள் இல்லம் இருக்குமிடத்தில் தாழை மரங்களில் மீனவர்தம் கிழிந்த வலைகள் தொங்கவிடப்பெற்று, அவை காற்றில் பறந்து கொண்டு இருக்கும் என்று கூறும் தோழி, அவ்வலைகள் யாது காரணத்தால் கிழிந்து திகழ்கின்றன என்பதையும் எடுத்துரைத்துள்ளாள். இது பற்றி கூறும் அகநானூற்று ஏட்டுச் சுவடிகள் இரு மாறுபட்ட கூற்றுக்களைக் கூறுகின்றன. சில பதிப்பாசிரியர்கள் ஒரு கூற்றையும் சிலர் மறுகூற்றையும் மூலப் பாடல்களில் ஏற்றுக்கொண்டு தாங்கள் ஏற்காத கூற்றை பாடலின் கீழ் பாடபேதமாக அச்சிட்டுள்ளனர். இராஜகோபாலார்யன், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவியரசு வேங்கடாசலம் பிள்ளை போன்றோர் பதிப்புகளில்,

"கூர்வளிக் கடுவிசை மாண்டலிற் பாய்ந்துடன்
கோட்சுறா கிழித்த கொடுமுடி நெடுவலை'

எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருளாவது: பரதவர் (மீனவர்) மீன் வேட்டையாட தங்கள் படகுகளில் செல்லும்போது கடுமையான காற்று (சூறைக்காற்று) கடற் பரப்பெங்கும் பரவி அலைத்தபோது அதன் தாக்கம் தாங்க முடியாத சுறாமீன்கள் பாய்ந்ததால் அவர்கள் கடலில் பரப்பியிருந்த கொடுமுடி நெடுவலைகள் கிழிந்தன என்பதாம்.
சமாஜம், மர்ரே, உ.வே.சா. நூலகம் ஆகிய நிறுவனப் பதிப்புகளில்,

"கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன்
கோட்சுறா கிழித்த கொடுமுடி நெடுவலை'

என்றே காணப்பெறுகின்றன. இதன் பொருளாவது, பரதவர் மீன் வேட்டையாட படவுகளில் சென்று வலைகளை கடலில் பரப்பிய பின்பு அங்கு திகழ்ந்த சுறா மீன்களைத் தங்களின் கூர் உளி என்ற மீன்பிடி கருவியால் தாக்கும்போது
தாக்குண்ட சுறாமீன்கள் துள்ளிப் பாய்ந்ததால் அங்கிருந்த வலைகள் கிழிந்தன என்பதாகும்.
இங்கே நாம் முன்பு கண்ட "கூர்வளி' என்ற கூற்று அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை. கடுங்காற்று எனக் கூறலாமேயொழிய, கூர்மையான காற்று என்பது பொருத்தமாக இல்லை.
"கூர்உளி கடுவிசை மாட்டலின்' என்ற சொற்றொடரே பொருத்தமாக உள்ளது. இதனை வலியுறுத்தும் வண்ணம் சங்கத் தமிழ் நூல்களின் மூன்று பாடல்களின் கூற்றுகள் அமைந்துள்ளன. அகநானூற்று மணிமிடைபவளத்தின் 210-ஆவது பாடலில்,

"குறியிறைக் குரம்பை கொலைவெம்பரதவர்
எறியுளி பொருத ஏமுறுபெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட'

என்ற அடிகள் காணப்பெறுகின்றன. பரதவர் எனும் மீன் வேட்டையாடுவோர் கடலில் சென்று பெருமீன் ஒன்றினை "எறிஉளி' எனும் கருவியால் தாக்கியபோது அது அம்மீனின் உடலில் பாய்ந்ததால் கடல் பரப்பெங்கும் குருதியால் சிவந்தது என்பது இதன் பொருளாகும். நற்றிணையின் 388-ஆவது பாடலோ,

".. .. .. நோன்புரிக்
கயிறுகடையாத்த கடுநடை எறியுளித்
திண்டிமிற் பரதவர் ஒண்சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறைக்
கடன்மீன் றந்து குவைஇ...

என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், முறுக்கிய கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற எறியுளியுடன் படகுகளில் இரவில் விளக்குகளுடன் சென்று மீன்வேட்டை செய்யும் மீனவர்கள் விடியற்காலை கடற்கரையில் வந்து மீன்களைக் குவிப்பர் என்பது அறிகிறோம். குறுந்தொகையின் 304-ஆவது பாடல்,

"கொல்வினைப் பொலிந்த கூர்வாய் எறியுளி
முகம்பட மடுத்த முனிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டுமீன் எறிய'

என்று குறிப்பிடுவதால், உலர்ந்த மூங்கில் கழியின் நுனியில் கூரிய வாயினையுடைய எறியுளி பொருத்தப்பெற்று அக்கருவியால் பரதவர் கொம்பையுடைய சுறாமீன்களை வேட்டையாடியதை அறிகிறோம். இம்மூன்று பாடல்களின் கூற்றுக்களையும் தொகுத்து நோக்கும்போது, படகில் செல்லும் மீனவர்கள் கூர்முனையுடைய எரியுளியை மூங்கில் கழியின் நுனியில் சொருகி, அக்கழியினை நீண்ட கயிறுகொண்டு படகுடன் இணைத்து, அக்கருவி கொண்டு சுறாமீன்களைத் தாக்கி மீன் பிடிக்கும் பழைமையான மரபு பற்றி அறிகிறோம்.
இம்மூன்று பாடல்களிலும் கையாளப்பெற்ற எறியுளி, கயிறு கடையாத்த கடுநடை எறியுளி, கூர்வாய் எறியுளி என்ற சொல்லாட்சிகளை முதலில் கண்ட பாடபேத கூற்றுக்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது அகநானூற்று 340-ஆம் பாடலில், "கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன்' என்ற அடியே பாடலுக்குரிய ஏற்புடைய அடி என்பது விளங்கும்.
கூர்வாய் எரியுளி என்ற மீன்வேட்டையாடும் கருவியின் வடிவம் எவ்வாறு திகழும் என்பதை சோழநாட்டு பட்டீச்சரம் கோயிலிலுள்ள தஞ்சை நாயக்கர் கால ஓவியம் ஒன்று நமக்குக் காட்டி நிற்கின்றது. அக்காட்சி ஓவியத்தில் படகொன்றினை ஒருவன் துடுப்பு கொண்டு வலிக்க, மற்றொருவன் எறிஉளி ஏந்தி மீன் ஒன்றினைத் தாக்க முற்படுகிறான். அவனே முன்னர் படகுடன் கயிற்றால் இணைக்கப்பெற்ற எறிஉளி கொண்டு தாக்கிய மீன் ஒன்று அவ்வெறியுளியோடு நீரில் நீந்துகின்றது. அவ்வுளியானது மீனின் உடம்பைத் துளைத்து மறுபுறம் வெளிவந்துள்ளது. அந்த எறியுளி நீண்ட மூங்கில் கம்பில் சொருகப்பெற்று திகழ்கின்றது.
கூர்வாய் எறியுளி என்பது இரும்பினால் செய்யப்பெற்று மரக்கம்பில் சொருகப்பெற்ற சுளுக்கியாகும். அதன் வாய் கூராகவும், பிளவுபட்ட மற்றொரு கூர்முனையுடையதாகவும் இருக்கும். அதனை எறிவதற்காக கம்பில் இணைக்கப்பெறும்போது கூர்வாய் எறியுளி என பெயர் பெறுகின்றது. மீனைத் தாக்க எறியும் அந்த எறியுளி மீனோடு சென்றுவிடாமல் இருக்க அதில் கயிறு பிணைக்கப்பெற்று படகோடு இணைக்கப் பெற்றிருக்கும். சங்கப் பாடல்களுக்குக் காட்சி வடிவம் காட்டும் பட்டீச்சரம் சிவாலயத்து ஓவியம், பாடபேதத்தையும் நிர்ணயம் செய்ய உதவி நிற்கின்றது.
- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com