இந்த வாரம் கலாரசிகன்

இந்த வாரம் கலாரசிகன்
இந்த வாரம் கலாரசிகன்

ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, அதிலும் குறிப்பாக, முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மனதிற்குள் ஒரு வெறியும், முனைப்பும் இருக்கும். இந்த முறையும் பதக்கத்தை வென்றுவிட வேண்டும் என்பதல்ல, கடந்த முறை நிகழ்த்திய தனது சாதனையை இந்த முறை தானே முறியடித்து, புதிய சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் வெறியும் முனைப்புமாக இருக்கும்.
'தமிழ் இலக்கிய முன்னோடிகள்' வரிசையில் ஆண்டாள் பற்றிய கட்டுரையை வைரமுத்து இன்று ராஜபாளையத்தில் அரங்கேற்ற இருக்கிறார். முதன்முறையாக பாவேந்தர் பாரதிதாசன் குறித்த வைரமுத்துவின் கட்டுரையிலிருந்து இப்போது அரங்கேற இருக்கும் 'தமிழை ஆண்டாள்' கட்டுரை வரை ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போதும் எனக்கு ஒலிம்பிக் பந்தய வீரர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் வெளிவரும் ஒவ்வொரு கட்டுரையும் முந்தைய கட்டுரையை விஞ்சி நிற்கும் அதிசயத்தைப் பார்த்து வியந்து போகிறேன்.
'ராம்கோ' நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமசுப்பிரமணிய ராஜா இந்த நிகழ்ச்சி நடக்கும்போது நம்மிடையே இல்லை என்கிற குறை மனதில் நிறையவே இருக்கிறது. அவர் குறித்த 'தன் சரிதை' எழுத வேண்டும் எனும்போது, 'யாரை வைத்து எழுதலாம்?' என்று என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதை வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. 
உத்தரகண்டில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, 'யாரைத் தொடர்பு கொண்டு உதவிப் பொருள்களை அனுப்புவது?' என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொண்டதும் என்னிடம்தான். என் மீது எந்த அளவுக்கு அவர் அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதை நினைக்கும்போது நான் நெகிழ்ந்து போகிறேன்.
'ராம்கோ' நிறுவனம் கட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கிய அரங்கத்தில் கோதைத் தமிழின் அருமையை கவிப்பேரரசு வைரமுத்து அரங்கேற்ற இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. ராமசுப்பிரமணிய ராஜாவின் வழிகாட்டுதல் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. முன் வரிசையில் அமர்ந்து அவர் கேட்டிருந்தால்... நமக்குக் கொடுத்து வைக்கவில்லை!
ஆண்டாள் குறித்த கட்டுரைக்கு ஏற்பட்டிருக்கும் எழுச்சி மலைப்பை ஏற்படுத்துகிறது. அரங்கம் நிரம்பி வழியுமே... என்ன செய்வது என்கிற அச்சத்தைப் போக்கும் விதத்தில் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட உள்ளன என்பது ஆறுதல் அளிக்கிறது. இன்று மாலை அரங்கத்தில் சந்திப்போம்!

எங்கள் நிறுவனத்தின் சட்ட மேலாளர் என்.கோபாலன், சட்டம் தொடர்பான விவகாரங்களில் நீண்டகால அனுபவசாலி. வழக்குரைஞரான அவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வழக்குகளைக் கையாண்டு வருபவர்.
அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பிரபல நீதிபதிகள் குறித்தும், வழக்குரைஞர்கள் குறித்தும் உயர் நீதிமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சுவாரஸ்யமான வழக்குகள் குறித்தும் ஏகப்பட்ட செய்திகளைத் தெரிவித்தார். அப்போது அவர் கேட்டார்: 'நீங்கள் பி.வி.ஆர். எழுதிய 'மிலாட்' நாவலைப் படித்திருக்கிறீர்களா?' 'இல்லை' என்று சொன்னதும், 'நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் பின்னணியில் புனையப்பட்ட அற்புதமான நாவல் அது' என்று பரிந்துரைத்தார்.
அத்துடன் நின்றுவிடவில்லை. மயிலாப்பூர் கச்சேரி தெருவில் இயங்கும் ராஜேஸ்வரி வாடகை நூல் நிலையத்திலிருந்து அந்த நாவலைப் படிப்பதற்கு வாங்கி, எனக்கு அனுப்பியும் தந்துவிட்டார். கையில் எடுத்த புத்தகத்தை, படித்து முடிக்கும் வரை நான் கீழே வைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தையும், அங்கே நடக்கும் நிகழ்வுகளையும் சினிமாப் படம் போல வார்த்தைகளால் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் பி.வி.ஆர்.
'பி.வி.ஆர். ஒவ்வொரு நாவலிலும் ஒரு முக்கிய இடத்தை மையமாக வைத்து அதைச் சுற்றி தனது கதாபாத்திரங்களை உலவ விடுகிறார். இந்த நாவலில் சென்னை ஹைகோர்ட்டை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். அந்தக் கட்டட அழகையும், அதில் உலவிய மனிதர்களைப் பற்றிய செய்திகளையும் படிக்கும்போது அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மேலெழுகிறது' என்கிற பதிப்பாளரின் பதிப்புரை உண்மையிலும் உண்மை.
ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் முன்னால் தரப்பட்டிருக்கும் துணுக்குச் செய்திகளையும், நகைச்சுவைச் துணுக்குகளையும் புத்தகமாகவே தொகுக்கலாம் எனும் அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன. கோபாலனுக்கு நன்றி! 


கவிஞர் மல்லிகைதாசன் எழுதிய 'கோபுர உச்சியில் அரச மரம்' என்கிற ஹைக்கூ தொகுப்பு நூல் மதிப்புரைக்கு வந்திருந்தது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த கவிஞர் மல்லிகைதாசனின் இயற்பெயர் தி. பழனிச்சாமி என்றும், அவர் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக 23 ஆண்டுகளும், தலைமையாசிரியராக 9 ஆண்டுகளும் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர் என்பதும் அந்தத் தொகுப்பில் தரப்பட்டிருக்கும் கவிஞரின் தன்விவரக் குறிப்பிலிருந்து தெரிந்தது.
வாலாஜாபேட்டை கிளை நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவராகவும், வாலாஜா தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் கவிஞர் மல்லிகைதாசனின் சிறுகதைகள், ஹைக்கூ கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளிட்டவை பல இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. 100 ஹைக்கூ கவிதைகளை 'கோபுர உச்சியில் அரச மரம்' என்கிற பெயரில் தொகுத்திருக்கிறார். அதில் உள்ள ஒரு ஹைக்கூ படித்ததும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

'அம்மா' என்றாலும் அடி
சும்மா இருந்தாலும் அடி
கான்வென்ட் குழந்தைகளுக்கு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com