ஓடிப்போ வாடையே!

வினை பொருட்டு தலைவன் வேற்றூர் சென்றுள்ளான். மனையில் மங்கை மட்டுமே உள்ளாள். வாடைக்காற்று இரக்கமில்லாமல் தலைவியைத் தீண்டித் துன்புறுத்துகிறது. கூப்பிடாமலேயே தேடிவந்து கொல்லும் வாடைக்கு
ஓடிப்போ வாடையே!

வினை பொருட்டு தலைவன் வேற்றூர் சென்றுள்ளான். மனையில் மங்கை மட்டுமே உள்ளாள். வாடைக்காற்று இரக்கமில்லாமல் தலைவியைத் தீண்டித் துன்புறுத்துகிறது. கூப்பிடாமலேயே தேடிவந்து கொல்லும் வாடைக்குத் தாழ்ப்பாள் போட முடியவில்லையே என்று தவித்துக் கொண்டிருந்த தலைவிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது.
அரத்தினால் அறுத்துச் செய்த வளை கழல, தோள் நெகிழ பிரிவுத் துயரிலே பேதுறுகிறாளே என்று பரிவு சிறிதுமின்றிப் பாய்ந்து பாய்ந்து தாக்கும் வாடையை நோக்கி பரவசத்துடன் பகர்கின்றாள் தலைவி.
'வாடையே! அதோ என் தலைவர் அருகே வருகிறாராம்; விரைந்து வருகிறாராம்; என் துயர் துடைக்க வருகிறாராம்; வந்ததும் என்னை அணைப்பார். நீ தலைகுனிந்து ஓட வேண்டியிருக்கும். தலைவன் வந்ததும் நீ தலைதெறிக்கத் தோற்று ஓடத்தான் போகின்றாய். அதற்கு முன்பே நீ ஓடிப் போய்விடு வாடையே!
ஒன்பது மன்னர்கள் ஒன்றுகூடி தங்களின் பதினெட்டுக் கரங்களும் பின்னிப் பிணைந்துள்ளதால் கரிகால் வளவனை தோற்கடித்துவிடலாம் என்று கர்வத்துடன் வாகைப் பறந்தலையில் காத்திருந்தார்கள். அதிர வைக்கும் குதிரைப் படைகளோடு எதிரிகள் அணிவகுத்திருக்கும் வாகைப் பறந்தலை போர்க்களத்திற்கு வாகை சூட வருகின்றான் கரிகால் பெருவளத்தான் என்றதும் உதிர்ந்துவிடும் நம் தலை என்று, விதிர்த்து வெண்கொற்றக் குடைகளை வீசி எறிந்துவிட்டு ஓடிவிட்டார்களே பீடில்லா மன்னர்கள், அதுபோல் ஓடிவிடு வாடைக்காற்றே!' என்று எச்சரித்தாள் தலைவி.

'அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-

முனிய அலைத்தி, முரண்இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் 
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த
பீடில் மன்னர் போல,
ஓடுவை மன்னால் - வாடை நீ எமக்கே!' 
(அகநா, 125)
காதல் பாட்டில் கரிகால் பெருவளத்தானின் களச்செய்தியைப் பகர்ந்துள்ளார் புலவர் பரணர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com