கவி பாடலாம் வாங்க - 6

'இதந்தரு மனையி னீங்கி' என்று வரும் பாடல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று தெரிந்து கொண்டோம். புத்தகங்களில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று பெயர் போட்டிருக்கும்
கவி பாடலாம் வாங்க - 6

அசையும் சீரும் 'வாகீச கலாநிதி'

கி.வா. ஜகந்நாதன்
'இதந்தரு மனையி னீங்கி' என்று வரும் பாடல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று தெரிந்து கொண்டோம். புத்தகங்களில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று பெயர் போட்டிருக்கும் எல்லாமே இந்தப் பாடலைப் போல இருக்கும் என்று எண்ணக்கூடாது. ஒரே ராகத்தில், ஒரே தாளத்தில் பல மெட்டுக்கள் அமைந்திருப்பது போல, ஆறு சீர்கள் கொண்ட விருத்தங்களிலும் பல வகை உண்டு. போன முறை பார்த்த விருத்தத்தைப் போல இன்றி வேறு ஓசையுடன் வரும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றைக் கீழே பார்க்கலாம்.

'தண்ணந் தமிழின் பெருமையெலாம்
சாற்ற நம்மால் முடிவதுவோ?
எண்ணம் உணர்ச்சி இயற்கைஎழில்
எல்லாம் சொல்லில் வடித்தெழிலார்
வண்ண ஓசை கூட்டிநலம்
வாய்த்த கவிகள் புலவர்பலர்
திண்ணென் றமைத்தார் அவர்கவிதை
தெரிந்தே இன்பம் அடைவோமே'

இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியிலும் ஆறு சீர்களே இருக்கின்றன. ஆனால், பாட்டைப் படித்துப் பார்த்தால், ''இதந்தரு மனையி நீங்கி'' என்ற பாட்டைப் போல இல்லாமல் வேறு விதமான ஓசை உடையதாகத் தெரிகிறது.

'தண்ணந் தமிழின் பெருமையெலாம்
சாற்ற நம்மால் முடிவதுவோ?'

என்ற முதலடிக்கு முன்பு சொன்ன மாதிரி வாய்ப்பாடு அமைத்துப் பார்த்தால்,

'தான தனன தனதனனா
தான தான தனதனனா'

என்று வரும். முதல் பாதியும் பின் பாதியும் ஒத்து இணைந்து ஒலிக்கின்றன. பாதி அடியில் முதல் இரண்டு சீர்களையும்விட மூன்றாவது சீர் சற்றே பெரியதாக இருக்கிறது. 'தான தான' என்ற அரையடியின் ஓசை வேறு; இந்த ஓசை வேறு. இந்த ஓசை வேறுபாடு எதனால் உண்டாகிறது?
சீர் என்பது இன்னதென்று இன்னும் நாம் தெரிந்து கொள்ளவில்லை. புத்தகத்தில் பிரிந்திருக்கிறதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று செளகரியத்தை உத்தேசித்து முன்பு சொன்னேன். இப்போது, நாமே சீரைப் பற்றித் தெரிந்துகொண்டு அதைப் பிரிக்கவும் தெரிந்து கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.
சொல் என்பதற்கு உறுப்புக்கள் உண்டு. பல அங்கங்கள் சேர்ந்து உடம்பு அமைகிறது. அது போலவே பல எழுத்துக்கள் சேர்ந்து சொல் அமைகிறது. செய்யுளில் ஓர் அடியில் பல சீர்கள் இருக்கின்றன. சீர் என்பது அங்கம். பல சீர்களை உடைய அடி அங்கி; உடம்பு போன்றது. அப்படியே செய்யுள் என்னும் உடம்பில் அடி என்பது அங்கம். செய்யுளை நோக்க அடி என்பது அங்கமாகவும், சீரை நோக்க அது அங்கியாகவும் இருக்கிறது. பிள்ளையை நோக்க ஒருவன் தந்தையாக இருக்கிறான்; ஆனால் அவன் தந்தையை நோக்க அவன் மகனாக இருக்கிறான். அவ்வாறே அடி ஒரு முறையில் உடம்புபோல் அங்கியாகவும், வேறு ஒரு முறையில் அங்கமாகவும் இருக்கிறது.
அது போலவே சீருக்கும் அங்கம் உண்டு. அதை அசை என்று சொல்வார்கள். அசைகளின் வேறுபாட்டால் சீரும் வேறுபடும். அந்த அசைக்கு அங்கம் எழுத்து. எழுத்தால் ஆனது அசை; அசையால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி. எழுத்து என்பது எல்லா இலக்கணத்துக்கும் அடிப்படை யாப்பிலக்கணத்தின் சிறப்பான அடிப்படை அசை.
'இதந்தரு மனையி னீங்கி' என்பது அரையடி. அதில் மூன்று சீர்கள் இருக்கின்றன. 'இதந்தரு' என்பது ஒரு சீர். அதில் இரண்டு அசைகள் இருக்கின்றன. 'இதந்' என்பது ஓர் அசை; 'தரு' என்பது ஓர் அசை. 'மனையி' என்பது ஒரு சீர். அதில் 'மனை' என்ற அசையும் 'யி' என்ற அசையும் இருக்கின்றன. 'னீங்கி' என்பதிலும், 'னீங்' என்ற அசையும் 'கி' என்ற அசையும் இருக்கின்றன. இந்த அசைகளுக்குப் பேர் உண்டு. இதந்-தரு-மனை என்னும் மூன்றும் ஒரு வகை அசைகள்; யீ-னீங்-கி என்பது ஒரு வகை. முன்னாலே உள்ள மூன்றும் நிரை அசைகள்; பின்னாலே உள்ளவை நேர் அசைகள். 'இதந்' என்பதும், 'நிரை' என்பதும் ஒன்றுபோலவே ஒலிக்கின்றன. 'யி' என்பதும், 'னீங்' என்பதும், 'நேர்' என்பதுபோல ஒலிக்கின்றன. நேரசை, நிரையசை என்ற இரண்டு அசைகளே உண்டு. யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்பாகிய அசைகள் இரண்டே; மனிதன் இரண்டு காலால் நடப்பது போல, செய்யுட்கள் யாவுமே இந்த இரண்டு அசைகளாகிய அடிப்படை உறுப்புக்களைக் கொண்டு நடக்கின்றன.
க - என்ற எழுத்தைத் தனியே பிரித்து உச்சரித்தால் அது நேர் அசையாகும். அது தனிக் குற்றெழுத்து.
கா - என்ற எழுத்தைச் சொன்னால் அதுவும் நேரசையாகும். அது தனி நெட்டெழுத்து.
கல் - என்பதும் நேர் அசையே. ஒரு குறிலும் அதனோடு ஒரு மெய்யெழுத்தும் சேர்ந்து வந்தாலும் அது நேர் அசைதான்.
கால் - என்பது போல் ஒரு நெடிலும் ஒரு மெய்யெழுத்தும் சேர்ந்து வந்தாலும் அதுவும் நேரசையே. இவ்வாறு நேரசை நான்கு விதமாக வரும். நிரையசையும் நான்கு விதமாக வரும்.
கல: இது இரண்டு குறில்கள் சேர்ந்து வந்த நிரையசை.
கலா: இது ஒரு குறிலும் அதற்குப் பின் ஒரு நெடிலும் இணைந்து வந்த நிரையசை.
கலம்: இது இரண்டு குறிலும் ஒரு மெய்யும் இணைந்து வந்த நிரையசை.
கலாம்: இது ஒரு குறிலும் ஒரு நெடிலும் ஒரு மெய்யும் சேர்ந்து வந்த நிரையசை.
'கல' என்பதையே 'க' என்றும், 'ல' என்றும் பிரித்துத் தனித்தனியே நேர் அசையாகக் கொண்டால் என்ன என்ற கேள்வி பிறக்கலாம். பாட்டில் சீர் பிரிக்கும் போது 'க' என்பது முன் சீரிலும் 'ல' என்பது பின் சீரிலும் பிரிந்து வந்தால் தனித்தனியே நேரசைகளாகும். ஒரு சீரினிடையே சேர்ந்து வந்தால் நிரையசையே யாகும்.
'இதந்தரு மனையி னீங்கி' என்ற அரை அடியில் 'இதந்தரு' என்ற சீரில் இரண்டு அசைகள் இருக்கின்றன. இதந் -நிரை; தரு -நிரை. எனவே, இந்தச் சீரை நிரையசை என்று சொல்லலாம். 'மனையி' என்பது நிரை நேர் ஆகும்; மனை-நிரை; யி-நேர். னீங்கி - நேர்நேர். யினீ என்பதைச் சேர்த்துப் பார்த்தால் நிரையாகக் கொள்ளலாம். கலா என்பது போல. ஆனால், இந்தப் பாட்டில் மனையி என்று யி தனியே முதற் சீரில் சேர்ந்து பிரிந்து ஒலிக்கிறது. னீங் அடுத்த சீரில் சேர்ந்து பிரிந்து ஒலிக்கிறது.
இப்போது 'இதந்தரு' என்ற பாட்டை அசைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

இதந்தரு மனையி னீங்கி
நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

இடர்மிகு சிறைப்பட் டாலும்
நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

பதந்திரு விரண்டு மாறிப்
நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

பழிமிகுந் திழிவுற் றாலும்
நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

விதந்தரு கோடி யின்னல்
நிரைநிரை நேர்நேர் நேர்நேர்

சுதந்தர தேவி நின்னைத்
நிரைநிரை நேர்நேர் நேர்நேர்

தொழுதிடல் மறக்கி லேனே
நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

இந்தப் பாட்டில் உள்ள சீர்கள் யாவுமே இரண்டு அசைகளால் ஆனவை; அவற்றை ஈரசைச் சீர் என்று சொல்வார்கள்.

(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com