"ஞாயிறு' எனும் சான்றோன்!

சூரியனின் முதன்மையைக் கருதிய சுந்தரமூர்த்திசுவாமிகள் ""காலமு ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்'' என்று குறிப்பிட்டுள்ளார். பூமியிலிருக்கும் நமக்கு சூரியனே மிக அருகிலுள்ள கோளாகும்.
"ஞாயிறு' எனும் சான்றோன்!

சூரியனின் முதன்மையைக் கருதிய சுந்தரமூர்த்திசுவாமிகள் ""காலமு ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்'' என்று குறிப்பிட்டுள்ளார். பூமியிலிருக்கும் நமக்கு சூரியனே மிக அருகிலுள்ள கோளாகும். இது தாமாக ஒளிரும் தன்மை கொண்டது. மிகுதியான ஒளியைப் பெற்றிருக்கும் இயல்பை உடையது. சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் தருகின்றது. உலக உயிர்களுக்கு மட்டுமின்றி, செவ்வாய் முதலான கோள்களுக்கும் வெப்பம், ஒளி முதலானவற்றைச் சூரியன் வழங்குகிறது.

உலகில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் சூரியன் சான்றாக இருத்தலினால் அக்கோளுக்கு "சான்றோன்'" என்ற தமிழ்ப் பெயரைத் தமிழர்கள் வைத்துள்ளனர். இக்கருத்தைச் சிலப்பதிகாரம் (சிலப். து.மா.50,51) சுட்டும். இக்கருத்திற்கு இயைபாகப் பிங்கல நிகண்டு மிருகசீரிடம், அறிஞன், சூரியன் ஆகிய மூன்றினுக்கும் "சான்றோன்' என்ற பெயரிருத்தலை,

"மிருகசீரிடமு மிக்கோன் பெயரும்
பெருகிய கதிரின் பெயருஞ் சான்றோன்''
(பிங்கலம்,10, நூ.481)

என்று குறித்துள்ளது. சூரியனின் இன்றியமையாமையைக் கருதிய சமய நூல்கள் சூரியனைக் கடவுளாகப் போற்றுகின்றன. இளங்கோவடிகள் தம் நூலுள் "ஞாயிறு போற்றுதும்' எனக் கூறிச் சூரியனுக்குப் பெருமை சேர்க்கின்றார். தமிழர்கள் சூரிய வழிபாடு என்னும் பெயரில் சூரியனை வணங்கி வந்துள்ளனர். இச்செய்தியை நற்றிணையும், அகநானூறும் முறையே,

"முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடர்' (நற். 283: 6-7)

"தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்'
(அகநா.263:1-2)

என்று தெரிவிக்கின்றன. சூரியனை தெய்வமாகக் கொண்டு போற்றினர் என்ற செய்தியைக் கலித்தொகையும் (108:13) குறிப்பிட்டுள்ளது. தற்காலத்தில் கோயில்களில் சூரியன் முதலான ஒன்பது கோள்களை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

இன்றைய மருத்துவ அறிஞர்கள், சூரிய ஒளியில் மனித உடல் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்கிறது எனக் கூறுகின்றனர். சூரிய வணக்கத்திற்குரிய மந்திரம் தனியே உண்டு. அதனால் கதிரவனை வழிபட்டால் கண்ஒளி பெருகும் என்பர். "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?' என்ற பழமொழி இதை உணர்த்துகிறது. 

மயூரகவி என்ற வடமொழிப் புலவர் "சூரிய சதகம்' பாடிக் கண் பெற்றார் என்பது கர்ணபரம்பரை கதை. (கி.வா.ஜகந்நாதன், நவக்கிரங்கள் பக்.41) விதாலிபூர்ணிகா என்னும் பெயருடைய சோவியத் அறிஞர் ஒருவர், தம்நூலில் இச்செய்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களுடைய கூற்று ஒரு புறமிருக்க, மருத்துவ வல்லுநர்களும் சூரிய ஒளியில் மனித உடல் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்கின்றனர்' என்று குறித்துள்ளார். (பிறப்பு முதல் இறப்புவரை. பக்-41)

மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கின், சூரியன் உலகியல் நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி வானமண்டலத்தில் இயங்கும் செவ்வாய் முதலான கோள்களின் இயக்கங்களுக்கும் உதவி புரிகிறது எனக்கொள்ளலாம்.

சமயவாதிகள் காலத்தை உருவம் இல்லாதது என்பர். காலம் உருவம் இல்லாமலிருந்து கொண்டே உலகத்திற்குப் பயன் தருகிறது. இக்கருத்தினை சிவப்பிரகாசர் ""உருவிலியாயுங் காலமுதலுறு பயன் கண்டாங்கு'' (சதமணி மாலை -14) என்று குறிப்பிட்டுள்ளார். 

காலமானவன் ஞாயிறு என்னும் அளவுக் கருவியைக்கொண்டு மனிதர்களின் வாழ்நாளை அளக்கின்றான் என்ற செய்தியை நாலடியார்,
"தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும்நாள் உண்ணும்' (பா.7)

என்று குறித்துள்ளது. சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் காலத்திற்கு "செüராமானம்' என்று பெயர். சூரியனைக் கருவியாக வைத்துக்கொண்டு காலத்தை அளப்பதை சோதிடநூல்கள் குறிப்பிட்டுள்ளன. சித்திரைத் திங்கள் முதல்நாள் தொடங்கிப் பங்குனித் திங்கள் கடைநாள் வரை உள்ள ஒரு காலக்கூறினை செளராமானயாண்டு என்பர். அதாவது, சூரியன் மேடராசியில் இருந்து மீனராசி வரை செல்லும் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் செüராமானயாண்டு என்பர்.
சூரியன் மேடம் முதலான பன்னிரு ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் தங்கும் காலத்தைச் செüரமானமாதம் என்பர். சூரியன் சித்திரை மாதம் மேட ராசியில் நின்றால் மேட ஞாயிறு என்றும், இடபராசியில் நின்றால் இடப ஞாயிறு என்றும் அழைப்பர். வைகாசி மாதம் சூரியன் இடபராசியில் நின்றான் என்ற செய்தியை மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதையில் ""இருது இருது இளவேனில் எரிகதிர் இடபத்து''(40) எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் எரிகதிர் என்பது சூரியனையும், இடபம் என்பது இடப ராசியையும் குறிக்கும் சொற்களாகும். சூரியன் மேடம் முதலான ராசிகளில் சென்று திரிவான் என்ற உண்மையை நெடுநல்வாடை (160-161 குறித்துள்ளது.
இக்குறிக்கப்பட்ட செளரமானமாதம் இருபத்து ஒன்பது நாள்களுக்குக் குறையாமல் முப்பத்திரண்டு நாள்களுக்கு மிகாமல் வரும்.
உறையூர் முதுகண்ணன்சாத்தனார், சோழன் நலங்கிள்ளியின் இயல்பை சிறப்பித்துக் கூறும் நிலையில், "செஞ்ஞா யிற்றுச் செலவும்; அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்' (புறம்: 30) என்ற பாடலில், சூரியனைப் பற்றிய நுட்பமான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
சூரியன் ஓர்ஆண்டின் பாதியில் வடதிசை நோக்கியும் மறுபாதியில் தென்திசை நோக்கியும் செல்கின்றான். சூரியனின் வடக்கு, தெற்குப் பயணங்களை உத்தராயணம், தட்சிணாயணம் என்பர். பூமிதன்னைத்தானே சுற்றுவதன்றிச் சூரியனையும் சுற்றுவதால் இக்குறிப்பிட்ட உத்தராயண, தட்சிணாயணக் காலங்கள் உண்டாகின்றன. தைத் திங்கள் முதல் ஆனித் திங்கள் வரையிலுள்ள ஆறு திங்கள் உத்தராயண காலமாகும். ஆடித்திங்கள் முதல் மார்கழித் திங்கள் வரையிலுள்ள ஆறு திங்கள் தட்சிணாயணக் காலமாகும். சூரியன் வடக்கும் தெற்குமாகிய பயணங்களை நிகழ்த்தி வருகிறான் என்ற குறிப்பைப் புலவர் கபிலர், "மாறிவருதி' (புறநா. 8) என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com