தனிப்பாடல் திரட்டில் புலவர்களின் உத்திகள்

தனிப்பாடல் திரட்டில் புலவர்கள் பலர் வியக்கத்தக்க உத்திகளைப் பயன்படுத்திப் பல பாடல்களைப் படைத்துள்ளனர்.

வல்லினம், மெல்லினம், இடையினம்

தனிப்பாடல் திரட்டில் புலவர்கள் பலர் வியக்கத்தக்க உத்திகளைப் பயன்படுத்திப் பல பாடல்களைப் படைத்துள்ளனர். அக்காலத்தில் பாடல்களில் பல விளையாட்டுகளை இலக்கியத் தரத்தோடும் நயத்தோடும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவகைப்படும். இவற்றைக் கொண்டு தனித்தனியாக இயற்றப்பட்ட பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. அவற்றுள் வல்லின எழுத்துகள் மட்டுமே அமைந்த பாடல் இது.
"துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடா
றொடுத்த கொடைகடுக் கைபொற்போர் - பொடித்துத்
தொடிபடைத் ததோடுடித்தத் தோகைகூத் தாட
கடிபடைத்துக் காட்டித்துக் காடு'
"வானத்தில் மின்னல் தோன்றியபோது காந்தள் மலர்கள் பூத்துக் கிளைகளைத் தாங்க முடியாமல் நின்றன. பொன் போன்ற நிறமொத்த கொன்றை மலர்கள் அரும்பி மாலை போலத் தொங்கின; மயில்களும் தோகை விரித்தாடின. மாதர்களின் இடப்பாகத்தில் வளையல்கள் நிறைந்த கைகள் துடித்தன. இவையெல்லாம் மின்னல் தோன்றியபோது அந்தக் காட்டில் புதுமையைப் படைத்தன' எனப் புலவர் பாடியுள்ளார்.
மெல்லினத்தால் அமைந்த பாடல் இது.
"மானமேநன் எமன மென்மன மென்னு
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு
மானா மணிமேனி மான்'
"பெரிய கரிய யானைகளை உடைய வேந்தனே! இந்தப் பெண் மானமில்லா நிலையில் தவிக்கும் மனத்தோடும் நாணம் மிகக்கொண்டும் குறுகிப் போனாள். ஆனாலும், ஒரு மின்னல் மின்னியபோது எதிரே இந்தப் பெண் வந்ததும் - மின்னலைவிட ஒளி பொருந்திய அழகிய உருவத்தைப் பெற்றவளைப் போலல்லவா இருக்கிறாள்!' என்பது பாடலின் பொருள். 
இடையின எழுத்துகளால் அமைந்த பாடல் இது.
"யாழியல் வாயவிய வளவா யவொலி
யேழிய லெல்லாவா லேழையுரை - வாழி
யுழையே லியலா வயில்வி ழியையோ
விழையே லொளியா லிருள்'
"இந்தப் பெண்ணின் மொழிக்கு யாழினால் மீட்டப்பட்ட இலக்கண அளவோடு கூடிய ஒலி ஏழும் (சரிகமபதநி) நிகராகாது; மான்களின் வேல் போன்ற கண்களும் இவளுடைய கண்களுக்கு நிகராகாது; ஒளி பொருந்திய தங்கம், வைர ஆபரணங்கள் கூட இவளுடலில் வெளிப்படும் சிறப்பான ஒளிக்கு முன்னர் இருளடைந்துவிடும்' என்பது பாடலின் பொருள். என்னே நம் புலவரின் கவித்திறம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com