மறைமலையடிகளும் தேசியமும்

மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத்தைத் தனிமனித இயக்கமாகத் தொடங்கி, தமிழ் உலகின் உயிர்ப்பு இயக்கமாக ஆக்கினார்.
மறைமலையடிகளும் தேசியமும்

மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத்தைத் தனிமனித இயக்கமாகத் தொடங்கி, தமிழ் உலகின் உயிர்ப்பு இயக்கமாக ஆக்கினார்.  சைவமும் தமிழும் இரு கண்கள் என வாழ்ந்தார்.  தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளாரின் தொண்டும், எழுத்தும், பேச்சும் சைவத்தையும் தமிழையும் வளர்த்தன; அவருடைய வாழ்வு அதே காலக்கட்டத்தில் தொடங்கிய இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தோடும், விடுதலை பெற்ற பின்னர் திராவிட தேசியம், தமிழ் தேசியம் ஆகியவற்றோடும் தொடர்புடையது.  
இந்திய தேசியமும், திராவிட தேசியமும் படிப்படியே வளர்ந்து தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் தமிழ் தேசியமாக உருக்கொள்ள அடிகளாரின் "தனித்தமிழ் இயக்கமே' அடிப்படையாகும்.  20-ஆம் நூற்றாண்டின் தமிழையும், தமிழக வாழ்வியலையும், அரசியலையும், சமய நெறியையும், இலக்கியக் கோட்பாட்டையும் வரையறைக்கு உட்படுத்தியவர்  மறைமலை அடிகளார்.
இந்தியாவை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற உணர்வு 19-ஆம் நூற்றாண்டின்  இறுதியில்தான்  இந்திய மக்களுக்கு ஏற்படலாயிற்று. அக்கால சிற்றரசுகளின் மன்னர்களும்,  தேசிய  அரசியல் தலைவர்களும், கவிஞர்களும்  இங்கிலாந்து அரசிக்கும் அரசருக்கும் அரசுக்கும் தாங்கள் உட்பட்டு வாழ்பவர்களாகவே கருதி வாழ்ந்தனர். பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இங்கிலாந்து அரசிக்கும் அரசருக்கும் வாழ்த்துப் பாடல் பாடிக் கொண்டிருந்தார்கள். 
அனந்தராம  பாகவதர், இங்கிலாந்து அரசியையும் அரசரையும் வாழ்த்திப் பாடல் கேட்டபோது,  (25-02-1900) அடிகளார் எழுதிக் கொடுத்துள்ளார். அரசியார் 1901-இல் இறந்த செய்தி அறிந்து வருந்தியுள்ளார்; அரசியார் மறைவுக்கு இரங்கற்பா தமிழில் எழுதி ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து அனுப்புமாறு நல்லசாமிப் பிள்ளை  மடல் எழுதியுள்ளார்.
பாபு விபின் சந்திர பாலர்  சென்னைக்கு வந்திருந்தபோது பேசிய  இராஜாராம் மோகன் ராய் பற்றிய    சொற்பொழிவினைக் கேட்டார்.  சைவ சித்தாந்தமும் தமிழ் மொழிச் சிறப்பும் மனத்தில் பதித்திருந்த அடிகளார்  சென்னை வாழ்க்கையாலும்  கிறிஸ்துவக் கல்லூரியில் பணியாற்றியதாலும் அங்கிருந்த  ஆசிரியர்களாகிய  ஆங்கிலக் கிறிஸ்துவப் பாதிரியார்கள்  தொடர்பாலும்  பல சமயக் கருத்துகளை அறியலுற்றார்.  மேலும், மாக்ஸ் முல்லரின் மொழி பற்றிய கோட்பாடுகளையும், இந்து மதம் பற்றிய அவர் நூல்களையும் பயின்றார். அன்னிபெசண்டின் வழிகாட்டியாகிய கர்னல் ஆல்காட் சொற்பொழிவினைக் கேட்டார். 
வங்காளப் பிரிவினை 1905-இல் நிகழ்ந்ததற்குப் பின்னர்தான் இந்திய விடுதலைப் போராட்டம் சுடர்விட்டு எழுந்தது.  இந்த நேரத்தில் அடிகளாருக்கு வ.உ.சிதம்பரனாரும், சுவாமி வள்ளி நாயகமும் நட்பில் இருந்தனர். இவர்கள் இருவரும் திலகரின் தீவிரவாத சுதேசியத்தைப் பின்பற்றியவர்கள்.  அடிகளார் இயற்றிய சுதேசியப் பாடல்களைப் பெற்றுச்  சென்று இராமசேஷ ஐயர்  கணபதி கம்பெனியில்   அச்சிட்டு  அடுத்த நாள் (18-10-1905 ) கூட்டத்தில்  வழங்கியுள்ளார். மிதவாத காங்கிரஸ்தலைவர் கோகலேயின் மாநாட்டு அறிக்கையைப் படித்ததைத் தம் நாட்குறிப்பில் (25-01-1905) அடிகளார் எழுதி வைத்துள்ளார்.
"இந்தியாவின் பாதுகாவலர்' எனப் போற்றப்பெற்ற சுரேந்திரநாத் பானர்ஜி ஆங்கில அரசால்    சிறை செய்யப்  பெற்றதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் (20-04-1906) அடிகளார் இயற்றிய ஆங்கிலப் பாடல் இராமசேஷ ஐயரால் அச்சிடப்பெற்று வழங்கப்பெற்றது. பாபு விபின் சந்திரபாலர் சென்னைக் கடற்கரையில் (மே 1, 3, 1907) ஆற்றிய உரையைக் கேட்டதுடன் கல்கத்தா காங்கிரஸ் நடவடிக்கைகள் பற்றிய நூலை வாங்கிப் படித்தார்.      
பங்கிம் சந்திரரின்  வங்காள மொழிப் பாடலான "வந்தே மாதரம்'கந்தசாமி முதலியாராலும், பாரதியாராலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அடிகளார் 25-6-1908-இல் மொழி பெயர்த்துள்ளார். பாலகங்காதர திலகர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டதும் மிகவும் மனம் நொந்தார். 
மதன் மோகன் மாளவியா 1916 -இல் இந்து பல்கலைக்கழகம் ஏற்படுத்தியபோது,  "அவர் முயற்சிகள் வெற்றி பெறுக!' என்று வாழ்த்தி எழுதியிருக்கிறார். 
ஆனால்,  1920-இல் நடந்த  நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் விஜயராகவாச்சாரியார் பேசியதைப் பாராட்டிய அடிகளார், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய கருத்துகள் தமக்கு ஒப்புதல் இல்லை என்கிறார். ஆயினும் "காந்தி, சி.ஆர். தாஸ் ஆகியோர் முயற்சிகள் வெற்றிபெற ஈசன் அருளட்டும்' என்கிறார்.
வட நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடுகளை  (1929 -1932)  கண்டித்த அடிகளார், காவலர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களும் சண்டையிட்டுக்  கொள்வது அச்சமும் கவலையும் தருகிறது; அரசாங்கம் கொடுமைப்படுத்துவது மனவருத்தம் ஏற்படுத்துகிறது  என்று எழுதியுள்ளார்.  
காந்தியடிகள் (1932 ஜனவரி) கைது செய்யப்பட்டபோது, "சாதியில் உழலும் மக்களுக்காகக் காந்தி அடிகள் சிறை செல்லத் தேவையில்லை. மக்களுக்கு விடுதலைக்கு உரிய தகுதி இல்லை. அரசு அடக்கு முறை செய்கிறது. மக்களுக்கும் அரசுக்கும் இறைவன் அருள் புரிவானாக!'  என்று எழுதியுள்ளார். 
"திராவிடன்' இதழில் தொடர்ந்து எழுதி, திராவிட தேசியமும் வளர்த்தவர்; தனித்தமிழ், தமிழர் மதம், தமிழ் இலக்கியப் பதிப்பு, தமிழ் மேடைப் பேச்சு, தமிழ் எழுத்து, தமிழ் இதழ்கள் வெளியீடு, இலங்கை தென் ஆப்பிரிக்கத் தொடர்பு ஆகியவற்றால் தமிழ்த் தேசியத்துக்கும் அடித்தளம் அமைத்தவர்.
இந்திய அளவில் லாலா லஜபதிராய், திலகர், காந்தி என்னும் மூவேறு அரசியல் சக்திகள் தோன்றியதைப்  போல;  கர்னல் ஆல்காட், இராஜாராம் மோகன் ராய், சுவாமி  விவேகானந்தர் ஆகியோரின் மூவேறு சமுதாய, சமயக் கோட்பாடுகள் தோன்றியதைப்   போல;  தமிழ் நாட்டிலும் இந்திய தேசியம், திராவிட தேசியம், தமிழ் தேசியம் என்னும் மூவேறு தேசியக் கருத்துகள்  தோன்றியிருந்தன. இவற்றின் மூலமாகவும் வித்தாகவும் விளங்கியவர் மறைமலை அடிகளார்.
 

இன்று: (ஜூலை 15) மறைமலையடிகள் பிறந்த நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com