விடுதலை ஞானபாநு!

விடுதலை ஞானபாநு!

நாட்டுப்பற்றுடன் மொழிப்பற்றும் கொண்டவர்; உணர்ச்சிப்பெருக்குடன் சொற்பொழிவு ஆற்றும் திறன் படைத்தவர்;

நாட்டுப்பற்றுடன் மொழிப்பற்றும் கொண்டவர்; உணர்ச்சிப்பெருக்குடன் சொற்பொழிவு ஆற்றும் திறன் படைத்தவர்; இதழாசிரியர், நூலாசிரியர், நாடக ஆசிரியர், கதாசிரியர் - இப்படிப்பட்ட பன்முக ஆளுமையாக வலம் வந்தவர் தியாக சீலர் சுப்பிரமணிய சிவா.
 சிவா நாட்டுக்காகச் செய்த தியாகமோ மிகப் பெரிது; அதற்காக அவர் அடைந்த துன்பங்கள் எண்ணிலடங்கா. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டிருந்த சிவா, தம்முடைய குடும்ப வாழ்வில் பற்று அற்றவராகவே காணப்பட்டார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, சாது- சந்நியாசிகளுடன், தேச சஞ்சாரம் செய்து வந்தார்.
 வங்கப் பிரிவினை காரணமாக 1906-1907-ஆம் ஆண்டுகளில் பாரத தேசமெங்கும் சுதேசிய உணர்ச்சி பெருகியது. தேசிய நீரோட்டத்தில் சிவா தம்மைப் பிணைத்துக் கொண்டார். ஊர் ஊராகச் சென்று, சுதேசியப் பிரசாரம் செய்ய முற்பட்டார்.
 இந்நிலையில், சுதேசிய இயக்கத்திற்குத் தென் தமிழ்நாட்டில் நடுநாயகராக விளங்கிய வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் அவருக்குத் தொடர்பு கிடைத்தது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவரை உடன்பிறவா சகோதரனாக நினைத்துக் கொண்டார். அவர்கள் "இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று சுதந்திரப் போராட்ட வீரர்களால் போற்றப்பட்டனர். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேசி, நாட்டு மக்களை தேசியப் போராட்டத்தில் ஈடுபடும்படியான உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகளை சிவா செய்தார். சுப்பிரமணிய சிவாவின் எழுச்சிமிக்க உரைகள் மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பின. சிவா பேசினால் சவம் கூட உணர்ச்சி பெற்று எழுந்துவிடும் என்று கூறுமளவுக்கு அமைந்திருந்தது அவரது பேச்சுத்திறம்.
 ராஜ நிந்தனை வழக்குத் தொடரப்பட்டு, சிவா 1908 மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்பு சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறைவாசத்திலிருந்து 1912 நவம்பர் 2-ஆம் தேதி விடுதலை பெற்று வந்த சிவா, சென்னை மயிலாப்பூரில் வாசம் செய்யத் தொடங்கினார். சென்னையில் சிவா வாசம் செய்யத் தொடங்கிய காலத்தில், அவர் தம்முடைய மனைவியையும், வயதான தாயாரையும், மாமியாரையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தார். அவர்களும் தம் அன்றாட வாழ்க்கைத் தேவைக்குச் சிவாவையே நம்பியிருந்தனர். அதனால், சிவா தம்முடைய முழு கவனத்தையும் எழுதுவதில் செலவழிக்கத் திட்டமிட்டார். அதற்கான தீர்வாக, பத்திரிகைத் தொழிலையே சிவா தேர்ந்தெடுத்தார்.
 பிரிட்டிஷ் அரசினரால், சந்தேகிக்கப்பட்ட சிவாவிற்குப் பத்திரிகை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், அவர் தம்முடைய மனைவி மீனாட்சி அம்மை பெயரால் பத்திரிகை நடத்த அனுமதி பெற்றார்.
 பத்திரிகையின் பெயராக "ஞானபாநு' என்பதாகச் சூட்டி, 1913 எப்ரல் மாதத்திலிருந்து ஆன்மிக நோக்கில் பிரசுரம் செய்ய முற்பட்டார். "ஞானபாநு' பலரின் கவனத்தை ஈர்த்தது. ஓரளவு வருமானமும் கிடைக்க வழி ஏற்பட்டது. வ.உ.சி., வ.வே.சு. ஐயர், பாரதியார், டாக்டர் நஞ்சுண்டராவ், சுப்பராய ஐயர் போன்ற தேச பக்தர்களின் எழுத்தோவியங்கள் "ஞானபாநு'வை அணி செய்தன. "ஞானபாநு'வை நடத்தி வந்த தருணத்தில் 15-5-1915-இல் சிவாவின் மனைவி மீனாட்சி அம்மை காலமானார்.
 மனைவியின் பிரிவு குறித்து, தம்மை மூன்றாம் மனிதராகப் பாவித்துக் கொண்டு, 1915 ஜூன் மாத இதழில் சிவா எழுதிய தலையங்கம் கல்மனம் கொண்டவர்களையும் கரைக்கச் செய்யும்படி அமைந்திருந்தது.
 "காலஞ்சென்ற ஸ்ரீமதி மீநாட்சியம்மாள்' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தது அந்தத் தலையங்கம்.
 "நமது ஞானபாநு'வின் பதிப்பாசிரியரும், சொந்தக்காரியுமான ஸ்ரீமதி மீநாட்சியம்மாள் சென்ற வைகாசி மாதம் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மகாசக்தியில் இரண்டறக் கலந்துகொண்டாளென்ற விசனகரமான சம்பவத்தை நமது வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றோம். இவ்வம்மையார் ஸ்ரீ சுப்பிரமணிய சிவத்தின் மனைவியென்பதை அநேகமாக எல்லோரும் அறிவர்.
 ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் தேசபக்தி மேலீட்டால் சிறைவாசம் செய்ய நேர்ந்த காலத்தில், இவ்வம்மையார் பட்ட கஷ்டங்கள் பல. இவ்வம்மையாருக்கு இறக்கும்பொழுது வயது 27. ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் சிறு பிராயம் முதற்கொண்டே வேதாந்த விசாரணை செய்ய ஆரம்பித்து, இகலோக இன்பங்களை வெறுத்து, சாதுக்களுடனும், சந்நியாசிகளுடனும் சகவாசம் செய்துகொண்டு ராஜ்ய சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.
 அப்பொழுது இவ்வம்மையார் தமது தாயாரைத் துணையாகக் கொண்டு, மற்றச் சுற்றத்தினரை யெல்லாம் வெறுத்து, புருஷனே கதியென்ற பதிவிரதா தர்மத்தைப் பரிபாலனஞ் செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டு, புருஷன் இருக்கும் இடங்களைத் தேடித் தேடிச் செல்ல, ஸ்ரீசிவம் "கானவர் வலையிற்பட்டுக் கைதப்பியோடு மான் போல்' தமது மனைவியை அநேக இடங்களில், அநேக தடவைகளில் ஏமாற்றி நழுவிவிட, இவ்விதமாக இவ்வம்மையார் தமது புருஷனைத் தொடர்ந்து பட்ட கஷ்ட-நஷ்டங்கள் ஆச்சரியத்தையும், அனுதாபத்தையும் விளைவிக்கத்தக்கன.
 இவ்வாறாகவெல்லாம் ஸ்ரீசிவம் பல தடவைகளிலும் பல விதத்திலும் வெறுத்துத் தள்ளியும் சரீரத்தை விடாத சாயையைப் போல, இவ்வம்மையார் தமது புருஷனை விடாது பற்றித் தியானித்துக் கொண்டிருக்க, 1908-ஆம்
 வருஷத்தில் மகாசக்தியின் ஆக்ஞையின் பிரகாரம் ஸ்ரீசிவம் சிறைவாசம் செய்யுமாறு நேரிட்டது.
 அப்பொழுதும் இவ்வம்மையார் அவரை விடாது சிறைச்சாலை அதிகாரிகளின் மூலமாக அவருக்கு வேண்டிய செüகர்யங்களையெல்லாம் செய்து கொடுத்து, அவருடைய விடுதலை நாளை எதிர்பார்த்துக்கொண்டே காலங் கழித்தார். அப்போது இவ்வம்மையார் பட்ட கஷ்டங்கள் பற்பல.
 ஸ்ரீசிவம் இயற்கையிலேயே சந்நியாச நோக்குடையவராயினும், இவ்வம்மையார் ஆதிமுதல் தம்மை விடாது பின்பற்றித் தம்முடைய பதிவிரதா தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்ததால், இவ்வம்மையாருடன் கூடி இல்லறத்தில் வாழ இசைந்து, தமது விடுதலைக்குப்பின் சென்ற இரண்டரை வருஷ காலமாக வாழ்ந்து வந்தார்.
 இவர்களுக்கு இகபர சாதனமாக இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீசிவம் ராஜாங்கத்தாரால் சந்தேகிக்கப்பட்டவராதலால், பத்திரிகை நடத்துவதற்கு உத்தரவு கிடைப்பது சந்தேகம் என்று கருதி, ஸ்ரீமதி மீநாட்சியம்மாள் பேரால் பத்திரிகை நடத்துவதற்கு ராஜாங்கத்தாரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. சென்ற இரண்டு வருஷ காலமாகப் பத்திரிகை இடையூறின்றி நடைபெற்று வந்தமைக்கு முக்கிய காரணம், இவ்வம்மையாரின் ஆர்வமும், தூண்டுதலுமேயாம். இப்பொழுது இவ்வம்மையார் மகாசக்தியில் லயமாகி விட்டார்.
 தேச நன்மைக்கும், உலக முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தம்முடைய புருஷனுடைய கைங்கர்யமும், மற்ற தேசாபிமானிகளுடைய கார்யங்களும் இனிது நிறைவேறுமாறு இவ்வம்மையாரின் சக்தி அருள்புரிவதாக'' என்று அமைந்திருந்தது அந்தத் தலையங்கம்.
 சிவா தம்முடைய மனைவியின் மறைவையடுத்து, பத்திரிகைகளை நடத்துவதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தலானார்.
 இதன்பின் தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். 1909-ஆம் ஆண்டுவாக்கில் பாரதியார், பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். பாரதியின் ஆசை எண்ணத்திற்கு உருவமும் உயிரும் கொடுக்க சிவா முற்பட்டார்.
 ஸ்ரீபாரத மாதாவை எல்லோரும் ஏக மனத்துடன் தியானித்தால், அடிமைத்தனத்தைப் போக்கி, தர்மத்தை வளர்த்து ஸ்வதந்திரத்தை யுண்டு பண்ணிவிடலாம் என்று சிவா தீர்மானித்தார்.
 பாரத மாதாவுக்குக் கோயில் கட்ட சிவா தேர்ந்தெடுத்த இடம் தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி, சிறிய கிராமம்தான்! உள்ளூர்வாசிகளின் உதவியைக் கொண்டு நிலம் வாங்கி, அந்த இடத்தின் பெயராக "பாரதபுரம்' என்பதாகச் சூட்டினார்.
 அதன் பின்னர், பாரத மாதா கோயிலுக்கான அடிக்கல்லைத் தேசபந்து சித்தரஞ்சன தாஸரைக் கொண்டு, 1923 ஜூன் மாதம் 23-ஆம் தேதி நாட்டினார். ஜாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கோயிலில் அனுமதிக்கப்படுவர் என்றும் சிவா அறிவிப்பும் செய்தார்.
 பாரத மாதா கோயில் கட்டுவதற்கான முயற்சிகளை சிவா மேற்கொண்ட தருணத்தில், மீண்டும் சிறைப்பட்டார். அதன் காரணமாகக் கோயில் கட்டும் பணி தடைப்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்தவுடன் முதல் காரியமாக எப்பாடு பட்டாகிலும், பாரத மாதாவுக்குக் கோயிலைக் கட்டி முடிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டார்; நிதி திரட்டவும் முற்பட்டார்.
 சிவா எதிர்பார்த்த அளவு நிதி திரட்டலில் போதிய பலன் கிடைக்கவில்லை. ஆனாலும், சிவா மனத்தளர்ச்சி அடையவில்லை. தம் உயிர் உள்ளளவும் கோயிலைக் கட்ட வேண்டும் என்பதில் உறுதி கொண்டு, நிதிசேகரம் செய்வதற்காகப் பல ஊர்களுக்கும் பயணங்களை மேற்கொண்டார். இடைவிடாது மேற்கொண்ட பயணங்களால் சிவாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
 நாளுக்கு நாள் சிவாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. எவரும் எதிர்பாராத நிலையில், தமிழ்த் தாயின் தவப்புதல்வராகவும், பாரத தேவியின் திருவடித் தொண்டராகவும் திகழ்ந்த சிவா, 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்குத் தம்முடைய நாற்பத்தோராவது வயதில் பூத உடலை நீக்கிப் புகழ் உடல் பெற்றுவிட்டார்.
 சிவா தாம் வாழ்ந்த குறுகிய காலப் பகுதியில் ஒரு ஸ்தாபனமாகவே அமைந்து செயல்பட்ட ஞானதீரர். அவர் காலத்துக்குப் பிறகு இப்போது பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயில் எழுப்பப்பட உள்ளது. சிவாவின் கனவு நிறைவேறிவிட்டது.
 தலைவர்களுக்குச் சிலை எழுப்புவார்கள். மணிமண்டபம் கட்டுவார்கள். ஆனால், தியாகி சுப்பிரமணிய சிவா மட்டும்தான் பாரதமாதா கோயிலில் அருவமாகக்
 குடியிருக்கிறார்!
 ஜூலை 23 - சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாள்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com