இந்த வார கலாரசிகன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவையில் நடந்த இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையின் மகன் கோகுலக் கண்ணனின் திருமணத்திற்கு நண்பர்கள் டாக்டர் எல்.பி.தங்கவேலு
இந்த வார கலாரசிகன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவையில் நடந்த இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையின் மகன் கோகுலக் கண்ணனின் திருமணத்திற்கு நண்பர்கள் டாக்டர் எல்.பி.தங்கவேலு, சிங்கை தமிழ் நேசன் முஸ்தஃபா, கவிஞர் உஸ்மான் ஆகியோருடன் சென்றிருந்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு அங்கே ஒரு திடீர் ஆச்சரியச் சந்திப்பு. தனக்கே உரித்தான கருப்பு சால்வையுடன் வைகோ அமர்ந்திருந்தார். கட்சிக்காரர்களும் ரசிகர்களும் அவரை மொய்த்துக் கொண்டிருந்தனர்.
அவர் என் கரங்களைக் குலுக்கியபடி சொன்ன முதல் வார்த்தை, ""தமிழ்மணி'க்காகத் தமிழகமே தினமணிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நான் இதுவரை படித்திராத சங்க இலக்கியத் தகவல்களை "தமிழ்மணி'யில் படித்துத் தெரிந்து கொள்கிறேன். "தமிழ்மணி'யில் வரும் கட்டுரைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இவற்றை எல்லாம் எப்போது நீங்கள் புத்தகமாக்கி ஆவணப்படுத்தப் போகிறீர்கள்?'' என்று கேட்டபோது, உண்மையிலேயே நெகிழ்ந்தேன். 
மணமக்களை வாழ்த்த இருவரும் மேடைக்குப் போனோம். மணமகனுக்கும் மணமகளுக்கும் வை.கோ., "திருக்குறளை' அன்பளிப்பாக வழங்கினார். எந்தத் 
திருமணத்திற்குப் போனாலும் திருக்குறளை அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய இந்த வழக்கத்தைத் தமிழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

---------------


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும், அந்த ஆலையிலிருந்து வெளிப்படும் சல்பர் டை ஆக்சைடால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் இப்போது பரவலாக எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வேணு சீனிவாசன் எழுதிய "உலக வெப்ப உயர்வும் உருகிவரும் பனிமலைகளும்' நூல் கண்ணில் பட்டது. சுற்றுச்சூழல், காற்று மாசு தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் என்பதால், கோவை ரயில் பயண வாசிப்புக்கு அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றேன். 
"வளர்ச்சி' என்கிற பெயரில் மேற்கொள்ளப்படும் மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் உலகின் சராசரி வெப்பநிலை 
உயர்ந்துகொண்டே போகிறது. அதன் காரணமாக, இதுவரை சந்திக்காத அளவில் மனித குலமும் பூமியும் பருவ நிலை மாற்றங்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் சந்தித்து வருகின்றன. பருவ நிலை மாற்றங்கள் மனித குலத்தின் சரித்திரத்தில் அழியாத தழும்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.
காற்று மாசு ஏற்பட்டால் என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மட்டுமல்லாமல் அவற்றுக்கான காரணங்கள், அதன் பின்விளைவுகள், அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் என்று மிகப்பெரிய ஆய்வை வேணு சீனிவாசன் நிகழ்த்தியிருக்கிறார். உலக வெப்பத்தைக் குறைப்பதற்கு எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை சாமானியனுக்கும் புரியும் விதத்தில் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது என்பதுதான் வேணு சீனிவாசன் எழுதிய "உலக வெப்ப உயர்வும் உருகிவரும் பனிமலைகளும்' புத்தகத்தின் சிறப்பு. 

----------------------------


சமீபத்தில் வேடந்தாங்கலுக்குப் பறவைகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது என்பது குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அதைப் பார்த்தபோது, பெருமாள் முருகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, மா. கிருஷ்ணன் முன்பு எழுதிய பறவைகள் குறித்த 59 கட்டுரைகளின் தொகுப்பான "பறவைகளும் வேடந்தாங்கலும்' புத்தகம் நினைவுக்கு வந்தது. புகழ்பெற்ற காணுயிர் வல்லுநரான மா. கிருஷ்ணன் ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகள் குறித்தும், கானுயிர் குறித்தும் பல இயற்கையியல் கட்டுரைகளையும், நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்றவர். இவர், தமிழின் முன்னோடி நாவலாசிரியர்களுள் ஒருவரான ஆ. மாதவையாவின் மகன். 
1950-60-களில் தமிழ் இதழ்களிலும், கலைக்களஞ்சியத்திலும் இயற்கையியல் குறித்து பல கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். இவரது இயற்கையியல் பங்களிப்புக்காக மத்திய அரசு "பத்மஸ்ரீ ' விருது வழங்கி கெளரவித்திருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தால் பெரியசாமித்தூரனை பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியப் பணியில் மா. கிருஷ்ணன் பெரும் பங்கு வகித்திருக்கிறார். கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதியிலிருந்து 10-ஆவது தொகுதி வரை மா.கி.யின் பங்களிப்பாக பறவைகளைப் பற்றி 59 கட்டுரைகள் காணப்படுகின்றன. அந்தக் கட்டுரைகளுடன் வேடந்தாங்கல் குறித்த சிறு நூலையும் இணைத்துத் தொகுக்கப்பட்டிருப்பதுதான் "பறவைகளும் வேடந்தாங்கலும்'.
"பறவைகளும் வேடந்தாங்கலும்' தொகுப்பில் மா.கிருஷ்ணனால் பதிவு செய்யப்பட்டிருக்கும் 58 பறவைகளும் தமிழகம் சார்ந்தவை. இவற்றில் பெரும்பாலான பறவைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவை குறித்துத் தெரியாத பல விவரங்களை இந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன். இந்திய வனவிலங்கு புகலிடங்கள், வேடந்தாங்கல் நீர்ப்பறவை காப்புச் சாலை ஆகிய இரு கட்டுரைகளும் குறிப்பிடத்தக்க பதிவுகள்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பறவைகள் குறித்தும், கானுயிர் குறித்தும் ஆய்வு செய்து கட்டுரையாக்கி வைத்த மா.கிருஷ்ணனுக்கு நன்றி. அவருடைய கட்டுரைகளைத் தொகுத்து இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதற்காக "பறவைகளும் வேடந்தாங்கலும்' என்ற தலைப்பில் புத்தகமாக்கித் தந்திருக்கும் பெருமாள் முருகனுக்கும் நன்றி.

-----------------------------


"தினமணி' இணையதளத்தில் உதவி ஆசிரியராக இருப்பவர் திருமலை சோமு. இவர் ஒரு கவிஞர் என்பது எனக்குத் தெரியாது. ஒருநாள் தனது கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித்தர வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் என் அறைக்கு வந்தார். பணிச்சுமை காரணமாக உடனடியாக அணிந்துரை எழுதிக் கொடுக்க முடியவில்லை. எனது இயலாமையை அவரிடம் தெரிவித்தேன்.
கவிஞர் முத்துலிங்கத்துக்குப் பெரிய மனது. ஓர் அறிமுகக் கவிஞரான திருமலை சோமுவின் கவிதைத் தொகுப்புக்கு சற்றும் கெளரவம் பார்க்காமல் அணிந்துரை எழுதிக் கொடுத்த அந்தக் கவிஞரின் பண்பை என்ன சொல்லிப் பாராட்டினாலும் போதாது. வளரும் கவிஞர்களை வளர்ந்து விட்ட கவிஞர்கள் ஊக்குவிக்கும் பண்பு மகாகவி பாரதி, பாரதிதாசன் காலத்திலிருந்து தொடர்வதன் நீட்சிதானோ என்னவோ கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் திருமலை சோமுவின் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியது.
சென்னை கவிக்கோ மன்றத்தில் நேற்று, கவிஞர் முத்துலிங்கத்தால் வெளியிடப்பட்டு, கவிஞர் நெல்லை ஜெயந்தாவால் முதல் பிரதி பெறப்பட்ட கவிஞர் திருமலை சோமுவின், "மனசுக்குள் பெய்யும் மழை' கவிதைத் தொகுப்பிலிருந்து "பாவம்' என்கிற கவிதை:

எல்லா
பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்!
நதிகளைத் தொலைத்த
பாவத்தை
எப்படித் தீர்ப்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com