இலக்கியத்தில் மனவியல்

இலக்கியமும் உளவியலும் மிக நெருங்கிய தொடர்பு உடையவை. சங்க இலக்கியம் வாழ்வியல் அடிப்படையில் அமைந்துள்ளதால் அதனுள் உளவியல் கூறுகளை அதிக அளவில் காணமுடிகிறது. வாழ்வில் எதிர்கொண்ட
இலக்கியத்தில் மனவியல்

இலக்கியமும் உளவியலும் மிக நெருங்கிய தொடர்பு உடையவை. சங்க இலக்கியம் வாழ்வியல் அடிப்படையில் அமைந்துள்ளதால் அதனுள் உளவியல் கூறுகளை அதிக அளவில் காணமுடிகிறது. வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்களில் உருவான ஒரு மனநிலையின் எதிரொலியாகவே அகத்திணையும் புறத்திணையும் அமைகின்றன.
அகத்திணைப் பாடல்களின் பாடுபொருள் ஏதேனும் ஒரு மனநிலையினையோ அல்லது அந்த மனநிலை விளைவிற்குரிய சூழலையோ பாடுபொருளாகக்கொண்டு விளங்குகின்றன.
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் அகமாந்தர்கள் தோழி, தலைவி, தலைவன், தாய், செவிலி, பரத்தை, வாயில்கள் என்போராவர். இவர்கள் கூற்றாலும், கூற்றை முன்னிலைப்படுத்தும் முறையாலும் கூறவேண்டிய இடத்தில் கூறாமல் அதை மனத்திற் கொள்ளும் பாங்காலும் செய்யுளில் தங்கள் மனநிலையினை உணர்த்தி நிற்கின்றனர். 
செய்யுள்களில் அக மாந்தர்களின் மனவுணர்வுகள் கூறுவோரின் மனநிலைக்கு ஏற்ப, பின்புலங்களின் தன்மைக்கேற்ப, கூறுவோர் உள்ளுறை, இறைச்சிகளைப் பயன்படுத்தி குறிப்பாகவோ, உவமைகளைப் பயன்படுத்தி விளக்கமாகவோ, நேர்முகச் சொற்களைப் பயன்படுத்தி வெளிப்படையாகவோ தம் மன உணர்வினை வெளிப்படுத்துகின்றனர்.
சங்க கால மாந்தரில் தோழி, மனவியல் கூற்றினைப் பல்வேறு இடங்களில் கையாண்டிருக்கிறாள். 
மனவியலில் முக்கியமானது "ஆளுமை' என்பதாகும். தன்னளவிலும், தன் பட்டறிவிற்கேற்றவாறும் இயங்கும் தனித்த பண்பியல்களின் அமைப்பே "ஆளுமை' என்று கூறப்படுகிறது. 
தோழி, செவிலியின் மகள். நற்றாயோடு உடனிருக்கும் செவிலி போன்று எப்பொழுதும் தலைவியுடனே இருக்கிறாள். மரபும் சூழலும்தான் மனித ஆளுமைக்கான காரணங்களாக அமைகின்றன. இந்நிலையில், தோழியின் சிந்தனையும் செயலும் என்றும் தலைவியையே வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன. தோழியின் ஆளுமையானது தலைவியின் சார்பாக அமைந்த உடல் மற்றும் உள்ளத்தின் இயல்புகள், போக்கு, நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. 
உளநூலார் ஆளுமையின் அடிப்படையில், அகமுகத்தினர், புறமுகத்தினர் என்று மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். அவ்வகையில், புறமுகத்தினரின் முக்கிய பண்புகளாக அவர்கள் குறிப்பிட்டுள்ளவை தோழியின் சில பண்புகளோடு பொருந்தி வருவதைக் காணமுடிகிறது. 
"சூழலுக்கு ஏற்றபடி விழிப்பாக இருத்தல்; தலைவி, தலைவன், செவிலி ஆகியோருடன் இயல்பாகப் பழகுதல்; செயல் துடிப்புடன் இருத்தல்; மாறுதல்களை விரும்புதல் (தன் எண்ணம் நிறவேறாத இடத்து அறத்தோடு நிற்றல், உடன்போக்கு ஆகிய மாற்றங்களை அமைக்கிறாள்); எந்த நிலையிலும் தன்னைச் சரிகட்டிக் கொள்ளுதல் (பல இடங்களில் தலைவனைப் புகழும் அவள் பரத்தையிற் பிரிவில் அவனைக் கடிகிறாள்; வாயில் மறுக்கிறாள்); காரணமற்ற வெறுப்பு இல்லாமை (பாணனும், விறலியும் பரத்தைக்காகக் கீழ்நிலையுறும்போது அவர்கள் மீது தோழி வெறுப்பு கொள்கிறாள். தலைவன் தவறுணர்ந்து வீடு திரும்பும்போது, அவனுக்காகத் தலைவனிடம் வாயில் நேர்கிறாள்).
இத்தகைய ஆளுமைத் தன்மைகளின் அடிப்படையில் தோழி புற முகத்தினளாக வகைப்படுத்தலாம். குறிப்புப் பொருளினைக் கையாள்வதில் தோழியின் ஆளுமைத் தன்மையினை அறிவோம். ஒரு செய்தியை நேராகக் கூறுவது சாதாரண முறை. அதைக் குறிப்பாகக் கூறியோ, மறைவாகக் கூறியோ உணர்த்துவது மனவியல் முறையாகும். இம் முறையில் கைதேர்ந்தவளாகத் தோழி வலம் வருகிறாள்.
தலைவனிடம் வரைவு மேற்கொள் என்று நேரடியாகக் கூற முடியாத நிலையில், குறிப்புப்பொருள் வழி வரைவு தூண்டப்படுகிறது. இது வரைவு கடாதலில்தான் (நற்.85: 7-11) அதிகம் ஆளப்படுகிறது. 
தலைமகன் இரவுக்குறி வருவதை அறிந்த தோழி அதன் ஏதம் கூறி வரவு மறுக்கிறாள். அதனைத் தலைவிக்கு நேரடியாகக் கூறாமல் புலிக்கு அஞ்சி விரைந்து செல்லாத நடையையுடைய தன் கன்றைப் பிடியானை துணை நின்று பாதுகாக்கும். தலைவன் வரும்வழி அத்தகைய கொடிய வழி என்று கூறியதோடு, அதுபோல, தாங்களும் தலைவனின் பிரிவால் ஏற்படும் துன்பத்திற்கு அஞ்சினாலும், அவன் இருளில் வரும்போது ஏற்பட இருக்கும் துன்பத்தை எண்ணி, அவன் நன்மைக்காக அவனை வாராது பாதுகாக்க வேண்டும் என்கிறாள். தலைவனின் வரவினைத் தடுப்பது தலைவிக்கு வருத்தமும் மனவேறுபாட்டினையும் உருவாக்கும் என்பதை அறிந்ததோழி, அவள் மன நுட்பம் தனை அறிந்தவளாய் பிறிதோர் எடுத்துக்காட்டைக் குறிப்பால் உணர்த்தி, தன் கருத்தினைக் கூறி நிற்கும் திறத்தினை உணரமுடிகிறது. 
தலைவன் வரைவு நீட்டிக்கிறான். அதனால் தலைவி அடையும் வேதனையை நேராகக் கூறாமல் குறிப்புப்பொருள் மூலம் அறிவிப்பது, அதிக பயனைத் தரும் என்ற மனவியலை நன்குணர்ந்தவள் தோழி.
நற்றிணைப் பாடல் ஒன்றில் (151: 5-12), தோழி தலைவியை நோக்கி உன் நெற்றியில் பசலை படந்தாலும் பருத்த தோள் நெகிழ்ந்தாலும் இரவுப்பொழுதில் அவ்வழியில் குன்றநாடன் இனிவாராது இருப்பானாக என்று கூறவந்த இடத்து தோழி, தலைவியின் அச்சத்தை உணர்த்தவளாய், அவ்வச்சம் தீருவதற்கான வழியினை நேராகக் கூறினாள் தலைவி நாணடைவாள் என்றதால், களவில் புணர்ந்த மந்தி தன் சுற்றம் அறியுமே என்று அஞ்சி புணர்ச்சியால் குலைந்த மயிர்த் திருத்துதலைக் கூறி உள்ளுறையாகத் தலைவியின் அச்சம் தீரத் தலைவனை வரைக என்று கூறுகிறாள்.
மேலும், நற்றிணைப் பாடல் ஒன்றில் (318: 5-9) அன்பையும், துன்பத்தையும் களிறு காணாப் பிடியின் புலம்பலுக்கு உள்ளுறுத்திக் கூறுகின்ற தோழியின் மனவியலை அறிய முடிகிறது.
சங்க இலக்கியங்களில் தோழி கூற்றிற்குரிய பல இடங்களில் குறிப்பாக, காதலை மறைக்கும் தலைவியிடம், தான்அதனைஅறிந்ததாக நேராகக் கூறின் நாணுடைய அவள் தாங்குவளோ? என்ற அச்சத்திலும் (நற்.13: 5-9), நேராகப் பொருளீட்டி வந்து வரைக எனத் தலைவனிடம் கூறாமல் வரைய வேண்டிய முறையினையும்(நற். 57: 1-7) குறிப்பால் உணர்த்தும் பாடல்களின் வழி தோழியின் ஆளுமைத் திறனையும், உளவியல் துறையில் அவரின் மேம்பட்ட நிலையினையும் அறிய முடிகிறது.

-முனைவர் ம. தனப்பிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com