இடம்-பொருள்- ஏவல்!

இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக' என்பது பேச்சு வழக்கில் உள்ள தொடர். இடம் பொருள் ஏவல் இல்லையாடா? என்று பேசியிருப்போம் அல்லது பேசக் கேட்டிருப்போம். அப்படிச் சொல்வதன் பொருள் என்ன? 
இடம்-பொருள்- ஏவல்!

இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக' என்பது பேச்சு வழக்கில் உள்ள தொடர். இடம் பொருள் ஏவல் இல்லையாடா? என்று பேசியிருப்போம் அல்லது பேசக் கேட்டிருப்போம். அப்படிச் சொல்வதன் பொருள் என்ன? 
தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் தொடங்கி எல்லாவற்றிலும் தனித்தனியாக இடம்பெறும் மேற்குறித்த மூன்று சொற்களையும் அருளாளர்கள் இருவரும் இணைத்துக் காண்பது வியப்பாக இருக்கின்றது. 
"கற்பனைக் களஞ்சியம்' துறைமங்கலம் சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறியில் "அன்பற்ற செல்வம் பயனற்றது' என்பது பற்றி விளக்குமிடத்து,
இல்லானுக்கு அன்பிங்கு இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் யிருந்து மவர்க்கென் செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு (நன்னெறி.15)
என்று இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் பொருள்: நற்குணம் உடையவளே, பேசமுடியாத ஊமைகளுக்குப் பழைமையான சாத்திரம் என்ன பயனைச் செய்யும்? பார்க்கும் கண்பார்வை இல்லாதவர்க்கு எரியும் விளக்கு என்ன பயனைச் செய்யும்? 
இவ்வுலகத்தில் அன்பில்லாதவனுக்கு இடம், பொருள், ஏவல் முதலாகிய எல்லாம் இருந்தும் அது அவனுக்கு என்ன பயனைச் செய்யும்? அன்பில்லாதவன் இடம் பொருள் ஏவல் என எல்லாம் இருந்தும் அவற்றால் தருமத்தையும் புகழையும் அடைய மாட்டான். இடம் பொருள் ஏவல் எல்லாம் இருந்தும் அன்பு இல்லாதவற்கு வாய் பேசமுடியா ஊமை எப்படி சாத்திரங்களை இசையோடு ஓத முடியாதோ, கண்பார்வையற்றவர் விளக்கொளியைப் பார்க்க முடியாதோ அப்படிப்பட்டது. 
அடுத்து, வள்ளலார் வழி "இடம் பொருள் ஏவல்' பற்றிய பொருளை அறிவோம். 
"இடமே பொருளே ஏவலே என்றென்றெண்ணி இடர்ப் படுமோர்
மடமே உடையேன் தனக்கருள் நீவழங்கல் அழகோஆனந்த
நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத்தெய்வம் நயவேற்குத்
திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோதெரிப்பாயே'
(திருவருட்பா,கருணைவிண்ணப்பம். 572)
இவையெல்லாம் என் இடமா, இவையெல்லாம் என் பொருளா, இவரெல்லோரும் என் ஏவல் ஆட்களா என்று எண்ணி துன்பப்படும் மடமை பொருந்தியவனுக்கு நீ அருள் செய்வது அழகோ? 
இப்படியான பொருள்களை எல்லாம் கடந்து அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிதலே தனக்குக் கடமையாய் உடையவனே, உன்னையன்றி வேறு தெய்வம் உண்டு என்று விருப்பப்படுவோர் வியக்கும்படியான அருளை வழங்காது விடுவது அழகா? தெரிவிப்பாய். நீயே எல்லாம் என்பதை உணர்த்தி நிற்பாய் என்கின்றார் வள்ளலார்.
இவ்விரண்டு புலமையாளர்களின் பின்புலத்தில் இருந்தே இடம் பொருள் ஏவலின் பொருளை அறிய வேண்டும். 
இந்நில உலகத்தில் தனக்கான இடம் என்று எதுவும் இல்லை என்பதை உணர, செத்த பின்பு போய்ச் சேரும் இடம், பிறத்தலுக்கான மூல இடம், இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழும் இடம் என்பனவற்றின் உண்மைத் தன்மையை அறிதல் வேண்டும். அன்போடும் அருளோடும் சேர்த்த பொருள்தான் ஒருவனுக்கு எல்லா வகையிலும் உதவும். 
மற்ற வழியில் சேர்த்த பொருள்கள் நிலையான பழியை ஏற்படுத்தும். தனக்குத் தேவையான நேரத்தில் தான் ஏவிய வேலையைச் செய்யும் ஏவல் ஆட்களைக் கொண்டிருத்தல் ஒருவனுக்குச் சிறப்பு.
எப்படியாயினும் தக்க சமயம் பார்த்துப் பேச வேண்டும் என்கிற பொருளில் மேற்குறித்த மூன்று சொற்களும் இங்கே பயன்படுத்தப்படவில்லை. பஞ்ச பூதங்களும் தன் நிலையில் சிதையாமல் சஞ்சரிக்கும் நல்ல இடத்தைத் தனக்கு உரியவனாக உடையன் என்பது ஒருவனுக்குப் பெருமை. 
பிறரைத் துன்புறுத்தாது நேர்வழியில் வந்த எவ்வளவு பொருளானாலும் ஒருவனுக்கு நற்பயனைச் செய்யும். உடுக்கை இழக்கப் போகிறவன் கை போல விரைந்து தனக்கான தேவையைச் செய்யும் ஏவல் ஆட்களைப் பெற்றிருப்பவன் உயர்ந்தவன். இவற்றை முறையே பெற்றவன் முழுமையான, தூய்மையான மனிதன். 
எனவே, மேற்குறித்த பேச்சுவழக்கு "இடம் பொருள் ஏவல் அறிந்தவன்' என்று இருக்கவே வாய்ப்புண்டு. இடம் பொருள் ஏவல் அறியாதவனை அறிய வைத்தலும் அறிந்தவன் கடமை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com