இந்த வார கலாரசிகன்

ஒரு மகிழ்ச்சியான செய்தி. "தமிழ்மணி' பகுதியை வெளிக்கொணர அதைத் தொடங்கியது முதல் கடந்த பத்தாண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் "தினமணி' நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் இடைமருதூர்
இந்த வார கலாரசிகன்

ஒரு மகிழ்ச்சியான செய்தி. "தமிழ்மணி' பகுதியை வெளிக்கொணர அதைத் தொடங்கியது முதல் கடந்த பத்தாண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் "தினமணி' நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
"மணிவாசகரின் அகப்பொருள் மரபுகள்' என்கிற தலைப்பில் திருவாசகம்-திருக்கோவையார் குறித்த அவரது ஆய்வுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் "முனைவர்' பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வுக்குப் பலரும் ஏதாவது சுமாரான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, தனக்குப் பிடித்தமான மாணிக்கவாசகரின் திருவாசகம் - திருக்கோவையாரைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தவர் அவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அதற்காக இரவும் பகலும் பல தரவுகளையும் தேடிப் பிடித்து, திருவாசகம் - திருக்கோவையாரில் மூழ்கித் திளைத்து அவர் மேற்கொண்ட சிரமங்கள் ஏராளம்.
சங்க இலக்கியம், சமய இலக்கியம், சிறுவர் இலக்கியம், கதை, கட்டுரை, குறுநாவல் என்று 23க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கும் இடைமருதூர் கி.மஞ்சுளா, 20க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார். சைவ சித்தாந்தத்தில், குறிப்பாக பன்னிரு திருமுறைகளில் ஆழங்காற்பட்ட புலமை உடைய இவரது திருவாசகம்-திருக்கோவையார் குறித்த ஆய்வுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "தமிழ்மணி' வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள்!


முனைவர் பட்டம் பெற்ற செய்தியை தெரிவித்தபோது, அவரது "மாணிக்க மணிமாலை' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தார் இடைமருதூர் கி.மஞ்சுளா. பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில் அவர் வாசித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரால் வாசிக்கப்பட்ட "காதல் மகளிர் எழுவர்' என்கிற கட்டுரையுடன் தொடங்கும் இந்தத் தொகுப்பில், 18 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஏழு கட்டுரைகள் திருமுறைகள் சார்ந்தவை என்றாலும், கம்பர், பாரதி ஒளவைப்பிராட்டி என்று ஏனைய பல தமிழ் ஆளுமைகள் குறித்தும் கட்டுரைகள் வாசித்தளித்திருக்கிறார்.
"தினமணியின் தமிழ்மணியில் கம்பன் புகழ்', "இதழியல் வரலாற்றில் தினமணியின் பங்களிப்பு', "ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்ததில் தினமணியின் பங்கு' என்று "தினமணி' தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் குறித்தும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் அவர் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்திருக்கிறார் என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
பன்னாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகளை சாமானியத் தமிழ் வாசகர்களும் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் இயலும் வகையில் அமைத்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு!


"தினமணி'யின் "மகளிர் மணி' இணைப்பில் தொடர்ந்து வெளிவந்த "அம்மா' என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர், இப்போது அதே தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க 28 பெண் ஆளுமைகள் அவர்களுடைய தாய் குறித்து எழுதிய அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றிருப்பதற்குக் காரணம், வாசகர்களிடமிருந்து எழுந்த கோரிக்கைகள்தான்.
எல்லோருக்கும் அவரவர் தாய் குறித்துப் பதிவு செய்ய ஏராளமான செய்திகள் உண்டு. குறிப்பாக, அம்மாக்களுடனான உறவு என்பது உலகிலேயே மிகவும் வித்தியாசமானது, பாசத்துக்கு அப்பாற்பட்ட நட்புறவுடன் கூடியது. இதிலிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும், "அம்மா' என்கிற உன்னத உறவின் பல்வேறு பரிமாணங்களை எடுத்தியம்புகின்றன. இதுபோன்ற தொடர்கள் இனிமேல் தொடர்ந்து புத்தக வடிவம் பெறும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த வாரமே "நாயகம் ஒரு காவியம்' புத்தகம் குறித்துப் பதிவு செய்ய விரும்பினேன். கடைசி நிமிடக் குழப்பத்தில் அது இடம்பெறாமல் போய்விட்டது. கவிஞர் மு.மேத்தா கவிதையில் படைத்திருக்கும் நபிகள் நாயகம் அவர்களின் வரலாறுதான் "நாயகம் ஒரு காவியம்'. ஐந்தாவது பதிப்புப் பெறும் இந்தக் கவிதைத் தொகுப்பை இப்போதுதான் முழுமையாகப் படிக்க முடிந்தது என்பது எனது வருத்தம்.
சிலம்பொலி செல்லப்பனின் அணிந்துரையுடன் வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைக் காவியம், கவிஞர் மேத்தாவின் வரிகளில் நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடுகிறது. மேத்தாவின், "நாயகம் ஒரு காவியம்'தான் கவிஞர் வாலிக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பட்டத்தைப் பெற்றுத்தந்ததற்குக் காரணமாக அமைந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதைக் கவிஞர் வாலியே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.
""ஓர் உண்மையைச் சொல்கிறேன். நான் "அவதார புருஷன்' எழுதிய பிறகுதான் இலக்கிய உலகில் கவனிக்கப்பட்டேன். "அவதார புருஷன்' நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர் கவிஞர் மு.மேத்தா. மேத்தா நபிகள் நாயகத்தின் வரலாற்றை வசன கவிதையில் "நாயகம் ஒரு காவியம்' என்று அற்புதமாக எழுதி இருந்தார். அதில் நான்கே வரிகள்தான் படித்திருந்தேன். அப்படியே பிரமித்துப் போய்விட்டேன். அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று, விடிய விடியப் படித்தேன். பல இடங்களில் என் கண்கள் கலங்கின.''
""ஏன் இதைப்போல இராமாயணத்தை எழுதக்கூடாது என்று மறுநாள் எழுதத் தொடங்கினேன். எனக்கு ஒரு புதிய முகம், புதிய விலாசம், புதிய சிந்தனை, "நாயகம் ஒரு காவியம்' மூலம்தான் ஏற்பட்டது'' என்று கவிஞர் வாலி கூறியிருக்கிறார்.
சுருக்கமாக வசன கவிதையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்த கவிஞர் மு.மேத்தா, "சீறாபுராணம்' போல அதை ஒரு முழுமையான காவியமாக, கவிஞர் வாலி "அவதார புருஷன்' எழுதியதுபோல எழுத வேண்டும் என்கிற ஏக்கம், "நாயகம் ஒரு காவியம்' படித்து முடித்ததும் அனைவருக்குமே ஏற்படும். அது ஏன் கவிஞர் மு.மேத்தாவிற்கு ஏற்படவில்லை என்பதுதான் புரியவில்லை.

"நாயகம் ஒரு காவியம்' பற்றிக் கூறிவிட்டு அதிலிருந்து சில வரிகளைப் பதிவு செய்யாமல் போனால் எப்படி?

போராளிக்கு எந்தப் போர்க்களமும் இறுதிப் போர்க்களமல்ல... எந்த வெற்றியும் இறுதி வெற்றி அல்ல... ஏனென்றால் இலட்சிய நாயகர்கள் தேகங்களால் ஆனவர்களல்ல... தாகங்களால் ஆனவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com