கவி பாடலாம் வாங்க - 29: எழுத்து, அசை, சீர் - 1

இது வரையில் யாப்பிலக்கணத்தில் உள்ள பழைய முறைப்படி செய்யுளின் இலக்கணத்தை எழுதி வரவில்லை.
கவி பாடலாம் வாங்க - 29: எழுத்து, அசை, சீர் - 1

(இரண்டாம் பாகம்)

இது வரையில் யாப்பிலக்கணத்தில் உள்ள பழைய முறைப்படி செய்யுளின் இலக்கணத்தை எழுதி வரவில்லை. பெரும்பாலும் இலக்கியங்களில் பயின்று வரும் செய்யுட்களின் இலக்கணங்களையும், அவை சம்பந்தமான வேறு சில இலக்கணங்களையும் பார்த்தோம். இனி, யாப்பிலக்கண நூலில் உள்ளவற்றில் அவசியமானவற்றைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.
செய்யுளின் இலக்கணத்தை யாப்பிலக்கணம் என்று குறிப்பது வழக்கு. அந்த இலக்கணம் யாப்புக்கு உரிய உறுப்புக்கள் ஆறு என்று சொல்லும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன அவை. செய்யுட்களைப் பா என்றும் பாவினம் என்றும் இரு வகையாகப் பிரிப்பார்கள்.
எழுத்தினால் ஆனது அசை; அசைகளால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி; அடிகளால் ஆனது பா; சீரும் சீரும் சேரும் இணைப்புக்குத் தளை என்று பெயர். மோனை, எதுகை முதலிய அழகான அமைப்புக்களுக்குத் தொடை என்று பெயர்.
எழுத்தைப் பற்றிய இலக்கணத்தை முதலில் யாப்பிலக்கணம் கூறுகிறது. அதைப் பற்றி நாம் எழுத்திலக்கணத்திலும் தெரிந்து கொள்ளலாம். குறில், நெடில், உயிர், குற்றிய
லிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஆய்தம், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்மெய், அளபெடை என்னும் பதின்மூன்றும் எழுத்தின் வகை.
அசைகளின் இலக்கணத்தை முன்பே பார்த்தோம். அசைகள் நேரசை, நிரையசை என்று இரண்டு வகைப்படும் என்பதும், தனிக்குறில் - தனி நெடில் - ஒற்றடுத்த குறில் - ஒற்றடுத்த நெடில் என்னும் நான்கும் நேரசைகள் என்பதும், இரண்டு குறில் - குறிலையடுத்த நெடில்- இரு குறிலும் ஒற்றும் - குறில் நெடில் ஒற்று ஆகியவை நிரையசைகள் என்பதும் முன்பே நாம் அறிந்தவை. 
இவற்றுக்கு உதாரணமாக ஆ-ழி-வெள்-வேல்; வெறி-சுறா-நிறம்-விளாம் என்பவற்றை யாப்பருங்கலக்காரிகை எடுத்துக் காட்டுகிறது. "குற்றெழுத்துத் தனியே வரினும், நெட்டெழுத்துத் தனியே வரினும், குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும், நெட்டெழுத்து ஒற்றடுத்து வரினும் நேரசையாம். குறில் இணைந்து வரினும், குறில் நெடில் இணைந்து வரினும், குறில் இணைந்து ஒற்றடுத்த வரினும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும் நிரையசையாம்' என்பது காரிகை உரை. அசையின் இலக்கணத்தைச் சொல்லும் சூத்திரம் வருமாறு:

"குறிலே நெடிலே குறில்இணை ஏனைக் குறில்நெடிலே
நெறியே வரினும் நிரைந்துஒற் றடுப்பினும் நேர்நிரை என்று
அறி, வேய் புரையும்மன் தோளி; உதாரணம், ஆழிவெள்வேல்
வெறியேய் சுறாநிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே'

(நெறியே வரினும் - முறையாக வந்தாலும், நிரைந்து - வரிசையாக நின்று வேய்புரையும் மென் தோளி- மூங்கிலை ஒத்த மெல்லிய தோளையுடைய பெண்ணே. ஒரு பெண்ணை நோக்கிப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல ஆசிரியர் பாட்டைப் பாடியிருக்கிறார். பெண்ணை முன்னிலையாக வைத்துப் பாடியிருக்கிறார். பெண்மை முன்னிலையாக வைத்துப் பாடினால் அதை மகடூஉ முன்னிலை என்பர். (மகடூஉ-பெண்) வேண்டுவர் - புலவர்கள் விரும்புவார்கள்)
சீர்கள் ஒன்று முதல் நான்கு அசைகளால் அமையும். ஓரசைச் சீர் இரண்டு. அவற்றை அசைச்சீர் என்றும் சொல்வார்கள். நேர் என்ற ஓரசைச் சீருக்கு நாள் என்பது வாய்பாடு. நிரை என்ற ஓரசைச் சீருக்கு மலர் என்பது வாய்பாடு.
ஈரசைச் சீர்கள் நான்கு: தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்பன. இவற்றை ஆசிரிய உரிச்சீர், அகவற்சீர், இயற்சீர் என்று கூறுவர்.
மூவசைச் சீர்கள் காய்ச்சீர், கனிச்சீர் என இரு வகைப்படும். காய்ச்சீர் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என நான்கு. இவற்றை வெண்பா உரிச்சீர், வெண்சீர் என்று கூறுவர்.
கனிச்சீர் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என நான்கு. இவற்றை வஞ்சி உரிச்சீர், வஞ்சிச்சீர் என்று கூறுவர்.
நாலசைச் சீர்கள் பதினாறு. தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்ற நான்கோடு தண்பூ, தண்ணிழல், நறும்பூ, நறுநிழல் என்ற நான்கையும் தனித்தனியே சேர்த்தால் பதினாறு சீர்கள் வரும். இவற்றைப் பொதுச்சீர் என்பார்கள்.
வெண்சீர், ஆசிரியச்சீர், வஞ்சிச்சீர் என்று ஒவ்வொரு வகைப்பாவின் பெயரோடும் சீர் இருப்பது போலக் கலிச் சீர் என்று ஒன்று இல்லை.
சீர்களைக் குறிப்பிடும்போது அவற்றில் வரும் ஈற்றைச் சுட்டிப் பெயர் சொல்வது வழக்கம். மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர், நிழற்சீர் என்று குறிப்பிடுவார்கள்.

(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com