திருக்குறளின் பெருமை பேசும் திருப்புல்லாணி மாலை!

காலத்தை வென்று நிற்கும் திருக்குறளின் திட்ப, நுட்பக் கருத்துகளை அன்று தொட்டு தமிழ்ப் புலவர்கள் வேண்டிய இடங்களில் எல்லாம் தம் நூல்களில் எடுத்தாண்டுள்ளனர். 
திருக்குறளின் பெருமை பேசும் திருப்புல்லாணி மாலை!

காலத்தை வென்று நிற்கும் திருக்குறளின் திட்ப, நுட்பக் கருத்துகளை அன்று தொட்டு தமிழ்ப் புலவர்கள் வேண்டிய இடங்களில் எல்லாம் தம் நூல்களில் எடுத்தாண்டுள்ளனர். 

அவ்வகையில், தாம் இயற்றிய "திருப்புல்லாணி மாலை' என்னும் நூலில் திருப்புல்லாணியில் உறையும் பெருமாளின் பெருமையைப் பேசியுள்ளதோடு, திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்திலிருந்தும் ஒரு குறட்பாவை மேற்கோள் காட்டியுள்ள இப்புலவர் பெருமகன் யாரென்று தெரியவில்லை. 

இந்நூல், மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராதிபர் நாராயணையங்காரால் பரிசோதிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் சங்க முத்திரா சாலையில் 1915-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நூலுக்கு நாராயணையங்கார் எழுதிய முகவுரையில், ""இசையாலும் எதுகை மோனைகளாலும் ஒன்றற்கொன்று வேறுபட்ட விருதிறப்பாட்டிற்கேக தேசத்தில் ஐக்கியந்தோன்றப்பாடுமிடத் துண்டாகு மிடர்ப்பாடு பலவாதலால், ஒரோவழி மேற்கோளில் ஓரோரெழுத்து விரித்தும், தொகுத்தும், வகையுளி கொண்டும் படிக்கத்தக்கதாயிருக்கிறது. இடையிடையே சில திருக்குறள்களுக்குள்ள அதிகாரப் பொருளைக் கருதாது, தோத்திரத்துக் கேற்றவாறு பிறிதுபொருள் கொள்ளவும், சொற்சுவை பொருட்சுவை சுருங்கவும் பாடப்பட்டிருக்கிறது.

ஒரு பிரதியே கிடைத்தமையால், பிழையறப் பரிசோதிப்பதற்கும், சிதைந்த இடங்களில் உண்மைப் பாடங்கண்டெழுதுவதற்கும் இயலாமற்போயிற்று.

ஆயினும், ஒருவாறு இடையிடையே வீழ்ந்திருந்த எழுத்துப் பிழையைத் திருத்தியும், சிதைந்த இடங்களில் வேண்டுஞ் சொற்களைப் பிறைக்குறி () கொடுத்தமைத்தும் இம்முறை வெளியிடப்பெறுகிறது. 

இப்பாமாலை யியற்றியவரது பெயர் முதலிய வொன்றும் நன்கு விளங்கவில்லை. விளங்கியபின் வெளியிடப்படும்.

இந்நூலெழுதிய ஏட்டுப் பிரதியைச் சங்கத்தாருக்குக் கொடுத்துதவிய úஸதுஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீமத்-ரா.ராகவையங்காரவர்களுக்கு இச்சங்கத்தார் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்'' என்று பதிவு செய்துள்ளார். 

எடுத்தாண்ட குறளுக்கு ஏற்ப பொருளையும் அமைத்துத் திருப்புல்லாணியில் உறையும் பெருமாளையும் நினைந்துருகி, நூற்றி எண்பத்தெட்டு கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் இந்த நூலை யாத்தளித்துள்ளார். 

"திருவள் ளுவர்குறட் பாவைக் கலித்துறைச் செய்யுளிற்சேர்த்
தருள்புல்லை மாலைக் க(ழல்பணிந் தேத்தலின் யாருமன்னோன்)
பெருமைகண் டென்சொலைப் புன்சொலென் னாதன்பு (பெற்றதெனக்)
கருதி மதிப்பர் பரிதி மதிப்பெருங் காலமுமே' 

என அவையடக்கச் செய்யுளில் ஆசிரியர் அழகுறத் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடியுள்ள இந்தத் தெள்ளு தமிழ்ப் பனுவலைப் பயின்றால் பரமனடியைப் பரவிய பக்தியோடு கூடிய மகிழ்வும், திருக்குறளைப் பயின்ற இன்பமும் ஆகிய "ஒரு கல்லில் இரு மாங்காய்' என்னும் பழமொழிக்கேற்ப இருவித பயன்களை எய்துகிறோம்.

அறத்துப்பாலின்கண் உள்ள "மெய்யுணர்வு' பாடல் இது:
"கருவார் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம் பொருள்காண் பதறிவென் றோதின ராற்றிருப் புல்லை நக
ரருண்மால்சிறப்பென்னுஞ் செம்பொருள்வாழ்வுடைத்தாதலினால்
வருபே ரறிஞர்கண் டேழ்பிற விப்புன்மை மாற்றுவரே' (36)
பொருட்பாலின்கண் உள்ள "மருந்து':
"காறழ லையமொத் தற்ற தறிந்து கடைப்பிடித்து
மாறல்ல துய்க்க துவரப் பசித்தென வள்ளுவர் நூல் 
கூற லறிந்துடல் பேணுத லுன்னடிக் கோகனகப்
பேறு பெறுந்தவஞ் செய்யவன் றோபுல்லைப் பேரின்பனே' (95)
இன்பத்துப் பாலின்கண் உள்ள "ஊடலு வகை':
"பூமின் கெழுநன்றென் புல்லாணி நாட்டிற் புணர்ச்சியினுந்
தோமொன்றி லார்க்குநன் றூடல தின்பஞ் சொலற்கெளிதோ
யாமென்றறிஞ ருணலினு முண்ட தறலினிது 
காமம் புணர்தவி னூட லினிதெனக் கண்டனரே' (188)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com