இந்த வாரம் கலாரசிகன்

பத்தாண்டுகளுக்கு முன்பு கி.வா.ஜ. பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டுப் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இந்த வாரம் கலாரசிகன்

பத்தாண்டுகளுக்கு முன்பு கி.வா.ஜ. பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டுப் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அப்படி வெளியிடப்பட்ட கி.வா.ஜ.நூற்றாண்டு வெளியீடுகளில் ஒன்று "கி.வா.ஜ.பேசுகிறார்'. சில புத்தகங்களை ஏற்கெனவே படித்திருந்தாலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிதாகப் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட புத்தகங்களில் "கி.வா.ஜ.பேசுகிறார்' கட்டுரைத் தொகுப்பும் ஒன்று.
 "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் தலைமாணாக்கராக விளங்கியவர் கி.வா.ஜ. இவர் புலவராகவும், இலக்கியவாதியாகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தது மட்டுமல்லாமல், அற்புதமான பேச்சாளராகவும் விளங்கியவர். இவரது பேச்சிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடை தன்னையறியாமலேயே வந்துவிழும். இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆற்றிய உரைகளை எல்லாம் முழுமையாகப் பதிவு செய்து வைக்காமல் போனது மிகப்பெரிய குறை.
 "கொச்சைத் தமிழ்' என்றொரு கட்டுரை. அதில் பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுவது குறித்து கி.வா.ஜ. தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ""கொச்சைத் தமிழைக் கணக்கு வழக்கில்லாமல் எழுத்தில் உபயோகப்படுத்தி வந்தால், இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகி, இரண்டும் வெவ்வேறு மொழியாகிப் போனாலும் போகலாம். அத்தகைய அபாயம் வராமல் காப்பாற்றுவதற்குப் பேசும் தமிழில் கொச்சை வார்த்தை பலவற்றுக்கு விடைகொடுத்துவிட்டு அதன் நடையைச் சிறிது உயர்த்த வேண்டும்'' என்பதுதான் இதற்கு கி.வா.ஜ. தரும் விடை.
 1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபையில், பாரதிய சாகித்திய பரிஷத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதன் தலைவர் காந்தியடிகள். அந்த மாநாட்டில் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தனது வரவேற்புரையைத் தமிழில்தான் ஆற்றினார். அதை இந்தியில் மொழிபெயர்த்துத் தனியாக அச்சிட்டிருந்தார்கள்.
 விழா முடிவில் காந்தியடிகள் பேசும்போது, ""சாமிநாதையர் அவர்களைப் பார்க்கும்போதும், அவர் பிரசங்கத்தைக் கேட்கும்போதும், அவரது காலடியின் கீழிருந்து தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது'' என்று குறிப்பிட்டபோது, அந்த மாநாட்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
 கி.வா.ஜ.வின் புத்தகங்களைப் படிக்கும் போதெல்லாம் அவரது காலடியின் கீழிருந்து தமிழ் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்கிற ஏக்கம் உண்டாகிறது. கி.வா.ஜ. பாணியில் சொல்வதாக இருந்தால், இது உபசாரத்துக்காகச் சொன்ன வார்த்தை அல்ல.
 
 உதயை மு.வீரையன் தினமணி வாசகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமான பெயர். தினமணியில் தொடர்ந்து அவர் எழுதிவரும் நடுப்பக்க கட்டுரைகளுக்கென்றே ஒரு வாசகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. திருத்துறைப்பூண்டி வட்டம் உதய மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த மு.வீரையன் சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றவர்.
 திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் என்று இவர் படிப்படியாகத் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் உதயை மு.வீரையனின் சமுதாயப் பார்வைதான் அவரது எழுத்துக்கு தனித்துவத்தை ஏற்படுத்துகிறது.
 தினமணியில் நடுப்பக்கக் கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், பல சிற்றிதழ்களிலும், இடதுசாரி இதழ்களிலும் இவருடைய கட்டுரைகள் வெளிவருகின்றன. அவ்வப்போது நாட்டில் நடந்துவரும்
 நிகழ்வுகள் குறித்த தன் கருத்துகளைக் கட்டுரைகளாக உதயை மு.வீரையன் பதிவு செய்திருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதியிருக்கும் 29 கட்டுரைகள் "உலகம் எங்கே போகிறது?' என்கிற தலைப்பில் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
 இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் நான்காவது உலகப் போர், சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமா?, முதுமை என்பது வரமா, சாபமா?, வரும் கடனும் வாராக் கடனும், கோபுரமா? குப்பை மேடா?, ஏறு தழுவுதல் என்னும் எழுச்சிப் போர் உள்ளிட்ட பல கட்டுரைகள் இவரது சமூக அக்கறையையும், சமுதாயத்தின் தவறுகளுக்கு எதிரான அறச் சீற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன.
 இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் "கவிக்கொண்டல்' இதழின் ஆசிரியர் மா.செங்குட்டுவன் கூறியிருப்பதுபோல, இன்றைய சமூகச் சூழலில் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய நியாயமான கேள்விகளை இந்தத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகளின் வாயிலாக உதயை மு.வீரையன் பதிவு செய்திருக்கிறார்.
 
 கவிஞர் பழநி பாரதி எனக்கு அறிமுகமானவரே தவிர, நெருக்கமாகப் பழக்கமானவர் அல்ல. ஆனால், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவருக்குமே நெருக்கமானவர். அவரிடம் நான் பேசிப் பழகியதில்லையே தவிர, அவரது எழுத்தைப் படித்துப் பழகியிருக்கிறேன், அவருடைய பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் பழநி பாரதியின் தனிக்கவிதைகளை ஒருமுறைக்குப் பலமுறை படித்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறேன்.
 கடந்த வாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தபோது, என்னுடன் பயணித்த ஒருவர், படித்துக் கொண்டிருந்த கவிதைத் தொகுப்பு கவிஞர் பழநி பாரதியின் "புறாக்கள் மறைந்த இரவு'. அவர் எப்போது படித்து முடிப்பார் என்று காத்திருந்து அவர் படித்து முடித்ததும் வாங்கி, அந்தக் கவிதைப் புத்தகத்தை நானும் படித்து முடித்தேன். அதிலிருந்த ஒரு கவிதை என்னை அடுத்த அரைமணி நேரத்துக்கு யோசிக்க வைத்தது.
 எங்கு பார்த்தாலும் நெகிழி (பிளாஸ்டிக்) கோபுரமாகக் குவிந்து கிடக்கும் அவலத்தை மிக அழகாகக் கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர். "பூஜையறை' என்கிற தலைப்பில் அந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதை இதுதான்:
 
 பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
 ஸ்டிக்கர் கோலங்கள்
 டப்பர்வேர் டப்பாவிலிருந்து
 ஊற்றுகிறார்கள்
 விளக்குக்கு எண்ணெய்
 ஒலிநாடா ஒப்புவிக்கும்
 கந்தர் சஷ்டிக் கவசம்
 கடவுள் ஏன் கல்லானான்
 கேட்டான் கண்ணதாசன்
 கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்
 பார்த்துக் கொண்டிருக்கிறான்
 பழநி பாரதி!
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com