"பெண் மாட்சி ' எழுதிய பெண் கவிஞர்!

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர் சுந்தரத்தம்மையார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
"பெண் மாட்சி ' எழுதிய பெண் கவிஞர்!

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர் சுந்தரத்தம்மையார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் என்று பல பெயர்கள் கொண்ட சுவாமிகளின் இயற்பெயர் சங்கரலிங்கம்; அவர்தம் துணைவியாரே சுந்தரத்தம்மையார். இவர் விழுப்புரம் வட்டாரம் திருவாமாத்தூர் என்ற ஊரிலுள்ள கெளமார மடத்து ஆலய வளாகத்தில் தம் கணவருடன் சேர்ந்தே வாழ்ந்தார். 1898-இல் தம் கணவர் இறந்த பின்னும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
 தண்டபாணி சுவாமிகளது வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த காலத்து, சுவாமிகளையே ஆசிரியராகவும், ஞான குருவாகவும் கொண்டிருந்தார். சுவாமிகளிடம் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டார். கணவரின் கவிதைகளைப் படித்து உணர்ந்தார். தான் தளர்ந்திருந்த நிலையிலும் மடத்திற்கு வந்தோருக்கு அன்பு கனிய உணவூட்டினார். அம்மையார்தம் பிள்ளை சந்தப்புலவர் தி.மு. செந்தில்நாயக சுவாமிகளும், பெயரர் தி.செ. முருகதாசப்பிள்ளையும் கவிஞர்களே. தமிழ்ப் பற்றுள்ள நல்ல குடும்பம். தந்தை, தாய், பிள்ளைகள், பெயரர் எனக் குடும்பமே தமிழ்க் கவிஞராக அமைந்த பெருமை உடையது.
 அம்மையார் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள், "பெண் மாட்சி' என்ற நூல் மட்டுமே கிடைத்துள்ளது. பெண்ணின் மாண்புகளை எடுத்துரைக்கிறது இந்நூல். கணவரின் அன்பு ஆணைப்படியே இந்நூலை அம்மையார் இயற்றியுள்ளார். கணவரோடும், உடன் இருந்த புலவர்களோடும் நூலின் சிறப்பு எடுத்துரைக்கப்பெற்ற பின்னரே "பெண்மாட்சி' நூலாயிற்று என்பர். இந்நூலுக்குச் சாத்துக்கவி பாடியோர் தண்டபாணி சுவாமிகள், அவர் மாணாக்கர்கள், இராமானந்த சுவாமி போன்றோர் ஆவர். சரசுவதி தேவியோடும், ஒளவையாரோடும் அம்மையாரை ஒப்பிட்டுப் புகழாரம் சூட்டியுள்ளனர்.
 
 "..... ஞாலமுற்றும்
 மாதாவென்றென்றும் வழுத்து புகழ் ஒளவையைப்போல்
 மீதாம் புலமை பெற்றோர் வேறுண்டோ -ஏதாலோ
 அன்னவளும் பெண்கட்கு அடக்கம்பகர்ந்த தன்றித்
 துன்னும் அகங்கார முறச்சொல்ல வில்லை -மன்னும்'
 
 பெண் மாட்சி நூலின் கருத்துகள்:
 இந்நூல் 82 பாடல்களைக் கொண்டு கலிவெண்பா யாப்பில் எழுதப் பெற்றுள்ளது. ஆணைவிடப் பெண்ணே மேம்பட்டவள் எனும் கருத்துகள் 164 அடிகளிலும் வலியுறுத்தப் பெறுகின்றன. பெண்ணினத்தை இழிவுபடுத்தும் சிலருக்காகப் பெண்ணுயர்வைக் காட்ட எழுதப்பெற்ற நூலாகவும் இதைக் கொள்ளலாம். நூலின் முற்பகுதி ஆண்களின் லீலைகளும் பிற்பகுதியாகப் பெண்ணின் பெருமைகளும் விளக்கப் பெறுகின்றன.
 
 பெண்டிர் மேல் ஆடவர் நிகழ்த்திய கொடுமைகள்:
 பெண்களின் பெருமைகளைச் சற்றும் உணராதவர் ஏதேதோ பேசுகின்றனர். பெண்ணைப் பழித்துப் பெண் அங்குசம் என்று இழித்துக் கூறுகின்றனர். இராவணன் அன்று சீதையை இரந்து செய்தான் பொல்லாங்கு. துரியோதனாதியர் பெண் என்றும் பாராமல் பாஞ்சாலியின் துகிலை உரித்துப் பெண்ணுக்குத் தீங்கிழைத்தனர்.
 
 பெண்டிர் பெருமை:
 ஆண்கள் பெண்களுக்குச் செய்த மேற்கண்ட தீமைகள் யாவற்றையும் தொகுத்து ஒரு பெண் மாலையாக அதாவது கவிதையாக வடித்துத் தந்ததுண்டோ? உலகம் மாதா எனப் போற்றும் ஒளவையைப் போலப் புலமை பெற்றோர் வேறுண்டோ? அவளும் பெண்களுக்கு அடக்கம் கூறினாரேயன்றி அகங்காரம் உறச் சொல்லவில்லை. வியாசர் மகனாம் சுகர் போன்றோர் அறிவில் சிறந்த பொறியடக்கம் பெற்ற ஆண் ஞானிகள் பலர் மெல்லியலாளரைத் தாயாய் நினைத்து வாழ்கின்றனர். கவிஞர்கள் சிலர் பெண்களைப் பொல்லாதவர் என்றே பழித்து உரைக்கின்றனர். இவர்களைப் போல, பெண்களும் ஆடவரைப் பழித்துரைக்கின்றனர்.
 ஆண், பெண் பிறப்பிற்கு ஈடு இணை இல்லை; இருவரும் சமம் என்று கூறுவதே உண்மை. அநுசூயை, நளாயினி, வாசுகி, கெளரி, மங்கையர்க்கரசி, இரத்தினாவதி, திரெளபதி, புனிதவதி முதலானோர் மேம்பட்ட பெண்களில் குறிப்பிடத்தக்கோர் என்கிறார் சுந்தரத்தம்மையார். புராணப் பெண்களின் பெருமைகளையும், தெய்வப் பெண்களின் சிறப்புகளையும், எடுத்து விளக்குகிறது பெண் மாட்சி நூல். போற்றுதலுக்குரிய பெண்களின் வரலாறுகளைப் பெருமையுடன் எடுத்துக்கூறி முடிவுரைக்கிறது இந்நூல்.
 
 சுந்தரத்தம்மையைப் பற்றிய சில செய்திகள்:
 1. புராணக் கதைகளைத் தெளிவாகத் தெரிந்துணர்ந்தவர். 2. ஆண்கள் பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து கவிதை வடித்தவர். 3. ஆண்களின் இழிவையும் பெண்ணின் உயர்வையும் இலக்கியச் சான்றுகளைக் காட்டி வலியுறுத்தும் ஆற்றல் மிக்கவர். 4. கணவனிடம் கற்றுப் பெற்ற கவித்துவத்தை நன்றாகப் பயன்படுத்தியவர். 5. தமிழ்ப் பெண்ணினத்துக்கே தம்மை அர்ப்பணித்துள்ள மாண்புடைய கவிஞர்.
 
 - முனைவர் தாயம்மாள் அறவாணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com