வெண்டளையும் வெண்பாவும் -2

வெண்பாவின் இலக்கணங்களுள் தலையானது வெண்டளை அமைதல். வெண்பாக்கள் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை
வெண்டளையும் வெண்பாவும் -2

கவி பாடலாம் வாங்க -14

வெண்பாவின் இலக்கணங்களுள் தலையானது வெண்டளை அமைதல். வெண்பாக்கள் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா என்று ஏழு வகை. கலி வெண்பாவைக் கலிப்பாவில் சேர்த்து இலக்கணம் கூறும்; ஆனால், இப்போதுள்ள கலிவெண்பாக்கள் யாவும் வெண்பா இலக்கணம் அமைந்தனவாக இருக்கின்றன. இவற்றை அடியளவைக் கொண்டு ஐந்து பிரிவாக வகுக்கலாம்.
1. இரண்டடி வெண்பா - குறள் வெண்பா.
2. மூன்றடி வெண்பா - சிந்தியல் வெண்பாக்கள்.
3. நான்கடி வெண்பா - நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்.
4. நான்கு முதல் பன்னிரண்டடி வரையில் - பஃறொடை வெண்பா.
5. பதின்மூன்று முதல் எத்தனை அடியானாலும் -கலிவெண்பா.
இந்த வெண்பா வகைகள் எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில இலக்கணங்கள் உண்டு. அவை வருமாறு:
1. ஓரசைச் சீர், ஈரசைச் சீர், காய்ச்சீர் ஆகியவைகளே வரும்.
2. வெண்டளையே வரும்.
3. ஈற்றடி முச்சீரடியாகவும் மற்றவை யாவும் நாற்சீரடியாகவும் இருக்கும்.
4. ஈற்றுச் சீர் நாள், மலர் காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றை உடையதாக இருக்கும்.
இந்த வெண்பாக்களில் மிகுதியாக வழக்கில் உள்ளது, நேரிசை வெண்பா. அதைப்பற்றி முதலில் பார்த்துவிட்டு மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம்.
நேரிசை வெண்பா:
நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை எளிதிலே நினைவில் வைத்துக்கொள்ள நாடோடியாக ஒரு வாய்பாடு வழங்குகிறது. ""நாற்சீர் - முச்சீர் -நடுவே தனிச்சீர்'' என்பது அது.
நேரிசை வெண்பாக்களில் இரண்டாவது அடியில் உள்ள மூன்றாம் சீருக்குப் பின் ஒரு கோட்டையிட்டுப் பிறகு நான்காஞ் சீரை எழுதுவது வழக்கம். கோட்டுக்கு அப்புறம் இருப்பதைத் தனிச்சீர் என்று சொல்வர். இண்டாவதடியின் நாலாம் சீர் அது. அது அந்த அடியின் ஓர் உறுப்பாக இருந்தாலும் அந்த அடியின் முதற்சீருக்கும் அதற்கும் ஒரே எதுகை அமைத்திருப்பதனால், அதை தனிச் சீர் என்றார்கள்.

"ஆழ வமுக்கி முகக்கினு மாழ்கடனீர்
நாழி முவாது நானாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினுந் தந்தம்
விதியின் பயனே பயன்''

இந்தப் பாட்டில் இரண்டாவதடியின் முதற்சீர் நாழி; நான்காவது சீர் அதனோடு எதுகையில் ஒன்றிய தோழி; தோழி என்பது தனிச்சீர்.
இந்த வெண்பாவில் முதல் இரண்டடியும் ஓரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன. இதுவும் நேரிசை வெண்பாவின் இலக்கணங்களில் ஒன்று. நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்.
மேலே காட்டிய பாட்டில் வெண்டளை பிறழாமல் வந்திருப்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.
1. ஆழ - தேமா; அமுக்கி - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
2. அமுக்கி - புளிமா; முகக்கினு -கருவிளம் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
3. முகக்கினு -கருவிளம்; ஆழ்கடனீர் - கூவிளங்காய் = விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை.
4. ஆழ்கடனீர் - கூவிளங்காய்; நாழி- தேமா = காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
5. நாழி - தேமா; முகவாது - புளிமாங்காய் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
6. முகவாது - புளிமாங்காய்; நானாழி - தேமாங்காய் = காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
7. நானாழி - தேமாங்காய்; தோழி - தேமா = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
8. தோழி - தேமா; நிதியுங் - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
9. நிதியுங் - புளிமா; கணவனு -கருவிளம் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
10. கணவனு -கருவிளம்; நேர்படினுந் - கூவிளங்காய் = விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை.
11. நேர்படினுந் - கூவிளங்காய்; தந்தம் - தேமா = காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
12. தந்தம் - தேமா; விதியின் - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
13. விதியின் - புளிமா; பயனே - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
14. பயனே - புளிமா; பயன் -மலர் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com