இந்த வார கலாரசிகன்

கடந்த வியாழக்கிழமை நெல்லையில், தினமணியின் "மகளிர் மணி' சார்பில் நடந்த "மகளிர் மணி பெண் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவிற்கு நெல்லையிலுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் படைப்பாளிகளும்
இந்த வார கலாரசிகன்

கடந்த வியாழக்கிழமை நெல்லையில், தினமணியின் "மகளிர் மணி' சார்பில் நடந்த "மகளிர் மணி பெண் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவிற்கு நெல்லையிலுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சி முடிந்தபோது கவிஞர் இரா. நாறும்பூநாதன், நண்பர் எம்.எம்.தீன் உள்ளிட்டோர் வெளிக்கொணர்ந்திருக்கும் "காணிநிலம்' என்கிற காலாண்டு இலக்கிய இதழை எனக்குத் தந்தார்கள். தனிச்சுற்றுக்கு மட்டுமாக நெல்லையிலுள்ள பத்து பன்னிரண்டு படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து, மாதம்தோறும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பங்களிப்பாக நல்கி, கூட்டுமுயற்சியில் வெளிக்கொணரும் காலாண்டு மாத இதழ்தான் "காணிநிலம்'. அந்தப் பத்திரிகையின் இலக்கு என்ன என்பதைத் தலைப்பிலேயே அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது குடியிருக்கும் காணிநிலமல்ல, பயிர் வளர்க்கும் காணி
நிலமல்ல, இவர்கள் கொண்டுவந்திருப்பது சொல் விளையும் காணிநிலம். 
முதல் இதழைப் புரட்டினால் அதில் முதலில் காணப்படுவது எம்.எம். தீன் எழுதிய "அபரஞ்சி' என்கிற சிறுகதை. மொழி
பெயர்ப்புக் கதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள் என்று ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் அத்தனை அம்சங்களுடனும் ஓர் அற்புதமான இலக்கியக் காலாண்டிதழ் நெல்லைத் தரணியிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதைப் பார்த்தபோது, எனக்கு ஒரே பரவசம்.
வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவதற்கு முன்பு நான் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். ஒரு சில நிமிடங்களில், அவர்களே என்னைத் தேடி நெல்லை அலுவலகம் வந்துவிட்டார்கள். அந்த இலக்கிய ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அது ஏற்படுத்திய தாக்கம் சொல்லி மாளாது.
தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் இதுபோன்ற சிற்றிதழ்கள்தாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கிற என்னுடைய நீண்ட நாள் கருத்துக்கு வலு சேர்க்கிறது "காணி நிலம்'. இதற்கு ஆயுள் சந்தா வெறும் 1000 ரூபாய்தான். நான் ஆயுள் சந்தாதாரராகிவிட்டேன், நீங்கள்?


ஒருவகையில் பார்த்தால் சர்க்கரை நோய் என்பது ஒரு வரம் என்றுதான் தோன்றுகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் நலனில் அக்கறை என்று மிகவும் கவனமாக இருக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆண்டுக்கு இருமுறை இல்லாவிட்டாலும் ஒரு முறையாவது முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்கிறோம். இது எனது தனிப்பட்ட அனுபவம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அருணா சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மருத்துவரும் எனது சர்க்கரை நோய் ஆலோசகருமான ஏ.பன்னீர் செல்வத்திடம் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். அங்கே வரவேற்பறையில் என்னை எதிர்கொண்டது ஜெயமோகன் எழுதிய "அறம்' சிறுகதைத் தொகுப்பு. ஸ்ரீகலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18ஆவது ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த மருத்துவர் பன்னீர் செல்வத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த புத்தகம் அது. ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கதைகள், ஜெயமோகன் இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்தவை. அவ்வப்போது அதில் ஒன்றிரண்டு கதைகளை நான் வாசித்திருக்கிறேனே தவிர, இந்தப் புத்தகத் தொகுப்பை முழுமையாகப் படிக்க எனக்கு இதுவரை நேரம் வாய்க்கவில்லை.
மருத்துவர் பன்னீர் செல்வத்திடம் விரும்பிக் கேட்டு "அறம்' புத்தகத்தை இரவல் வாங்கினேன். நெல்லைக்கு "மகளிர் மணி' விழாவுக்கு கன்னியாகுமரி விரைவு வண்டியில் சென்றுவந்ததில் உபயோகமாக நான் செலவழித்த பொழுது, இந்தப் புத்கத்தைப் படித்து முடித்தது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளில் பல உண்மை ஆளுமைகள் வலம் வருகிறார்கள். அவர்கள் குறித்த குறிப்பை ஜெயமோகன் இறுதியில் இணைத்திருக்கிறார்.
ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கும் ஆளுமைகளில் திருவட்டாறு சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மறைந்த ஜெ.ஹேமசந்திரன், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன், பூமேடை ராமையா ஆகிய மூவரும் எனக்குப் பரிச்சயமானவர்கள்.
நான் சாவியில் உதவி ஆசிரியராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஹேமசந்திரனுடன் நெருக்கமாகவே பழகி உரையாடியிருக்கிறேன். இன்றுவரை அவரைப் போல கொள்கைப்பிடிப்புள்ள, அப்பழுக்கில்லாத சட்டப்பேரவை உறுப்பினரை நான் பார்த்ததில்லை. ஹேமசந்திரனின் குணாதிசயங்களை, ஜெயமோகன் விவரித்திருப்பது என் நினைவுகளை மீண்டும் எண்பதுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. கோமல் சுவாமிநாதனுடன் கவிஞர் இளையபாரதி, நண்பர் குடந்தை கீதப்பிரியன் ஆகியோர் போல நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. 
ஆனால், அவரது ரசிகனாக எட்டி நின்று பார்த்து வியந்தவன்.
நாகர்கோவில் பூமேடை ராமையாவைப் பற்றி குமரி மாவட்டத்துக்கு வெளியே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு தனிமனிதப் போராளி. ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பது போல வெள்ளைநிற கதர் காந்தி தொப்பி, கதர் ஜிப்பா வேட்டியுடன் ஜிப்பாவின் பையில் நான்கைந்து 
ஃபவுண்டன் பேனாக்கள், குறிப்பேடு, கண்ணாடிக் கூடு என்று பவனிவரும் பூமேடை ராமையா, ஜெயமோகனைப் போலவே என்னையும் கவர்ந்த ஆளுமை. 
அவர் பெரிய தலைவரல்ல, அரசியல் இயக்கம் சார்ந்தவர் அல்ல, தனிமனித இயக்கம். அதுதான் பூமேடை ராமையாவின் சிறப்பு. 
ஒரு துருப்பிடித்த சைக்கிள், சைக்கிளின் பின்பக்கம் அகலமான ஒரு மேஜை. சைக்கிளின் முன்பக்கம் வலது கைப்பிடியில் ஒரு பழங்கால ஒலிபெருக்கி, இடது கைப்பிடியில் ஒரு கேஸ் லைட். இதைத் தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டு போட்டு நிறுத்தி, நாகர்கோவில் நகராட்சி மைதானத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பூமேடை ராமையா கூட்டம் போடுவார். அந்தக் கூட்டத்துக்கு மக்களை அழைக்க அவரே போஸ்டர் ஒட்டுவார். ஒலிபெருக்கி முன்னால் நின்று "வந்தே மாதரம் வந்தே மாதரம்' என்று பலமுறை உரக்கக் கூவுவார். அதற்குப் பிறகு நாட்டு நடப்பு குறித்து தனது கருத்துகளை ஆணித்தரமாகப் பேசுவார். அவரிடம் கேள்வி கேட்டால் பதில் கூறுவார்.
பல ஆண்டுகள் தொடர்ந்து இதுபோல அந்தத் தனிமனித இயக்கம் நாகர்கோவிலில் நடைபெற்று வந்தது. பலரும் அவரைக் கோமாளியாகப் பார்த்தார்கள். ஆனால், ஐந்தாறு முறை மட்டுமே அவரது கூட்டத்திற்கு 20 வயதில் சென்றிருந்த எனது மனதில் சமுதாயச் சிந்தனையை விதைத்ததில் பூமேடை ராமையாவுக்கு நிச்சயமாகப்
பங்குண்டு. பூமேடை ராமையா குறித்து ஜெயமோகன் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு நான் நெகிழ்ந்து போய் கண்மூடி அமர்ந்திருந்தேன். 
அடிக்கடி என் மனது பூமேடை ராமையா என்னவானார் என்று கேட்டவண்ணம் இருந்தது. அதற்கான பதிலை ஜெயமோகன் அளித்ததற்கு அவருக்கு நன்றி! 


அரியலூர் அரசுக் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் கவிஞர் ப. செல்வகுமார். இவரது கட்செவி அஞ்சல் பதிவு இந்தக் கவிதை. கவிதையின் தலைப்பு படித்துக் கிழித்ததல்ல, "கிழித்துப் படித்தது'!

படிப்பை நிறுத்தி
பொட்டலம் மடிக்கப் போன
மளிகைக் கடையில்
என் கைக்கு வந்தது
என் பெயர் எழுதப்பட்ட
போன வருடத்து புத்தகம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com