இந்த வார கலாரசிகன்

தனக்கு ஏதாவது அரிய புத்தகம் கிடைத்தால் உடனடியாக அதை எனக்கு அனுப்பித் தந்துவிடுவார் முல்லைப் பதிப்பகம் மு. பழனியப்பன்.
இந்த வார கலாரசிகன்

தனக்கு ஏதாவது அரிய புத்தகம் கிடைத்தால் உடனடியாக அதை எனக்கு அனுப்பித் தந்துவிடுவார் முல்லைப் பதிப்பகம் மு. பழனியப்பன். அவர் தந்தையார் முல்லை முத்தையா, பூக்களிலிருந்து வண்டு தேன் சேகரிப்பது போல பல அரிய தகவல்களையும் படைப்புகளையும் தேடிப் பிடித்து பதிப்பித்தவர். தமிழ்ப் பதிப்புலக முன்னோடி.
முல்லை முத்தையா மகாகவி பாரதியார் குறித்த பல்வேறு பதிவுகளையும், பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் தொகுத்து "பாரதியார் விருந்து' என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வீர. சிவராமனால் காரைக்குடியில் செல்வி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை சமீபத்தில் அனுப்பி இருந்தார் முல்லை பதிப்பகம் மு. பழனியப்பன். 
பாரதியாரின் சமகாலத் தோழர் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய "சுப்பிரமணிய பாரதியார் வரலாறு' , "பாரதிதாசன் கண்ட பாரதியார்', பாரதியார் குறித்த திரு.வி.க.வின் கட்டுரை என்று அற்புதமான பல கட்டுரைகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகத்தில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சில தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.
பாரதியாரின் நகைச்சுவை, பாரதியார் எழுதிய கடிதங்கள், பாரதியாரின் சமர்ப்பணங்களும் முகவுரைகளும், அவருடைய பதிப்புரைகள், முகவுரைகள், முன்னுரைகள் என்று 192 பக்கங்களில் அவரது அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கிய இந்தப் பொக்கிஷத்தை எனக்கு அனுப்பித்தந்திருக்கும் முல்லைப் பதிப்பகம் மு. பழனியப்பனுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அந்தப் புத்தகத்தில் நான் மிகவும் ரசித்த பாரதியாரின் மூன்று கட்டுரைகள் - "தேச பக்தி', "கவிதை எப்படி இருக்க வேண்டும்?', "வசனநடை எப்படி அமைய வேண்டும்?'

சங்கர் என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால், "சவுக்கு சங்கர்' என்று சொன்னால் காவல்துறை, அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள், ஏன் நீதித்துறையினர் கூட சற்று இறுக்கமாகி விடுவார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு சாதாரண ஊழியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், அத்துறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொணர எடுத்த முயற்சிகள், ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட சில நண்பர்களையும், எண்ணிலடங்காத அதிகாரவர்க்க எதிரிகளையும் அவருக்குத் தேடித் தந்தன.
இப்போது "சவுக்கு டாட் காம்' என்கிற இணையதளத்தை நடத்திவரும் சங்கர், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கியது, அதன் தொடர்பாகக் கைது செய்யப்பட்டது, பணியிடை நீக்கம், காவல்
துறையின் சித்திரவதை, தொடர்ந்து நடைபெற்ற வழக்குகள் என்று சங்கர் அடுத்தடுத்து எதிர்கொண்ட அத்தனை பிரச்னைகளுக்கும் சாட்சியாக நானும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறேன். 
2008-இல் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த எஸ்.கே. உபாத்தியாய் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. அதனால், அவர் ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு உள்ளாக நேர்ந்தது. அவரின் உதவியாளராக இருந்த சங்கர், தமிழக அரசியலில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் குறித்தும், முறைகேடுகள் குறித்தும் தெரிந்து வைத்திருந்ததில் வியப்பொன்றுமில்லை. 
உளவுத் துறையின் சட்டவிரோத ஒட்டுக்கேட்பு குறித்து தினமணியின் சார்பில் தகவல்கள் சேகரித்து வந்தோம். அப்போது ஒரு நாள் "ரமேஷ்' என்ற போலிப் பெயரைப் பயன்படுத்தி என்னிடம் தொடர்பு கொண்டார் சங்கர். அவர் உளவுத்துறையில் பணியாற்றுபவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்டல் எப்படி நடக்கிறது, யார் இதைச் செய்கிறார்கள், என்ன காரணத்துக்காகச் செய்கிறார்கள், இதில் முதல்வரின் பங்கு என்ன உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் "ஒட்டுக் கேட்பில் தனியார் நிறுவனம்' என்ற செய்திக் கட்டுரை தினமணியின் முதல் பக்கத்தில் வெளியானபோது, அது மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது.
சங்கர், ஊழலுக்கும் தவறுகளுக்கும் எதிராக நடத்திய, நடத்தும் போராட்டம் அசாதாரணமானது. இதற்காக அவர் காவல் துறையிடம் வாங்கியிருக்கும் அடிகளும் உதைகளும் சொல்லி மாளாது. மிருகத்தனமான தாக்குதல்களுக்கு அவர் ஆளானார் என்பது மட்டுமல்லாமல், காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சி.பி.சி.ஐ.டி வரை ஒரு பெரிய பலம்மிக்க அதிகாரவர்க்கத்தை எதிர்த்து ஒரு சாமானியன் நடத்திய போராட்டம் சங்கருடையது. ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த அசாதாரணமான போரை, சங்கரைத் தவிர இன்னொரு இளைஞரால் துணிவுடன் எதிர்கொண்டு இன்றுவரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
"ஊழல் - உளவு -அரசியல்' என்கிற புத்தகம் அதிகாரவர்க்கத்துடனான சவுக்கு சங்கரின் போராட்டத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறது. "கதையை விஞ்சும் நிஜம், கற்பனைக்கும் எட்டாத சாகசம், உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்' என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மையிலும் உண்மை.
"பாம்பு சட்டை உரிப்பது போல ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து மன்றாடி, நல்ல பதவிகளை வாங்கிக்கொண்டு, தாங்களும் கொள்ளையடித்து, தங்களைப் போன்ற சக கொள்ளைக்கார அதிகாரிகளையும் காப்பாற்றி, கூட்டுக்கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சில அதிகாரிகள். இந்த நிலை மாறவே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்' என்று சவுக்கு சங்கர் தனது "ஊழல் - உளவு -அரசியல்' புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு சம்பவமும் உறுதிப்படுத்துகிறது. 
இந்தப் புத்தகத்தின் கடைசி மூன்று பத்திகளை ஊழலற்ற நல்லாட்சியிலும், ஜனநாயகத்திலும் பற்றுக்கொண்டவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். இதை முழுவதும் படித்து முடித்தபோது, சங்கருக்கு அவ்வப்போது துணை நின்றது எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. அதற்காகப் பெருமைப்படுகிறேன். 

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த "தமிழ் நேசன்' முஸ்தபாவைச் சந்திக்க கவிக்கோ மன்றம் சென்றிருந்தபோது, கவிஞர் மு.மேத்தா வந்திருந்தார். அவருடைய "கனவுகளின் கையெழுத்து' என்கிற புத்தகத்தைத் தந்தார். அதில், ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சத்தை அள்ளியது. அதிலிருந்த "அடையாளங்கள்' என்கிற கவிதை இது:

ஒரு காலத்தில் கோயில்கள் பின்னொரு காலத்தில் திரைப்படக் கொட்டகைகள்
இப்போதெல்லாம் அரசாங்க மதுக் கடைகள் -

ஊருக்குப் புதிதாய் வந்தவர்களுக்கு வழிசொல்லும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com